இயற்கை அற்புதம்
குளித்துமுடித்து கரையேறிய ஞானகுருவை வணங்கி நின்ற மகேந்திரன், ‘’தினமும் ரசித்துக் குளிக்கிறீர்கள். அழியக்கூடிய இந்த உடல் மீது இத்தனை பற்று வைக்கக்கூடாது என்று சித்தர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த உடல் மீது மிகவும் ப்ரியமாக இருக்கிறீர்களே?’’ என்று கேட்டார்.
புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஞானகுரு. ’’இந்த உடலானது எந்த நேரத்திலும் உடையக்கூடிய மண் பாண்டம், காற்றடைத்த பை என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், உனக்கு இயற்கை கொடுத்திருக்கும் பொக்கிஷம்தான் இந்த உடல். இதனை பாதுகாத்து, திரும்பவும் அதனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை.
அதனால்தான் உடம்பை ஊனுடம்பே ஆலயம் என்கிறார்கள்., மனிதன் வணங்கக்கூடிய முதல் ஆலயம் அவனுடைய உடம்புதான். அதை ஆலயம் போன்று சுத்தமாக பராமரிகக்வில்லை என்றால் குப்பையாக மாறிவிடும். அந்த குப்பையில் இருந்து கெட்ட எண்ணங்களும் தீய விளைவுகளும்தான் ஏற்படும்.
உடல் கேட்கும் இன்பத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவைதான் நாக்குக்கு மிகவும் பிடிக்கும். திருட்டுத்தனமான விஷயங்களை பார்க்கத்தான் கண்கள் விருப்பப்படும். கெட்ட விஷயங்களைக் கேட்கவே காது ஆசைப்படும். இப்படி மனித அவயம் ஒவ்வொன்றும் சுகத்துக்கு ஆசைப்படுவது இயல்புதான்.
ஆனால், அதனால் உடலுக்கு ஊறு நேர்ந்துவிடக்கூடாது. அறுசுவைகளையும் ரசித்து உண்ண விரும்பு. நல்ல அனுபவங்களைக் கேட்க விரும்பு. உலகின் அழகை தரிசிக்க ஆசைப்படு. இப்படியும் உடலுக்கு இன்பம் தர முடியும்.
இந்த உடல் படைக்கப்பட்ட முதன்மையான நோக்கம் என்ன தெரியுமா? நீண்ட நாட்கள் வாழ்வதுதான். அதனை செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், உடலை பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவசியமே. இந்த உடலை குப்பையாகப் பார்க்காதே, இதுதான் சொர்க்கம்’’ என்றார் ஞானகுரு
தன் உடலை ஒரு முறை பார்த்துக்கொண்டார் மகேந்திரன்.