என்ன செய்தார் சைதை துரைசாமி – 524
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத்திட்டம் மாணவர்கள் மற்றும் எழைகள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் கொண்டுவந்ததை மேயர் சைதை துரைசாமி நேரில் பார்த்து மகிந்தவர். புரட்சித்தலைவர் வழியில், ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகவே அம்மா உணவகத்தைக் கொண்டுவந்தார். . ஏழை, எளிய மக்களுக்கு என்று தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பள்ளி மாணவர்கள் வந்து கூட்டம் கூட்டமாக சாப்பிடுவதைக் கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போனார் மேயர் சைதை துரைசாமி.
அம்மா உணவகத்தில் சாப்பிட்ட மாணவர்களிடம் மனம்விட்டுப் பேசினார். ‘’காலையில் அம்மாவுக்கு உணவு தயார் செய்வதற்கு சிரமமாக இருக்கும். அதனால் ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவிடுவார். சுடச்சுட சாம்பார், இட்லி சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டு செல்கிறோம். முன்பு பெரும்பாலான நேரத்தில் பசியும், பட்டினியுமாகத்தான் பள்ளிக்குச் சென்றோம். அம்மா உணவகத்தால் எங்களுக்கும் சந்தோஷம், அம்மாவுக்கும் மகிழ்ச்சி’’ என்று சொன்னார்கள்.
அதேபோன்று போட்டித் தேர்வுகளுக்குப் பங்கேற்கும் மாணவர்களும் தொடர்ந்து உணவு சாப்பிடுவது அறிந்து மகிழ்ந்தார். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வரும் மாணவர்கள், இங்கேயே தங்கிப் படிக்கும் மாணவர்கள், வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் என்று பல்வேறு மாணவர்களையும் சந்தித்தார்.
எல்லோரும் ஒரே குரலில், ‘’இத்தனை மலிவான விலையில், இத்தனை ஆரோக்கியமான சுத்தமான உணவு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை. கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து எப்படியாவது அரசு வேலை பெற்றுவிட வேண்டுமென்ற கனவுடன் படித்துவருகிறோம். எங்களுடைய செலவை அம்மா உணவகம் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது. இந்த திட்டத்தைக் கொண்டுவந்த மேடம் ஜெயலலிதாவுக்கும், உங்களுக்கும் நன்றி’’ என்று மனப்பூர்வமாகத் தெரிவித்தார்கள்.
அம்மா உணவகத்தின் சேவை இப்படி பரந்துவிரிந்து பல்வேறு தரப்பினருக்கும் கிடைப்பதை எண்ணி மேயர் சைதை துரைசாமி ரொம்பவே மகிழ்ந்து போனார். இப்படிப்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் இரவு உணவை உடனடியாக அறிமுகம் செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.
- நாளை பார்க்கலாம்.
