தி.மு.க. சர்வே ரிப்போர்ட்
2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. ஒவ்வொரு நபரும் ஒரு கணக்கு கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 80 % இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைத்து ஆட்சியைப் பிடிப்பார் என்று கணக்குப் போடுகிறார்கள் விஜய் ரசிகர்கள். தி.மு.க. எடுத்திருக்கும் சர்வேயை சுட்டிக்காட்டி பேசுகிறார்கள்.
இது குறித்துப் பேசும் விஜய் ரசிகர்கள், ‘’தி.மு.க.வினர் எடுத்த சர்வே படி விஜய் கட்சிக்கு 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வாக்கு 50% – 60% கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 30 முதல் 50 வயது வரையிலானவர்கள் வாக்கு கிட்டத்தட்ட 30# கிடைக்கும் என்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வாக்கு 10 – 20% கிடைக்கும் என்று கணித்திருக்கிறார்கள். தி.மு.க.வினர் சர்வே இப்படி இருக்கிறது என்றால், உண்மை கண்டிப்பாக இதை விட அதிகமாகவே இருக்கும்.
ஏனென்றால் எம்ஜியாருக்கு பிறகு கரிஷ்மா அதிகம் கொண்ட நடிகராக விஜய் இருக்கிறார். எல்லோராலும் விரும்பப்படும் முகம். இது மட்டுமின்றி. இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் 60 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதிகாரபூர்வமாக தலைமை அறிவிக்க வேண்டும். 60 லட்சம் என்பது தோராயமாக 13%. பெரும்பாலும் இளைஞர்கள். இந்த 60 லட்சம் பேரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை தவெகக்கு ஓட்டு போட மாற்றினால் கூட மொத்தம் 1.20 கோடி வாக்குகள் கிடைக்கும்.
இது தவிர விஜய்க்கு பெண்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் அதை வெளியில் சொல்ல மாட்டார்கள், வாக்காக மாற்றுவார்கள். அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கு பெண்கள் வாக்கு கிடைத்தது. பெண்கள் வாக்குகள் மற்றும் கட்சியில் இணைய இருக்கும் முக்கிய வி.ஐ.பி.கள், விஜய் கட்சியுடன் சேரப்போகும் கூட்டணிகள் என்று கணக்குப் போட்டால் அவை எப்படியும் 1 கோடி வாக்குகள் கிடைக்கும். எனவே தமிழகத்தில் எளிதாக 2 கோடி வாக்குகள் வாங்க முடியும். இப்போது, தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்களில் 4.34 கோடி பேர் தான் 2024 தேர்தலில் ஓட்டு போட்டார்கள்.
இதில் விஜய் கட்சிக்கு மட்டும் 2 கோடி வாக்குகள் நிச்சயம். மீதமுள்ள வாக்குகளை தி.மு.க. உள்ளீட்ட எதிர்க்கட்சிகள் பிரித்துக்கொள்ளும் என்பதால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்துவிடுவார். கொஞ்சம் பிசகினாலும் எதிர்க்கட்சி நிச்சயம்‘’ என்று அடித்துச் சொல்கிறார்கள்.
தி.மு.க.வினரிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘’இன்னமும் மூன்று மணி நேர சினிமா போன்று கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கிறார் விஜய். அதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. சீமானுக்கு அடுத்த இடம் பிடிப்பார்’’ என்கிறார்கள்.