கைகள் இல்லாத நீச்சல் மன்னன்

Image

சாதனைக்கு எதுவும் தடையில்லை

எனக்கு உதவி செய்வதற்கு யாருமே இல்லை, எனக்கு பெற்றோர் சொத்து எதுவும் வைக்கவில்லை, என்னிடம் எந்த திறமையும் இல்லை என்றெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கை தரும் நாயகனாக வலம் வருகிறார் முகமது ஆசிம்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவரான முகமது ஆசீமுக்கு பிறவியிலே இரண்டு கைகளும் கிடையாது. இரண்டு கால்களும் சம உயரமாக இல்லாமல் ஒரு கால் உயரமாகவும், ஒன்று குட்டையாகவும் இருக்கும். ஆனாலும், இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நாயகனாகவும் நீச்சல் மன்னனாகவும் இருக்கிறார்.

ஆம், 90 சதவிகித உடல் குறைபாடு இருந்தாலும் அசீமுக்கு நீச்சல் அடிக்கும் ஆசை வந்திருக்கிறது. எல்லோரும் ஆற்றில் குளிக்கும்போது, தானும் அப்படி குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

கைகள் இல்லாமல் எப்படி நீச்சல் அடிக்க முடியும் என்று பெற்றோர் தடுமாறிய போதும், தன்னுடைய ஆசையை விட்டுக்கொடுப்பதாக அசீம் இல்லை. அதனால் பயிற்சியாளர் சஜி வளாசேரியை நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்கு நியமித்திருக்கிறார்கள்.

கைகள் இல்லாமல் நீச்சல் அடிப்பது சவாலான ஒன்று என்றாலும், முடியாத காரியம் இல்லை என்று நினைத்திருக்கிறார் சஜி. அசீமுக்கு எப்படி சொல்லித்தர வேண்டும் என்பதை புரிந்துகொள்வதற்காக, தன்னுடைய கைகள் இரண்டையும் உடலோடு கட்டிக்கொண்டு, நீச்சல் செய்வதற்கு பழகியிருக்கிறார். எப்படி நீச்சல் அடிக்க முடியும், எது சரியான வழி என்பதை தெரிந்துகொண்டு, அதன்பிறகே அசீமுக்கு சொல்லிக் கொடுக்க முன்வந்தார்.

அசீம் நீச்சல் அடிக்க ரொம்பவே சிரமப்படுவார் என்றே சஜி நினைத்திருக்கிறார். ஆனால், அசீமுக்கு இருந்த ஆர்வமும் அக்கறையும் சஜியின் வேலையை எளிதாக்கியிருக்கிறது. ஆம், சஜி நினைத்ததைவிட சீக்கிரமாகவே அசீம் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டார். அதோடு நிற்காத அசீம், நீச்சலில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட, அத்தனை பேரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டார்கள். அதற்காகவும் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படி, பெரியாறில் ஒரு மணி நேரம் ஒரு நிமிடத்தில் யாருடைய துணையும் இல்லாமல் 800 மீட்டர் தொலைவை தன் கால்களாலே நீந்தி கடந்திருக்கிறார். அசீமின் சாதனை 2022 ஆம் ஆண்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட், வேர்ல்ட்ஸ் ரெக்கார்டு யூனியன் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

அதோடு அவரது ஆசைகள் முடியவில்லை. தன்னுடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி வெற்றி அடைந்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்து பேசும் அசீம், “நான் என் குடும்பத்தில் முதல் குழந்தை. நான் பிறந்தவுடன் எனக்கு 2 கைகள் இல்லை. ஒரு காலின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது. என் பெற்றோர்கள் இடிந்து போனார்கள். நான் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் அவர்கள் தினமும் மிகவும் சிரமப்பட்டார்கள்.

நான் படிக்க வேண்டும் என்ற ஆசையினாலே வீட்டை விட்டு வெளியே வந்தேன். வெளிமன்னா பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு வரை படித்தேன். 5 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் வேறு ஒரு பகுதிக்கு தான் சென்று படிக்க வேண்டும். அதனால் நான் படித்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று அரசு தரப்பிற்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்தேன். எனவே அந்த பள்ளி உயர் தொடக்கப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் இங்கு 7 ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் இப்போது இந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார் முகமது ஆசீம்.

இதற்காக தன்னுடைய பள்ளியில் இருந்து திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் வரை 52 நாட்களில் 450 கிலோமீட்டர்களுக்கு மேல் சக்கர நாற்காலியில் பயணம் செய்து சுமார் 30 ஆயிரம் கையெழுத்துகளை சேகரித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பு அழைப்பாளராகவும் ஆசிம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசும் அசீம், ’’கத்தார் நாட்டில் நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நான் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ அலுவலர்கள் என்னை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கே அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு முன்பாக அந்தந்த நாடுகளின் விளையாட்டு வீரர்களோடு நான் கலந்துரையாடினேன். புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்களான மெஸ்ஸி, பப்பே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களோடு கலந்துரையாடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது…’’ என்கிறார்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள கிட்ஸ் ரைட்ஸ் அறக்கட்டளையின் சார்பாக, 2021ம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் சமாதானத் தூதராக அசீம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும், கேரள அரசன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பாக வழங்கப்படும் உஜ்வால பால்யம் விருதையும் வென்றிருக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்ட கவலை இல்லாமல் இப்போது ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று பல்வேறு மக்களை சந்தித்து, தன்னுடைய வாழ்க்கை கதையை எடுத்துக் கூறுகிறார் ஆசிம். ‘மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது ஒரு வாழ்க்கை. அந்த ஒரு வாழ்க்கையில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கியதாகவே இருக்க வேண்டும். சில முறை முயற்சி செய்யும்போது அது தோல்வியில் முடியலாம். ஆனால் விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் .100 முறை நீங்கள் முயற்சித்து அதில் தோல்வி கண்டாலும் 101 வது முறை மீண்டும் நீங்கள் முயற்சி செய்யும்போது அது உங்களுக்கு வெற்றியை அளிக்கும்..’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

இப்போது அசீமுக்கு உள்ள ஆசை என்ன தெரியுமா..?

பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக பின்னோக்கி நீந்தும் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இந்த சாதனையையும் அசீம் நிச்சயம் வெல்லட்டும்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்