• Home
  • உறவுகள்
  • அன்புக் கணவருக்கு கர்ப்பிணியின் ரகசியக் கடிதம்!

அன்புக் கணவருக்கு கர்ப்பிணியின் ரகசியக் கடிதம்!

Image

பெண்ணின் முதல் இரவுக்குப் பிறகு ஆயிரம் கதவுகள்…

டாக்டர். இடங்கர் பாவலன்.

பிரியமான கணவருக்கு….

அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு உங்களைப் பிடித்துப் போயிற்று என்றுதான் நான் நம்பியிருந்தேன். இப்படியான நம்பிக்கை இருவருக்குள்ளும் இருப்பதன் ஒற்றுமையைத்தான் காதல் என்று சொல்லிக் கொள்வார்களோ என்னவோ. உங்களுக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஆம், இதுதான் காதலாக இருக்கக்கூடும். நிச்சயிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காதல்.

நாம் ஒன்றும் நெடுநாட்கள் பழகிப் பார்த்து பேசிச் சிரித்து ஒருவரையொருவர் காதலித்து மணந்து கொண்டவர்களல்ல. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட பின்பான நாட்களில்தான் இருவரும் நேரில் பேசிக் கொள்வதும் அடுத்த திருமணநாள் வரையிலும் அலைபேசியில் பேசிப் புரிந்து கொள்ளவுமாக வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் குறுகிய இடைவெளிதான் நாம் நம்மைப் புரிந்து கொள்வதற்கும் பின்னாளில் வளமான குடும்பத்தை அமைப்பதற்கும் உதவப்போகிறது என்ற வகையில் நாம் பகலிரவாக பேசிக் கொண்டோம் .நம் கனவுகள் சிறியது முதல் பெரியதாக பட்டியலிட்டுப் பட்டியலிட்டு இரவும் பகலுமாக நீண்டு கொண்ட அந்த பொழுதுகளை நினைத்தால் இப்போதும் உடலிற்குள் ஒரு சிலிர்ப்பு மின்னி மறைகிறது.

தன் சகோதரி,  சக தோழியர் முன் ஆடை விலகுவதை கூட எந்த பெண்ணும் ஏற்பதில்லை‌. திருமணம் ஆன உடனே கணவன் முன்பு ஆடை களைவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதலிரவு முடிந்த விடியலில் ஒரு ஆண் எளிதாக வாசலைக் கடந்து மௌனமாக சென்று விட முடியும். ஆனால்,ஒரு பெண்ணாக கதவைத் தாண்டுவதற்கு பல பல அத்தியாயங்களை கடந்தாக வேண்டும். அதை எளிதில் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாது.

ஒவ்வொரு மாதவிலக்கு ஆகும் நாளையும் புதிதாக திருமணமான பெண் கடக்கும் துயரை  உங்களிடம் நான் இதுவரை சொல்லியதேயில்லை.அது வரவில்லையா, எத்தனை நாளாகிறது, எப்போதும் இப்படித்தான் தள்ளிப்போகுமோ, இந்த முறை அதுவாகத்தானிருக்கும்., பரிசோதித்துப் பார்த்துவிடுவோமா என்று மாதா மாதம் மாதவிலக்கைக் கடக்கும் நாட்கள் அதன் வலியைவிடக் கொடுமையாக இருக்கும்.

 இளம் வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களை அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கர்ப்பம் ஏற்பட்டவுடன் மாமியாரிடம் எதையாவது கேட்க முடியுமா… சரியான பதில் தான் வருமா?

அப்படித்தான் எதையும் வெளிப்படையாகச் சொல்லவொண்ணா தயக்க நிலையில் நானும் இப்போது கர்ப்பிணியாயிருக்கிறேன்.  நான் இன்னமும் நம் குடும்பத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. குடும்பத்தில் இருப்போருக்கும்கூட பிறந்த வீட்டிலிருந்து வந்த எனது இயல்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலமும் அமையவில்லை. முதலிரவன்றே கர்ப்பவதியாகிவிடுகிற பெண்ணின் மனநிலையை என்றாவது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அது, ஒரு பக்கம் மகிழ்ச்சியென்றால் இன்னொரு பக்கம் பெருந் துயரம்.

