வழி காட்டுகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன்
தமிழகத்தின் புகழ் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் ஜெயம் கண்ணன். செயற்கை கருவூட்டல் முறையில் ஆயிரக்கணக்கான குழந்தையில்லாத தம்பதியர் வாழ்க்கையில் ஒளியேற்றிய மருத்துவ சாதனையாளர். எழுபது வயதைக் கடந்த நிலையிலும் அதிகாலை தொடங்கி இரவு வரை நோயாளிகள் சந்திப்பு, மருத்துவ ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உலகளாவிய மருத்துவ மாநாடுகள் என்று சுறுசுறுப்பாகச் சுழல்கிறார். ராசியான குடும்ப மருத்துவர் என்று புகழப்படும் டாக்டர் ஜெயம் கண்ணனை சென்னை, கோடம்பாக்கம் கர்ப்பரட்சாம்பிகை கருத்தரித்தல் மருத்துவ மையத்தில் சந்தித்துப் பேசினோம்.
உங்கள் குடும்பத்தின் பின்புலம் பற்றிக் கூறுங்கள்..?
சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அக்கா, இரு தங்கை, ஒரு தம்பி என என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அப்பா நாராயணசாமி, ஒன்பதாம் வகுப்பும் அம்மா பர்வதம் ஏழாம் வகுப்பும் படித்தவர்கள். தஞ்சாவூரில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து கொண்டிருந்த அப்பாவுக்கு அதில் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், பருத்தி, பஞ்சு, நூல் மாசு காரணமாக காச நோயில் விழுந்து கடைசி காலம் வரையிலும் நோயோடு போராடினார்.
நான் சிறுவயதில் நன்றாகப் படிப்பேன். பி.யூ.சி.யில் மாநில அளவிலும் எம்.டி.யில் அகில இந்திய அளவிலும் ரேங்க் எடுத்துள்ளேன். எனக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், காச நோயுடன் போராடிய அப்பாவையும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்த அம்மாவையும் விட்டுச்செல்ல மனம் வரவில்லை. குடும்பத்தினர் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியபோதும் நான் மறுத்துவிட்டேன். அந்த அளவுக்கு குடும்பத்துடன் ஒட்டுதலுடன் இருந்தேன். என் அப்பாவை அவரது 88 வயது வரையிலும் கண் போன்று பாதுகாத்தேன்.
பொதுப்பணித் துறையில் பணியாற்றிய என் அக்காவே என்னை மருத்துவம் படிக்க வைத்தார். நான் 14 ஆண்டு காலம் ஸ்காலர்ஷிப் அரசு உதவித்தொகை பெற்றிருந்தாலும் இதர செலவுகள் எல்லாம் அவர்தான் பார்த்துக் கொண்டார். அதனால், எனது குடும்பத்தைப் பாதுகாப்பது, படிப்பைத் தொடர்வது மற்றும் மருத்துவ சேவை என மூன்று வழியிலும் சீராகப் பயணித்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
உங்கள் மருத்துவப் பயணம் எங்கு தொடங்கியது..? மறக்க முடியாத அனுபவம்..?
நான் முதலில் நீடாமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாண்டுகள் பணி புரிந்தேன். பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் டியூட்டர் ஆக 14 ஆண்டுகள் பிறகு திருச்சி மருத்துவமனையில் 10 ஆண்டுகள் என்று பணிபுரிந்து பிறகு 1990க்குப் பிறகு சொந்தமாக மருத்துவமனை தொடங்கி சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறேன்.
நான் வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது நாள் நீடாமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் பிரசவ கேஸ் பார்த்தேன். அந்த 17.01.1970 என்ற தேதி இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. பிரசவத்திற்கு ஆயுதம் போடும் அவசியம் ஏற்பட்டது. ஆயுதம் போட்ட நேரத்தில் கர்ப்பப்பை கிழிந்து, அதற்கும் தையல் போட்டேன். வேலைக்குச் சேர்ந்த புதிது என்பதால் எனக்கு அப்போது ரொம்பவே பயமாக இருந்தது. பின்னர் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று சோதித்துப் பார்த்தபோது, நான் சரியாகச் செய்திருப்பது தெரியவந்தது மகிழ்ச்சி கொடுத்தது. அந்த பிரசவத்தில் பிறந்த பையன் இப்போது நன்றாக வளர்ந்து ஜெர்மனியில் இருக்கிறார்.

