புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார் வழக்கறிஞர் நிலா
இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடுவது மற்றும் எடுப்பதற்கான நடைமுறையை எளிமையாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் மாற்றுவதற்காக மத்திய அரசு புதிய வாடகை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் நாடு முழுவதும் வாடகைச் சந்தையை முறைப்படுத்த ஒரு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் 2025 படி கட்டாயப் பதிவு செய்வது முக்கியமாகிறது. முன்பு வீடு வாடகைக்கு விட்டால், சாதாரண ஸ்டாம்ப் பேப்பரில் எழுதினாலே போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது ஒப்பந்தத்தை இரண்டு மாதத்திற்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லையென்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
டிஜிட்டல் ஸ்டாம்பிங் ஆதார் அடிப்படையில் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு முறை அனைத்து வாடகை ஒப்பந்தங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி கையால் எழுதிய போலி ஒப்பந்தங்களோ, தவறான கையெழுத்துக்களோ இருக்க முடியாது.. இப்போது அனைத்தும் ஆன்லைனில் பதிவாகும். எந்த நேரத்திலும் உங்கள் ஒப்பந்தத்தை ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.
வீட்டு வாடகைக்கு இரண்டு மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்க முடியாது. வணிக கட்டிடங்களுக்கு ஆறு மாத வாடகையே அட்வான்ஸாக வாங்க முடியும். சென்னை போன்ற நகரங்களில் 10 மாத வாடகையை முன்பணமாகக் கேட்பது சட்டப்படி குற்றம்.
ஒரு வருடம் முடிவடைந்த பிறகே வாடகையை உயர்த்த முடியும், அதுவும் 90 நாட்கள் முன்னதாக எழுத்துப்பூர்வ அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளரே பழுதுகள் பார்க்க வேண்டும். 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் குடியிருப்பவர் அதை செலவு செய்து வாடகையில் கழிக்கலாம்.
தனியுரிமைக்கான பாதுகாப்பு வீட்டை சரிபார்க்க அல்லது உள்ளே நுழைய வீட்டு உரிமையாளர் குறைந்தபட்சம் 24 மணி நேரம் முன்னதாக எழுத்துப்பூர்வ அறிவிப்பு அளிக்க வேண்டும்.
வெளியேற்றுவதற்கு சட்ட பாதுகாப்பு வாடகை தீர்ப்பாயத்தின் உத்தரவின்றி, சட்டப்படி குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல், வெளியேற்ற முடியாது. உரிமையாளரின் தனிப்பட்ட கோரிக்கையால் மட்டும் வெளியேற்ற முடியாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற சட்டப்படியான காரணங்கள் இருந்தால் மட்டுமே, தீர்ப்பாயத்தின் அனுமதியுடன் வெளியேற்ற முடியும்.
வாடகை தகராறு, வெளியேற்றும் வழக்குகள் உட்பட, வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.
வரி விதிகள் உயர்ந்த வாடகைக்கு அதாவது மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் என்றால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால் சிறிய மற்றும் நடுத்தர உரிமையாளர்களுக்கு டிடிஎஸ் விலக்கு வரம்பு 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுதி ஆன்லைனில் டிஜிட்டல் ஸ்டாம்ப் செய்துகொள்ள முடியும். இந்த புதிய சட்டம் இரு தரப்பினருக்கும் நியாயம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது என்று சொல்லப்பட்டாலும் வீட்டு உரிமையாளரின் உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்பதே உண்மை.












