தலைக்குள் சுற்றும் உலகம்.

ஏ.டி.சி.முருகேசன், எம்.பி.டி. ஓம் பிசியோதெரபி சிகிச்சை மையம், விருதுநகர்.

தலைக்குள் உலகமே சுற்றுவதுபோல் உணர வைக்கும் வெர்டிகோ நோய்க்கு பிசியோதெரபி சிகிச்சை போதுமா..?

காலை எழுந்து உட்கார்ந்தால் தலை சுற்றும். கண்களைத் திறந்தால் அறை சுற்றுவதுபோல் தெரியும். படுக்கையில் ஒருபுறம் திரும்பினால் தலைசுற்றும்.  திடீரென்று எழுந்து நின்றால் தடுமாற்றம் ஏற்படும். நடக்கும்போது நிலை தடுமாறும்.

இத்தகைய அனுபவங்களைச் சந்திப்பவர்கள், தங்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது அல்லது மூளையில் பிரச்சினை என்று பயப்படுகிறார்கள்.

இப்படி தலைசுற்றல் ஏற்படுவதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்ல முடியாது. காதின் உட்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் முதல் மூளையின் நரம்பியல் பாதிப்புகள் வரை பல காரணங்களால் தலைசுற்றல் ஏற்படலாம். குறிப்பாக, வெர்டிகோ (Vertigo) எனப்படும் சுழற்சி உணர்வுக்குக் காரணமாக இருக்கும் சில நோய்களுக்கு மருந்துகளைவிடச் சிறப்பான பலன் அளிக்கக்கூடிய பிசியோதெரபி சிகிச்சைகள் இருக்கின்றன.

வெர்டிகோ என்றால் என்ன?

வெர்டிகோ என்பது ஒரு தனிப்பட்ட நோயின் பெயர் அல்ல. இது ஒரு அறிகுறி. நாம் நகராமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் சுழல்வதுபோலவோ அல்லது நாமே சுற்றுவதுபோலவோ உணர்வதுதான் வெர்டிகோ.

சிலருக்கு அறையே சுற்றுவதுபோல் இருக்கும். படுக்கையில் ஒருபுறம் திரும்பும்போது தலைசுற்றும். தலையை மேலே தூக்கும்போது அல்லது கீழே குனியும்போது சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படும். நடக்கும்போது நிலை தடுமாறும். வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும். கண்கள் தானாகவே வேகமாக அசைவதுபோல் இருக்கும். இது சில விநாடிகள் மட்டுமே நீடிக்கலாம். சிலருக்கு மணிக்கணக்காகவும், சிலருக்கு நாட்கள் அல்லது வாரங்கள் வரை தொடரவும் செய்யலாம்.

காது காரணமா..?

நமது காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் உள்காதில் அமைந்துள்ள வெஸ்டிபுலர் சிஸ்டம் நமது உடல் சமநிலையைப் பராமரிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதில் மூன்று அரைவட்டக் குழாய்களாக ஓட்டோலித் உறுப்புகள் எனப்படும் யூட்ரிக்கிள் (Utricle), சாக்கியூல் (Saccule) ஆகிய அமைப்புகள் தலையை எந்தத் திசையில் திருப்புகிறோம் என்பதை உணர்கின்றன. உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை மூளைக்குத் தெரிவிக்கின்றன. நகரும்போது கண்கள் நிலையாக இருக்க உதவுகின்றன. நடக்கும்போது உடலின் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.

இந்தத் தகவல்களை உள்காது, கண்கள், தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள உணர்வு நரம்புகள் மூளைக்குத் தொடர்ந்து அனுப்புகின்றன. மூளை இந்தத் தகவல்களை ஒருங்கிணைத்து உடலைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்தச் செயல்பாட்டில் எங்காவது பாதிப்பு ஏற்பட்டால் தலைசுற்றல், தடுமாற்றம், வாந்தி போன்றவை ஏற்படலாம்.

காதில் சிறிய படிகங்கள் இடம் மாறுவது தலைசுற்றலுக்கான பொதுவான காரணங்களில் ஒன்று. உள்காதில் மிகச்சிறிய கால்சியம் கார்பனேட் படிகங்கள் இயல்பாக அமைந்துள்ளன. இவை யூட்ரிக்கிள் பகுதியில் இருக்க வேண்டும். இந்தப் படிகங்கள் தங்களுடைய இடத்திலிருந்து நகர்ந்து, உள்காதில் உள்ள அரைவட்டக் குழாய்களுக்குள் சென்றுவிடுகின்றன.

இதனால் தலையைத் திருப்பும்போது அல்லது படுக்கையில் ஒருபுறம் சாயும்போது, இந்தப் படிகங்கள் நகர்ந்து உள்காதில் உள்ள திரவத்தின் இயக்கத்தைப் பாதிக்கின்றன. மூளைக்கு தவறான சமநிலைத் தகவல்கள் செல்கின்றன. இதன் விளைவாக அறை சுற்றுவதுபோன்ற தலைசுற்றல் ஏற்படுகிறது.