ஊரகப்பகுதிகளில் ஜமீன் வீடுகளுக்குச் சென்று காத்திருந்து பிரசவம் பார்த்தது, கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கு சிறு அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்தது என்று ஏராளமான அனுபவங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான சில சம்பவங்களைத் தொகுத்து, ‘மருத்துவ சவால்கள்’ என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறேன்.
சமீபத்தில் ஒரு பிரசவச் சிக்கலுக்காக டாக்டர் குழு என்னிடம் ஆலோசனை கேட்ட நேரத்தில் நான் விமானத்தில் துபாயில் இருந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அந்த பிரசவம் பார்க்கப்பட்டது.
எனக்கு ராயல் காலேஜ் ஆப் லண்டன் சார்பில் விருது அறிவித்தார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கும் விருது அது. அதற்கு என்னைப் பற்றி குறிப்புகள் அனுப்பச் சொன்னார்கள். நான் எனது கிராமப்புற மருத்துவ அனுபவங்களையும் வித்தியாசமான, சிக்கலான மருத்துவப் போராட்டங்களை எழுதி அனுப்பினேன். அவற்றைப் படித்து பிரமித்தவர்கள், அந்த விருதை எனக்கு சிறப்பு விருதாக மாற்றிக் கொடுத்தார்கள். 90 ஆண்டு வரலாற்றுப் பெருமை வாய்ந்த அந்த அமைப்பு 2018ம் ஆண்டு எனக்காக அப்படியொரு சிறப்பு விருது வழங்கியது. எனக்கு முன்னரும் பின்னரும் யாருக்கும் அப்படியொரு விருது வழங்கப்படவில்லை எனக்கு ரொம்பவே பெருமை.
கிராமப் பகுதியில் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..?
கம்யூனிஸ்ட் கட்சியினர் நிரம்பியிருந்த நீடாமங்கலம் பகுதியில் வேலை செய்தபோது கட்டைவண்டியில் 10 கிலோமீட்டர் 15 கிலோமீட்டர் வரை பயணம் செய்து வீட்டிற்குப் போய் பிரசவம் பார்த்திருக்கிறேன். பிரசவம் பார்த்தால் வெற்றிலை பாக்கு பழம் வைத்து ஐந்து ரூபாய் கொடுப்பார்கள். ஒவ்வொரு அமாவாசை நாளன்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வந்து, அந்த பகுதியில் நடைபெற்ற பிரசவங்கள் குறித்து கேட்டறிந்து, 200 ரூபாய் பணம் கொடுத்துச்செல்வார். அப்போது இரவு, பகல் பார்க்காமல் பல கிராமங்களுக்குப் பயணம் சென்றபோதும் எனக்கு எந்த பயமும் வந்ததில்லை. ஏனென்றால் மக்கள் அத்தனை நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனால், இப்போது மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவது வருத்தம் தருகிறது.
இப்போது கர்ப்பம் தரிப்பதன் சதவீதம் குறைந்து வருகிறதே ஏன் ?
கடந்த 2010 வரை, திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் குழந்தைப் பேறின்மை சதவீதம் 8% பேருக்குத் தான் இருந்தது. இந்தப் பிரச்சினை இப்போது உலக அளவில் 17.5% என்று இரு மடங்காக உயர்ந்துள்ளது. பத்து பேர் திருமணம் சென்றால் இரண்டு ஆண்டுகளில் 8 பேருக்குத் தான் குழந்தை பிறக்கிறது. இரண்டு பேருக்குப் பிறப்பதில்லை. இதற்கு இயற்கைச் சூழ்நிலையும் வாழ்க்கைச் சூழலும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகம் பேர் மன அழுத்தத்துடன் வாழ்வதால் உடலில் உள்ள சுரப்பிகள் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்தச் சுரப்பிகள் சரியாகச் சுரக்காததால் குழந்தைப் பேறில் பிரச்சினை வருகிறது.
