எம்.பி. தேர்தலில் ஜெ. வெற்றிக்கு அம்மா உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 527

அம்மா உணவகம் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தது மட்டுமின்றி முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் கை கொடுத்தது என்று மேயர் சைதை துரைசாமியிடம் உளவுத்துறை அதிகாரி மனம் திறந்து பேசினார்.

‘’அம்மா உணவகம் சென்னையில் தொடங்கப்பட்டதும் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. ஏழை மக்களிடம் பசி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. குறைவான செலவில் ஆரோக்கியமான உணவு சுடச்சுட கிடைக்கிறது என்று தமிழகம் முழுக்க மக்கள் பேசினார்கள். இது, புரட்சித்தலைவர் ரேஷன் கடைகள் திறந்த நேரத்தில் ஏழைகள் மகிழ்ச்சி அடைந்ததற்கு இணையானது என்று சொல்லலாம்.

அம்மா உணவகம் திறக்கப்படாத இடங்களிலும் ஏழைகளிடம் அமோக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த அம்மா உணவகம் திட்டம்தான்,  2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு இமாலய வெற்றியைக் கொடுத்தது. எம்.ஜி.ஆர். காலத்தில்கூட, சென்னையில் அதிமுக முழு வெற்றி அடைந்தது இல்லை. ஆனால், அம்மா உணவகம் அதை சாதித்துக் காட்டியது.  

அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளில்  37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்ட மத்திய சென்னையில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தோல்வி அடையச் செய்தார். வட சென்னை, தென் சென்னையிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பணிகுழுவில் நீங்களும் இடம் பெற்றிருந்தீர்கள். நீங்கள் அப்போது ஜெயலலிதாவிடம், ‘அம்மா உணவகம் மக்களிடம் மிகச்சிறந்த அளவில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறை சென்னையை நாம் முழுமையாக கைப்பற்றிவிடுவோம்’ என்று உத்தரவாதம் கொடுத்திருந்தீர்கள். அப்படியே வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றி தான் முதல்வருக்கு அம்மா உணவகத்தின் மீது மிகுந்த நம்பிக்கையைக் கொண்டு வந்தது. அதனால்தான்  தைரியமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் தைரியம் கொடுத்தது..’’ என்றார்.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment