5 வருட தண்டனைக்கு வாய்ப்பு
புஷ்பான்னா புயல் என்று வசூல் வேட்டையாடிவரும் அல்லு அர்ஜூனாவை திடீரென போலீஸ் கைது செய்து, இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானதை முன்னிட்டு, டிசம்பர் 4ம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. சந்தியா திரையரங்கிற்கு தில்சுக்நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி (35), மகன் ஸ்ரீதேஜா (9), மகள் சான்விகா ஆகியோருடன் வந்திருந்தார்.
அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்ததையடுத்து ரசிகர்கள் முண்டியடித்து ஓடி வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தியதில் பலரும் கலைந்து ஓடினார்கள். இந்த நெரிசலில் ரேவதியும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். கூட்டத்தினர் மேலே விழுந்ததில் இருவரும் மயக்கமடைந்தனர். பின்னர் ரேவதியையும் ஸ்ரீதேஜாவையும் அருகிலுள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ரேவதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக நிலையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் ஆகியோர் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105,118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் அல்லு அர்ஜூனை சிக்கடப்பள்ளி காவல் உதவி ஆணையர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீஸ் குழு கைது செய்தது.
அதோடு சந்தியா தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சந்தீப், தியேட்டர் மேலாளர் எம்.நாகராஜூ, பால்கனி பொறுப்பாளர் ஜி.விஜய சந்தர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி சந்தியா தியேட்டர் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அல்லு அர்ஜுன், தான் தியேட்டருக்கு வருவதாக காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜூனா மீது எந்த தவறும் இல்லை என்று ரசிகர்களும் திரை பிரபலங்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆளும் காங்கிரஸ் கூட்டணியினர் தெரிவித்தாலும், திட்டமிட்டு அவமானப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கிறார்கள்.
இந்த வழக்கில் அல்லு அர்ஜூன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு தண்டனைக்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். அதாவது, அலட்சியத்தின் மூலம் ஒரு நபரின் மரணத்திற்குக் காரணமானால் கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லை என்றாலும் தீவிர குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, அல்லு அர்ஜூனா மீது பதியப்பட்ட சட்டப் பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார்கள்.
அதேநேரம் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி என்பவரின் கணவர் பாஸ்கர், “படம் பார்ப்பதற்காக என் குடும்பத்தை சந்தியா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். அல்லு அர்ஜுன் அங்கு வந்தது அவருடைய தவறு அல்ல. தேவைப்பட்டால் வழக்கைத் திரும்பப் பெற நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
“ஒரு பிரபல நடிகரை ஆடை மாற்றுவதற்குக்கூட நேரம் கொடுக்காமல் அவரை படுக்கையறையில் இருந்து நேராக அழைத்துச் செல்வது ஒரு கொடூரமான செயல்” என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வீச, புஷ்பா வாழ்க்கையில் புயல் அடிக்கிறது.