படுக்கையில் ஒருபுறம் திரும்பும்போது தலைசுற்றுதல், படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றுதல், தலையைப் பின்னால் சாய்க்கும்போது தலைசுற்றுதல், கீழே குனிந்து பொருட்களை எடுக்கும்போது தலைசுற்றுதல் ஏற்படும். சில விநாடிகள் முதல் ஒரு நிமிடத்திற்குள் தலைசுற்றல் குறையலாம். ஆனால் மீண்டும் அதே நிலையில் தலையை அசைத்தால் தலைசுற்றல் வரலாம்.

வயது அதிகரித்தல், தலையில் அடிபடுதல், சில உள்காது நோய்கள் போன்றவை இதற்குக் காரணமாகலாம். பலருக்கு வெளிப்படையான காரணமே கண்டறியப்படுவதில்லை.

உள்காதிலிருந்து மூளைக்குச் சமநிலைத் தகவல்களை எடுத்துச் செல்லும் வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படும் அழற்சி பொதுவாக வைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இதனால் திடீரெனக் கடுமையான தலைசுற்றல், வாந்தி, குமட்டல், நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படலாம்

உள்காதில் உள்ள சமநிலை அமைப்பும் கேட்கும் திறனுக்குத் தொடர்புடைய அமைப்பு பாதிக்கப்படும் நிலையில் காது கேட்கும் திறன் குறைதல், காதில் இரைச்சல், வாந்தி. உடல் சமநிலை இழத்தல் ஏற்படலாம். திடீரென ஒரு காதில் கேட்கும் திறன் குறைந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை அவசியம்.

அதேபோல் உள்காதில் உள்ள திரவத்தின் அளவு மற்றும் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் மீண்டும் மீண்டும் கடுமையான தலைசுற்றல், காதில் இரைச்சல், காதில் அடைப்பு அல்லது அழுத்தம் போன்ற உணர்வு உருவாகலாம். இந்த நிலையில் தலைசுற்றல் தாக்குதல் பொதுவாக 20 நிமிடங்கள் முதல் பல மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். இந்நோய்க்கு காதுமருத்துவர் அல்லது நியூரோடாலஜிஸ்ட் ஆலோசனை அவசியம்.

மைக்ரேன் தலைவலி

ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு தலைசுற்றல் ஏற்படலாம். இதனால் தலைசுற்றல், வெளிச்சத்தைப் பார்க்கும்போது சிரமம், அதிக சத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமை, குமட்டல், தலைவலி அல்லது தலைவலி இல்லாத சுழற்சி உணர்வு ஏற்படலாம்.

மூளையில் பாதிப்புகள்

செரிபெலும் எனப்படும் சிறுமூளையில் ரத்தவோட்டம் பாதிக்கப்படுதல், மூளையின் பின்பகுதியில் பக்கவாதம், மூளையின் சமநிலை மையங்களில் ஏற்படும் பாதிப்புகள், சில நரம்பியல் நோய்களும் வெர்டிகோவை ஏற்படுத்தலாம்.

வெர்டிகோவைக் கண்டறிதல்

தலைசுற்றல் என்று கூறும் அனைவருக்கும் ஒரே பரிசோதனை செய்வதில்லை. எந்த நேரத்தில் தலைசுற்றுகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, எந்தச் செயல் அதைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிவது முக்கியம். நோயாளியின் தலையை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திருப்பி, அவரைப் படுக்க வைக்கும்போது தலைசுற்றல் மற்றும் கண்களின் தன்னிச்சையான அசைவு  ஏற்படுகிறதா என்று மருத்துவர் கவனிப்பார்.

உள்காதின் கிடைமட்ட அரைவட்டக் குழாயில் படிகங்கள் இடம் மாறியுள்ளனவா, கேட்கும் திறனில் பாதிப்பு உள்ளதா, உள்காதின் சமநிலை அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மதிப்பிட வேண்டும். மூளையில் பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவர் எம்.ஆர்.ஐ.  பரிசோதனை பரிந்துரைக்கலாம்.

வெர்டிகோவுக்கு பிசியோதெரபி

வெர்டிகோ சிகிச்சையில் பிசியோதெரபிக்கு முக்கியமான இடம் உண்டு. குறிப்பாக வெஸ்டிபுலர் பிசியோதெரபி (Vestibular Physiotherapy) என்பது தலைசுற்றல் மற்றும் உடல் சமநிலைப் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பயிற்சி முறையாகும்.

இதன் மூலம் உள்காதின் சமநிலை அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சரிசெய்ய முடியும். மூளையும் கண்களும் உடல் இயக்கமும் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது. தலை அசையும்போது ஏற்படும் தலைசுற்றலைக் குறைக்கிறது.

நடக்கும்போது தடுமாற்றத்தைக் குறைப்பது, விழுந்துவிடும் அபாயத்தைக் குறைப்பது, இயல்பான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவது என நான்கு முக்கிய சிகிச்சை முறைகள் உள்ளன.

எப்லி மேனுவர்

பிபிபிவி BPPV எனப்படும் காதில் படிகங்கள் இடம் மாறுவதால் ஏற்படும் தலைசுற்றலுக்கு எப்லி மேனுவர்  மிகவும் பயனுள்ள சிகிச்சை முறை. இந்தச் சிகிச்சையில் நோயாளியின் தலையைப் பல குறிப்பிட்ட நிலைகளில் படிப்படியாகத் திருப்புவார்கள்.