ஆண்களுக்கான உயிரணுவின் அளவும் வீரியமும் இப்போது குறைந்து வருகிறது. அதே போல் பெண்களுக்கும் ஹார்மோன் சுரப்பிகள் சுற்றுச்சூழல் தாக்கத்தால் சரியாகச் சுரப்பதில்லை. பொதுவாக ஒப்பிட்டுப் பார்த்தால் ஐந்தில் ஒருவருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. ஆனால், இப்போது சிறப்பான மருத்துவ முறைகள் வந்துள்ளன. எனவே, குழந்தைப் பேறுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்காமல் முன்கூட்டியே சிகிச்சைக்கு வந்துவிடுகிறார்கள். இருவரும் வேலைக்குப் போவதால் அவர்கள் சொல்வது நியாயமாகப்படுகிறது. 1990ல் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் 12% தான் வெற்றி பெறும். 88% தோல்வியடையும். 2010ல் இந்த சதவீதம் 35 லிருந்து 40% ஆனது. 2024ல் 75% வரை வெற்றி பெறுகிறது. இதனால் குழந்தைப் பேறு விஷயத்தில் நம்பிக்கை தர முடிகிறது.
புகை, மதுவால் குழந்தைப் பேறுக்குப் பாதிப்பு வருமா?
நான் 1985 – 90 ஆண்டுகளில் தென்னூரில் ரஹ்மானியாபுரம் என்ற திருச்சி நகரத்தின் முக்கியமான இடத்தில் ஆய்வு செய்தேன். 1200 பீடித் தொழிலாளர் குடும்பங்களை ஆய்வு செய்தபோது பலருக்கும் டிபி, கேன்சர், குழந்தைப்பேறின்மை போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருந்தது. வைரல் இன்பெக்ஷன் வந்தால் அவர்களைக் காப்பாற்ற முடியாது. பிழைக்கமாட்டார்கள். அதற்குக் காரணம் புகையிலை தான். இப்போது நூறு பேர் கூட அந்தத் தொழிலில் இல்லை. எனவே புகை பழக்கம் நிச்சயம் கெடுதல் தருகிறது. அதே போல் மதுப்பழக்கமும் நல்லதல்ல. கடையில் வாங்கி ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் பழக்கம் அதிகரிப்பதும் ஆரோக்கியம் இல்லை. ஆனால், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டில் சமைக்க முடியவில்லை என்கிறார்கள். இந்த வகையில் குழந்தையின்மைக்கு வாழ்க்கைச் சூழல், சுற்றுச்சூழல், மன அழுத்தம் தரும் பணிச்சூழல் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வந்தது எப்படி?
என் குடும்பம் பெரிது என்றால், என் கணவரின் குடும்பம் அதை விட ரொம்பவும் பெரியது. எனவே, ஐம்பது வயது வரை குடும்ப பாரமே அதிகம். அதன் பிறகே ஆன்மீகத்தில் நாட்டம் வந்தது. நான் தனியாக மருத்துவமனை தொடங்கியபோது திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை ஆலயத்திற்குச் சென்றேன். அப்போது அது அவ்வளவு பிரபலமாக இல்லை .வருமானமும் இல்லை. கோயிலை பூட்டிவிட்டு குருக்கள் வீட்டில் இருந்தார், அந்த நிலையில் நான் சென்றேன். அந்தக் கோயிலை விளம்பரப்படுத்தி மேம்படுத்துவதற்கான சில பணிகளைச் செய்தேன். நான் முதலில் தங்கத்தில் தொட்டில் செய்து வைத்தேன். இப்போது அந்தக் கோயிலுக்கு கூட்டம் அலை மோதுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே 200 தொட்டில்கள் வருகின்றன. பக்கத்தில் உள்ள 38 ஊர்களும் அந்த கோயில் மூலம் வளம் பெற்று விட்டன.
நான் சாய்பாபா பக்தை என்பதால் வாராவாரம் வியாழக்கிழமை பாபா கோவிலுக்குச் சென்று விடுவேன். ‘நலம் தரும் திருமந்திரம்’ என்றொரு நூல் எழுதினேன். அது மிகவும் பிரபலமாகி எனக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் மன அமைதிக்கு ஆன்மீகமே என் வழியாக இருக்கிறது. புகழ் வாய்ந்த 52 சக்தி பீடங்களில் 49க்குச் சென்று வந்திருக்கின்றேன். மீதமுள்ள ஒன்று ஆப்கானிஸ்தானிலும் இரண்டு பாகிஸ்தானிலும் இருப்பதால் நான் அங்கே செல்வதற்கு வாய்ப்பு அமையவில்லை.
மருத்துவம் தவிர்த்து உங்கள் விருப்பம் என்ன..?