இந்தக் கர்ப்பத்திற்கான சந்தோசத்தைச் சொல்வதற்காக பொழுது சாயும்வரை காத்திருந்து உங்களிடம் சொல்லும்போது நீங்கள் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியைக் கண்டு நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன்.  அடுத்த கணமே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பீர்கள், அதற்கு வேறெதுவும் வேண்டாம், எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது அழைத்துச் செல்லுவீர்களா!’ என்று பதில் சொல்ல வேண்டும் என்றிருந்தேன்.

ஆனால், கோவிலுக்குச் செல்லலாம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டவுடன் உங்களது மகிழ்ச்சியாவது நிலைத்திருக்கட்டும் என்று அன்றே கோவிலுக்குச் சென்றோம். கோவிலும், கடவுளும் ஒவ்வொவருக்கும் ஒரு அர்த்தமாகிறது என்பது ஏனோ உங்களுக்கு அப்போது புரியவில்லை.

அன்றைய தினம் நாம் இருவரும் கோவிலில் வேண்டிக் கொண்டோம். எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னீர்கள்… ஆனாலும் ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி என்று பதிவு செய்தீர்கள். பெண் குழந்தை என்றால் புறக்கணிப்பீர்களா என்கின்ற பதட்டம் எனக்கு வந்ததை நான் உங்களிடம் வெளிப்படுத்தியதே இல்லை. 

உடல் குறுகுறுக்கிறது, வாயில் எச்சில் ஊறுகிறது,  கைகள் நடுங்குகிறது, அடித்துப் போட்டாற் போல் அசதியாயிருக்கிறது, உடம்பு ஊதிக் கொள்கிறது, படுத்தால் தூக்கம் பிடிக்க இரண்டு மணியாகிறது, எப்போதும் பதட்டமாய் இருக்கிறது என்று உங்களிடம் ஒவ்வொன்றாய் சொல்லித் தினந்தினம் முறையிடும் போது, மாசமாயிருக்கையில் எல்லாம் அப்படித்தான் இருக்கும்! என்ற ஒற்றை வரியில் என்னைக் கடந்துவிடாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வேலைவிட்டு வீட்டிற்குள் நுழைகிறபோது எனக்கென்று நேரம் ஒதுக்கிக் கொண்டு இன்றைக்கு உடம்பிற்கு என்ன செய்கிறது, வயிற்றுக்குள் பிள்ளை என்ன குறும்பு செய்கிறது… என்று கேட்டால் மட்டும் போதும், பள்ளி சென்ற குழந்தையைப் போல கதைகதையாய் பேச எத்தனையோ விசயங்கள் என்னிடம் இருக்கத்தான் செய்கின்றன. நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் உங்கள் அறிவுத் தளத்திலிருந்து அறிவுரைகளையும்கூட சொல்ல வேண்டாம். உண்மையில், நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி புத்தி பேதலித்தவளைப் போல நடந்து கொள்ளத்தான் ஆசைப்படுகிறேன். உங்களது படித்த அறிவிலிருந்து சொல்லுகிற பதில்களால் என் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறையவேதான் செய்யும். ஆதலால் நான் பேசுவதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படவும், சிரிக்கவும், என்னோடு குழந்தையாய் விளையாடவும் மட்டும் செய்தாலே எனக்கு எல்லாம் நிறைவானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.

