அதிர்ச்சி தரும் உண்மைகள்
பாகுபலி படத்தில் நடிகர் ராணா டகுபதியின் உடற்கட்டையும் நடிப்பையும் பார்த்து அசராதவர்கள் யாரும் இல்லை. வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக 6.2 அடி உயரம், 120 கிலோ எடை என மிரட்டலான லுக்கில் காட்சியளித்தார்.
அதன்பிறகு ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென காணாமல் போய்விட்டார். என்னவென்றால், அவர் உடலில் எக்கச்சக்க பிரச்னைகள். பாகுபலிக்கு உடல் எடையை அதிகரிக்க அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து ராணா டகுபதி சமீபத்தில் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.
ராணா பிறந்தபோது அவருடைய வலது கண்ணில் பார்வை மிகவும் குறைவாக இருந்துள்ளது. அந்த கண்ணில் நரம்பு தொடர்பான பிரச்னை இருந்ததால், அவரால் சரியாகப் பார்க்க முடியாத நிலை.
இதற்கு குழந்தைப் பருவத்திலே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கண் மாற்று அறுவைச் சிகிச்சை அல்ல, ஆனால் கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை. இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் அவரது பார்வை ஒரு அளவிற்கு மேம்பட்டது. ஆனாலும் அந்த கண்ணில் முழுமையான பார்வை கிடைக்கவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராணா மிகவும் நேர்மையாக இதுகுறித்து, “ஒரு கண் எனக்கு சரியாகத் தெரியாது. அந்த கண்ணை மூடிவிட்டால் எனக்கு கிட்டத்தட்ட பார்வை இல்லாத நிலை இருக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.
இத்தகைய பார்வை பிரச்னை இருந்தபோதும், ராணா தனது வாழ்க்கையில் அதை குறையாக நினைக்கவில்லை. மாறாக, அதைத் தாண்டி முன்னேற வேண்டும் என்ற மன உறுதியுடன் வளர்ந்தார். பள்ளிக் காலத்திலிருந்தே விளையாட்டு, படிப்பு, பின்னர் திரைப்படத் துறையில் பணியாற்றுவது போன்றவற்றில் தன்னை நிரூபித்தார்.
பின்னர் பாகுபலி படத்திற்காக உடற்கட்டை மெருகூட்டினார். அதிக உடல் எடை ஏற்ற வேண்டியிருந்ததும் நீண்ட காலம் அதே எடையைப் பராமரிப்பதும், கடுமையான உழைப்பும் அவரது உடல்நிலையை மோசமாக்கியுள்ளது.
அதாவது தீராத ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. அதோடு இதயத்தைச் சுற்றி தாதுக்கள் படியும் சிக்கல்கள் ஏற்பட்டன.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்பட்டதால் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை (Kidney Transplant) செய்வதே ஒரே வழி என்று கூறப்பட்டது. அவரது குடும்பத்திலிருந்தே ஒரு நெருங்கிய உறவினர் கிட்னி தானம் செய்வதற்கு முன்வந்தார். இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அதன்பிறகு ராணா நீண்ட காலம் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.
கிட்னி மாற்று சிகிச்சைக்கு பிறகு உடல் புதிய உறுப்பை ஏற்கும்படி பல மாதங்கள் இம்யூன் கட்டுப்பாட்டு மருந்துகள் (Immunosuppressant medicines) எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரது வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. உணவில் கடுமையான கட்டுப்பாடு, உப்பு மற்றும் சில உணவுகளை குறைத்தல், முறையான உடற்பயிற்சி, மனஅழுத்தத்தை குறைக்கும் வாழ்க்கை முறை போன்றவற்றை அவர் பின்பற்ற ஆரம்பித்தார். மேலும், அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளும் செய்து வந்தார்.
இதையடுத்து உடல் குணமடையத் தொடங்கியதும் வெளியுலகத்திற்கு வந்தார். 120 கிலோ இருந்த ராணா 60 கிலோவுக்கு மாறி ஒல்லியாகி பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தார். பாகுபலி வெற்றிக்குப் பிறகு வாங்கிய அனைத்து படங்களின் அட்வான்ஸயும் திருப்பிக் கொடுத்தார்.
பல மாதங்கள் உப்பு இல்லாத சாப்பாடு எடுத்துக்கொண்டாலும் மன உறுதியை ராணா ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. அவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் நோய்களில் இருந்து முழுவதுமாக குணமாகிவிட்டார். இப்போது புது மனிதனாக மறு பிறவி எடுத்தவராக உடலைத் தேற்றிக்கொண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
மன உறுதி, சரியான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையின் மூலம் ராணா மெதுவாக உடல்நலத்தை மீட்டார். இப்போது அவர் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டார். எனவே, அனைத்து இடங்களிலும் உடல்நலன் பற்றி விழிப்புணர்வு கொடுக்கிறார். வாழ்க்கையில் எத்தனை பெரிய சோதனைகளை சந்தித்தாலும் மன உறுதியுடன் போராடினால் மீண்டு வர முடியும் என்பதற்கு ராணா உதாரணம்.
கலக்குங்க புரோ.