சிறுவயதில் இருந்து குடும்பப் பொறுப்பும் கடமையும் என் மீது சுமத்தப்பட்டன. அதை நான் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டேன். நான் படித்தது வேலைக்குச் சென்றது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டது என்று 30 வயது வரை கடந்தது. அதற்குப் பிறகு கணவர், பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று குடும்பப் பொறுப்புகள் வந்தன. எப்போதும் நான் பொறுப்புகளைப் புறந்தள்ளுவதில்லை.
எனது மகன், மகள், மருமகன், மருமகள் அனைவரும் டாக்டர்கள்தான். இருந்தாலும் வீட்டில் பாட்டி இருப்பார்களே என்று வரும் பேரப் பிள்ளைகளை நான் ஏமாற்றுவதில்லை. அவர்களுக்காக என் நேரத்தை செலவழிக்கிறேன். அன்பு காட்டுகிறேன் பாசம் காட்டுகிறேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மருத்துவ மாநாடுகளுக்காக பல ஊர்களுக்குச் செல்கிறேன். இப்போது மாதம் 3 மாநாடுகள், சந்திப்புகளில் கலந்துகொள்கிறேன். நான் 55 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கும் அகில இந்திய ஹவுஸ் சர்ஜன் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கிறேன். அந்த சொசைட்டியின் தலைவராக வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். குடும்பத்திற்கு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதாலே நான் அதை மறுத்து விட்டேன்.

மற்றபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூத்து என்று எந்த கேளிக்கையிலும் எனக்கு ஆர்வம் இல்லை. காரணம் அதற்கு நேரமில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி நேரம் செலவழித்துப் பொழுதைப் போக்குவதில் எனக்கு விருப்பமில்லை. அதே நேரம் எந்தக் கலை மீதும் எனக்கு வெறுப்புமில்லை. என்டர்டைன்மென்ட், கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது.
உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?
எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தான் காரணம். தினமும் ஏதாவது புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருப்பதே எனது சுறுசுறுப்பிற்குக் காரணம். ஓய்வு எடுப்பது எனக்குப் பிடிக்காது. எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் இயங்குவதற்குத் தயாரான உடல்நிலையும் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனநிலையும் இருக்கிறது. உடல் நலத்தைப் போலவே மனநலமும் முக்கியம். என்னைப் பொறுத்தவரை எந்த இழப்புகளையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை வர வேண்டும். நடந்ததை எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. மறப்போம் மன்னிப்போம் என்கிற ரீதியில் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.
உங்கள் உணவுப் பழக்கம் எப்படி?
நான் உணவுப்பிரியை கிடையாது. எளிமையான உணவுகள் அதுவும் இரண்டு வேளை மட்டுமே நான் சாப்பிடுவேன். காலையில் 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் ஒரு முறையும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இரண்டாவது உணவையும் எடுத்துக் கொள்வேன். மதிய உணவு பற்றி நான் கவலைப்படுவதில்லை. காபி, பால் இடையில் சாப்பிடுவேன். அவ்வளவுதான். எப்போது உறங்கினாலும் காலை ஆறு மணிக்குள் எழுந்து விடுவேன்.
சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு 1200லிருந்து 1500 கலோரிகள் போதும். அதிக உடல் உழைப்பு செய்பவர்களுக்குத் தான் 2000 கலோரிகள் தேவைப்படும். எனக்கு 1000 கலோரிகள் போதும். கீரை, காய்கறிகளை உணவு போல அதிகம் எடுத்துக் கொண்டு சாதத்தைத் தொட்டுக் கொள்வது போல் கொஞ்சமாக எடுத்துக் கொள்வேன். சாதம் 20% என்றால் காய்கறிகள் 80% எடுத்துக்கொள்வேன். இரவு 2 சப்பாத்தி அல்லது 2 தோசை அல்லது 3 இட்லி சாப்பிடுவேன். அதோடு என் வேலைகளை நானே செய்துகொள்வேன். என் அறையைக் கூட்டிப் பெருக்குவது முதல் கழிப்பறை சுத்தம் வரை நானே செய்வேன். இப்படி என்னளவில் எனக்குத் தேவையான உடல் உழைப்பைச் செலவிட்டு என் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்கிறேன்.
- அருள்செல்வன்.












