டிரை பண்ணுங்க ப்ளீஸ்
கின்னஸ் சாதனைகளுக்கு உலகில் பஞ்சமே கிடையாது. இந்த சாதனையைத்தான் செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. புதுமையாக எதைச் செய்தாலுமே சாதனைதான். இப்படி எதையாவது செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கப் பலரும் தவம் கிடக்கிறார்கள். அப்படி, சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் சிலர் இதோ….
* இரும்புக் கரம் கொண்டவர் எனப் பெயர் பெற்ற கேரளத்தைச் சேர்ந்த அபிஷ் பி டொமினிக், 2017ம் ஆண்டில் ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்களைத் தனது கைகளால் உடைத்துத் தூள் கிளப்பினார். இவருடைய சாதனையைப் பார்த்து கின்னஸ் அமைப்பு மிரண்டுபோனது. கடந்த 2 ஆண்டுகளாக டொமினிக்கின் இந்த சாதனையை முறியடிக்க ஒருவரும் வரவில்லை.
* சென்னையைச் சேர்ந்த பி.கே.ஆறுமுகம் மெர்சலாக சைக்கிளை ஒட்டிக்கொண்டே 1,010 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இவரைப் போலவே மும்பையைச் சேர்ந்த நிகில், ‘காஸ்டர் போர்’டில் சென்றுகொண்டே 151 ரூபிக் கியூப்களைச் சேர்த்துள்ளார். இரண்டும் கின்னஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
* டெல்லியைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞரான விகாஷ் குமார், ஒரு நிமிடத்தில் பம்பரம்போல் சுழன்று 120 கதக் நடன அசைவுகளைச் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
* குஜராத்தைச் சேர்ந்த 16 வயதான நீலான்ஷி, தனது தலைமுடியை ஐந்து அடிக்கு வளர்த்துள்ளார். அதனால், உலகிலேயே நீளமான கூந்தல் உள்ள பெண் என்ற சிறப்பை கின்னஸ் அமைப்பு நீலான்ஷிக்குக் கொடுத்துள்ளது. இவர், முடியை விரித்துவிட்டால் ஏழு அங்குலத்துக்கு விரிந்துகிடக்குமாம்.
* ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி அலெக்சா லான்பர், தன்னுடைய செல்ல நாய்களை கோங்கா நடனம் ஆடவைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
* தைபேவில் ஒரே நேரத்தில் 1,213 பேர் பியூட்டி பார்லரில் பயன்படுத்துகிற ஃபேசியல் முகமூடிகளைத் தனது முகத்தில் தொடந்து 10 நிமிடம் வைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
* எட்டிபர் எல்செவ் என்பவர், எந்தவொரு பசையையும் பயன்படுத்தாமல் தனது உடம்பு முழுதும் 50 உலோக ஸ்பூன்களை அப்படியே தொங்கவிட்டு சாதனை படைத்துள்ளார்.
* இஸபெல் வர்லி என்ற 69 வயதான பெண், தனது உடம்பில் 98.75 சதவிகம் அளவுக்கு டாட்டூ போட்டு சாதனை படைத்திருக்கிறார். இவரோடு சேர்ந்து அடுத்த வருடமே இவருடைய கணவரும் டாட்டூ போட்டுக்கொண்டார். இவர்தான் உலகத்திலேயே தன் உடம்பில் அதிகமான டாட்டூ போட்டுக்கிட்ட சீனியர் ஆண் பிள்ளையாவார்.
* ஜெர்மனியைச் சேர்ந்த ரோல்ப் பகலொஜ் என்பவர், தன் முகத்தில் 453 இடங்களில் துளையிட்டு வகைவகையாக ஜிமிக்கி மாதிரி மாட்டிக்கொண்டார். இவர் செய்த இந்த விஷயம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.
* மிகவும் பிரபலமான ஒரு தீம் பார்க் ரைட், ரோலர் கோஸ்டர். இதில், ஆகஸ்ட் 8, 2010ல் ஒரேநேரத்தில் முழு நிர்வாணமாய் 102 பேர் கலந்துகொண்டனர். இதை, கின்னஸ் குழு சாதனையாக அங்கீகரித்துவிட்டது.
* கலாமண்டலம் ஹேமலதா எனும் பரதநாட்டிய கலைஞர், 123 மணிநேரம் 15 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
* ஆந்திராவைச் சேர்ந்த ஜெயசிம்ஹா எனும் நபர், ஒரு நிமிடத்தில் 2,436 நபர்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
* குர்ஷித் ஹுசைன் என்பவர் தனது மூக்கைப் பயன்படுத்தி கணினியின் கீபோர்டில் 103 எழுத்துகள் கொண்ட வாக்கியத்தை ஒருசில நொடிகளில் டைப் செய்து சாதனை புரிந்துள்ளார். இது மிகவும் வினோதமான சாதனையாக உலக அளவில் கருதப்படுகிறது.
* வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா தம்பதியின் திருமணம்தான் உலகில் மிக ஆடம்பரமாகவும், அதிக பொருட்செலவிலும் நடைபெற்ற திருமணம் என்ற கின்னஸ் சாதனையைச் செய்துள்ளது.
* இந்தியாவைச் சேர்ந்த பெடரல் அறிவியல் இன்ஸ்டிட்யூட் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக இணைந்து, ஒரே நிமிடத்தில் அதிக செல்ஃபி எடுத்து உலக கின்னஸ் சாதனை படைத்தனர்.
* ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராம் சிங் என்பவர், 32 ஆண்டுகளாக 14 அடி நீளமுள்ள மீசையை வளர்த்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
* உலகிலேயே பெரிய டர்பனுடன் இருப்பவர் எனும் சாதனை செய்தவர், அவதார் சிங் மௌனி. இவரது டர்பனின் எடை நூறு பவுண்ட் மற்றும் நீளம் 645 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஹங்கேரியில் 6,400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸில் இடம்பெற்றனர்.
* அமெரிக்காவைச் சேர்ந்த 80 வயது எர்னெஸ்டைன் ஷெப்பர்ட் என்பவர், உலகின் வயதான உடல்கட்டு வீராங்கனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.