– மூளை தமனியில் ரத்தக்கசிவு
பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு தருவதாக அமையும். நடிகர் அஜித்குமாருக்கு நடந்ததாக சொல்லப்படும் மூளை தமனியில் ஏற்படும் ரத்தக்கசிவுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது..?
ரத்தக்குழாய்களில், தமனிகளில் ஏற்படும் வீக்கத்திற்கு தமனிக்கொப்புளம் என்று பெயர். இதை ஆங்கிலத்தில் அனிருசம் aneurysms என்று அழைப்பார்கள். மூளைக்குள் இருக்கும் தமனிகளில் சில நேரங்களில் இது போன்ற வீக்கங்கள் ஏற்படுவதுண்டு. இதற்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், எந்நேரம் வேண்டுமானாலும் இது வெடித்து அதனால் மூளைக்கும் ரத்தக்கசிவு ஏற்படலாம்.
சிறிதளவு மட்டுமே ரத்தம் கசிந்தால் சிகிச்சை அளித்து அந்த நபரை காப்பாற்ற முடியும். அதிக அளவு ரத்தம் கசிந்தால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவே இது போன்ற வீக்கம் இருப்பதை கண்டு பிடித்தவுடன் அறுவை சிகிச்சை செய்து கிளிப் ஒன்றை அங்கு பொறுத்தி வீக்கம் வெடிக்காமல் செய்யவேண்டும்.
சில நேரங்களில் மூளையின் உள்ளே, எளிதில் அறுவை சிகிச்சை செய்ய முடியாத இடங்களில் வீக்கங்கள் இருந்தால் ரத்தக் குழாய் வழியாகவே சுருள்கள் (coil) மற்றும் குருதி வழி திருப்பி (flow diverter) ஆகியவை மூலம் சிகிச்சை அளிக்கலாம். இவை அனைத்தும் மிகவும் நுணுக்கமான, நவீன கருவிகள் மற்றும் மிகுந்த திறன் தேவைப்படும் சிகிச்சை முறைகள்.
பொதுவாகவே மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தேவைப்படும் படிப்பு, பயிற்சி, திறமை ஆகியவை அதிகம் என்பதனால் தான், பல மருத்துமனைகளில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை.
இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்ய 1. அறுவை அரங்கில் நுண்ணோக்கி (Operating Microscope) 2. நுண் அறுவை சிகிச்சை செய்யும் கருவிகள் (Micro surgery instruments) 3. மூளை அறுவை சிகிச்சை நிபுணர் (Neurosurgeon) 4. மயக்கவியல் நிபுணர் (Anaesthesiologist) 5. அறுவை அரங்க செவிலியர் (Theatre Nurse) 6. அறுவை அரங்க நுட்பனர் (OT Technician) தேவைப்படுகிறார்கள் என்பதால் மூளை அறுவை சிகிச்சை செய்யப்படும் பல மருத்துவமனைகளில் கூட தமனிக்கொப்புளத்திற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை.
பல நாடுகளில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இந்தியாவிலும் கூட சில மாநிலங்களில் செய்யப்படாத காரணத்தாலே, நிறைய நோயாளிகள் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
இதே போல் மூளையின் உட்கழுத்துத் தமனியில் (Internal Carotid Artery) ஏற்பட்ட தமனி கொப்புளத்திற்கு (aneurysm) சில நாட்கள் முன்னர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சென்னையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. நடிகருக்கு ஏற்பட்டது போன்ற் பிரச்சனைகளுக்கு, தமிழக அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி, மதுரை, கோவை என தமிழகத்தில் 25க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற நவீன உயர்தர அறுவை சிகிச்சைகள் தினந்தோறும் நடந்து கொண்டு தான் உள்ளன பல நாடுகளில் இந்த அறுவை சிகிச்சையை செய்யும் வசதி இல்லை சில நாடுகளில் ஓரிரண்டு நிலையங்களில் மட்டுமே இதை செய்ய முடியும் அதுவும் அமெரிக்கவில் இதற்கு கட்டணம் $138,000 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழகத்தில் தனது வீட்டில் இருந்து 50 கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட தமனிக்கொப்புளத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி உள்ளதும் அதுவும் இலவசமாக செய்து கொள்ளலாம் என்பதும் தான் தமிழக மருத்துவத்துறையின் சிறப்பு. சில நாடுகளில் இந்த அறுவை சிகிச்சைக்கு காலம் மிகவும் அதிகம் எனப்தால் தமனிக்கொப்புளம் வெடித்து விடுகிறது.
சமீபத்தில் மூளையில் உள்ள பெருமூளை நடுத்தமனியில் (MCA Middle Cerebral Artery) ஏற்பட்ட சிக்கலான முக்கூறு (Trifurcation) தமனிக்கொப்புளத்தால் (Aneurysm) பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசு மருத்துவத்துறையில் இருக்கும் நவீன கருவிகள், மற்றும் மருத்துவர்களில் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஆழத்தையும் அகலத்தையும் பறைசாற்றுகிறது.
- டாக்டர் ஆன்டோ புருனோ