என்ன செய்தார் சைதை துரைசாமி – 323
மேயர் சைதை துரைசாமி இயற்கை ஆர்வலராகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு குரல் கொடுப்பவராக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். ஆகவே, இயற்கை நலம் எனும் அடிப்படையில் குப்பை மேலாண்மையை ஒரு சமூகப் பிரச்னையாகவும் பார்த்தார். எனவே, இது குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.
பொதுவாக மக்கும் பொருட்களால் மிகப்பெரிய இயற்கை சீரழிவு இல்லை என்றாலும், அவை மக்காத பொருட்களுடன் கலந்து வீசுகையில் மிகப்பெரும் ஆபத்தாக மாறுகிறது. மக்கக்கூடியவை பெரும்பாலும் உணவுப் பொருட்களாக இருக்கின்றன. அதோடு காகிதம், துணி, தாவரக் குப்பைகள் எல்லாம் சிதைவடைந்து, சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்துவதில்லை. இவற்றை சரியாகப் பயன்படுத்தி உரமாக மாற்றப்படும்போது மண் வளமாகிறது. காகிதம், அட்டை, செய்தித்தாள்களை மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். இறுதியில் வாழ்க்கை சுழற்சி முடிந்து மண்ணோடு மண்ணாக மடிகிறது.
நுண்ணுயிரிகளால் நீண்ட காலம் எடுத்து சிதைக்கக்கூடிய பொருட்கள் எல்லாமே மக்காத குப்பைகள். பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், பாலித்தீன் பைகள், செராமிக்ஸ் பொருட்கள் போன்றவை மனித இனத்துக்கு மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் மற்றும் மண் வளத்தையும் பாதிக்கிறது. காற்று மாசு அடைவது மட்டுமில்லாமல் நுரையீரல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதனை கடலில் கொட்டுவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
எனவே மக்களுக்கு கழிவு மேலாண்மையில் முக்கியப் பங்கு இருக்கின்றது என்பதை உணரவைக்கும் வகையில் பல்வேறு கருத்தரங்கம், நிகழ்ச்சிகள், ஊர்வலங்களை மேயர் சைதை துரைசாமி நடத்தினார். குப்பை பிரிப்புக்கு வீட்டுக்கு வீடு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு கொண்டுவந்தார். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று குப்பைகளை மக்கள் முறையாகப் பிரித்துக் கொடுத்தால், அது சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.