உள்காதின் அரைவட்டக் குழாயில் தவறான இடத்தில் சென்றுள்ள சிறிய கால்சியம் படிகங்களை மீண்டும் அவை இருக்க வேண்டிய இடத்திற்குத் திருப்புவதாகும். இதனால் தலைசுற்றல் குறையலாம். படுக்கையில் திரும்பும்போது ஏற்படும் பிரச்சினை நீங்கலாம். தலையை அசைக்கும்போது ஏற்படும் சுழற்சி உணர்வு கட்டுப்படலாம்.

சிலருக்கு ஒரே முறை சிகிச்சையிலேயே நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். சிலருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படலாம்.

காஸ் ஸ்டெபிலைசேஷன் பயிற்சி

வெர்டிகோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலையை அசைக்கும்போது கண்களால் ஒரு பொருளைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போகலாம். இதற்குக் காரணம் கண்கள் மற்றும் உள்காதின் சமநிலை அமைப்புக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாதிக்கப்படுவதாகும். இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய காஸ் ஸ்டெபிலைசேஷன் Gaze Stabilization பயிற்சி உதவுகிறது.

சுவரில் கண் உயரத்தில் ஒரு சிறிய எழுத்து அல்லது புள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் புள்ளியைப் பார்த்துக்கொண்டே தலையை மெதுவாக வலது, இடது பக்கமாக அசைக்க வேண்டும். கண்கள் அந்தப் புள்ளியிலேயே நிலையாக இருக்க வேண்டும். பயிற்சியை நிபுணர் பரிந்துரைக்கும் நேரம் மற்றும் வேகத்தில் செய்ய வேண்டும். இதன் மூலம் தலையை அசைக்கும்போதும் கண்கள் தெளிவாகப் பார்க்கும் திறன் மேம்பட உதவுகிறது.

ஹேபிச்சுவேஷன் பயிற்சி

சிலருக்குத் தலையைத் திருப்பும்போது, குனியும்போது அல்லது எழுந்து நிற்கும்போது தொடர்ந்து தலைசுற்றல் ஏற்படும் சூழ்நிலைகளில் உடலையும் மூளையையும் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு படிப்படியாகப் பழக்கப்படுத்தும் பயிற்சிதான் ஹேபிச்சுவேஷன் Habituation Exercise. இதில், மெதுவாகத் தலையை அசைத்தல். உட்கார்ந்த நிலையில் உடலை வலது, இடது பக்கமாகத் திருப்புதல், மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட அசைவுகளை மீண்டும் செய்தல் போன்ற பயிற்சிகள் இடம்பெறும்.

பேலன்ஸ் டிரெயினிங்

தலைசுற்றல் ஏற்பட்டவர்களுக்கு நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்கள் கீழே விழுந்து காயமடையும் அபாயம் அதிகம். இதனைத் தவிர்க்க பேலன்ஸ் டிரெய்னிங் உதவுகிறது. இதில், கால்களை அருகருகே வைத்து நிற்பது, பாதுகாப்பான ஆதரவுடன் ஒருகாலில் நிற்கப் பயிற்சி செய்வது, மெதுவாக நடப்பது, தலையை அசைத்துக்கொண்டு நடப்பது, உடல் எடையை ஒரு காலிலிருந்து மற்றொரு காலுக்கு மாற்றுவது போன்ற பயிற்சிகள் இடம்பெறலாம்.

இது தலைசுற்றலுக்கான காரணம், நோயின் தீவிரம், வயது, உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து பிசியோதெரபி மாறுபடும். பிபிபிவி. நோயாளிகளில் சிலருக்கு ஒரே சிகிச்சை அமர்விலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு பல அமர்வுகள் தேவைப்படலாம். ஒவ்வொருவருக்கும் ஒரே கால அளவில் குணமடையும் என்று கூற முடியாது.

சில வகையான தலைசுற்றலுக்கு மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். எல்லா தலைசுற்றலும் சாதாரணக் காது பிரச்சினையால் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகளின் அறிகுறியாகவும் தலைசுற்றல் இருக்கலாம்.

தலைசுற்றலுக்கான எல்லாக் காரணங்களையும் தடுக்க முடியாது. இருப்பினும் சில முன்னெச்சரிக்கைகள் உதவும். படுக்கையிலிருந்து திடீரென எழுந்திருக்க வேண்டாம். தலைசுற்றல் வரும்போது உடனடியாக உட்காருங்கள் அல்லது படுத்துக்கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

சரியான ரத்த அழுத்தம், சரியான தூக்கத்தைப் பராமரியுங்கள். மருத்துவர் பரிந்துரைத்த சமநிலைப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். தலைசுற்றல் இருக்கும் காலத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிருங்கள். வீட்டில் வழுக்காத தரை, போதிய வெளிச்சம், குளியலறையில் கைப்பிடிகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இதுவே பாதுகாப்பும் தைரியமும் கொடுக்கும்.

Leave a Comment