எனக்கு மசக்கையால் பசிக்கவில்லை என்று சொன்னால் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என்கிறாய் என்று உடனே கோபப்பட்டுவிட வேண்டாம். உண்மையாகவே இப்போதெல்லாம் என்னால் எதையும் சாப்பிட முடிவதில்லை.நான் எனக்கான மசக்கை உணவுகளைக் கண்டுபிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். காய்கறிக் கடைக்கோ பழக்கடைக்கோ அழைத்துச் சென்றால் ஒருவேளை என்னால் அவற்றின் வாசம், ருசியை வைத்து எனக்கானவற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றுகிறது. அதற்காக எப்போதும் என்னுடன் நீங்கள் துணையாய் இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.

என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போங்கள். இறுக்கமான நான்கு சுவர்களுக்குள்ளே அடைபட்டு இருப்பது எனக்கு மிகவும் மனஅழுத்தமாய் இருக்கிறது. வயிற்றுக்குள் அடைபட்டிருக்கும் குழந்தைக்கு நான் பார்க்கிற வெளி உலகம்தான் வெளிச்சம் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். வெளியே சென்று வருகிற போதெல்லாம் உங்களுக்குப் பிடித்ததை, கர்ப்பவதிகள் எதைச் சாப்பிட்டால் நல்லது என்று யாராவது சொல்லி வைத்ததை வாங்கி வராதீர்கள். முதலில் எனக்கு என்ன தேவையென்பதை நீங்கள் புரிந்து கொண்டு அதை எனக்கு வாங்கி வாருங்கள். உண்மையில் வெளியே சென்று வருகிற எல்லா அப்பாக்களிடமும் எதிர்பார்க்கிற ஒரு மகளைப் போலவேதான் நானும் இப்போது உங்களிடம் வெட்கத்தை விட்டு எதிர்பார்க்கிறேன் என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு ஓய்வு தேவைப்படுகிற போதெல்லாம் எனக்கு மிக நெருக்கமாக நீங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதைவிட நான் குழப்பமாகவும் கவலையோடும் இருக்கும் நேரங்களிலெல்லாம் கட்டாயம் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்தக் கவலையே எனது எல்லா சந்தோசத்தையும் கரைத்துவிடும் என்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அந்த கணத்தில் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் குறைந்தபட்சம் அலைபேசியிலாவது என்னிடம் பேசிவிடுங்கள். அந்த பத்துநிமிட உரையாடல்கள்தான் எனக்கான மருந்து என்பதை ஒருபோதும் நீங்கள் மறவாதிருங்கள்.

குழந்தை மீது அன்பு வையுங்கள். நானும்கூட எல்லையின்றி வைத்திருக்கிறேன். நாம் இருவருமே நம் பிள்ளை மீது நேசமாய் இருந்து நல்லபடியாய்  வளர்ப்போம். ஆனால் அதற்காக என் மீதான அன்பும் அரவணைப்பும் குறையும்படியாக ஒருபோதும் நடந்து கொள்ளாதீர்கள். பிள்ளைக்கு நாமிருவரும் இருக்கிறோம். ஆனால் எனக்காக நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்பதை எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

என் தோழிகளை இந்தத் தருணத்தில் சந்திக்க நேர்ந்தால் நன்றாக இருக்கும் என்றால்… எனக்காக தோழிகளிடம் அழைத்துச் செல்லுங்கள்.  எனது கர்ப்பகாலம் வெறும் ஒன்பது மாதங்கள்தான். அந்தக் குறுகிய கால வசந்தத்தை முழுமையாக அனுபவித்திட உங்களது கரங்கள் எப்போதும் என்னுடன் இணைந்தே இருக்க வேண்டும். இதுவெல்லாம்கூட எனது கோரிக்கையல்ல அன்பே,எனது எதிர்பார்ப்புகள் மட்டுமே.

இவையெல்லாவற்றையும் உங்களிடம் பேசி மனதைக் காயப்படுத்த விரும்பவில்லை என்கிற காரணத்தினாலே எப்போதும் போல இக்கடிதத்தையும் எனது அலங்காரப் பெட்டியினுள் பத்திரமாய் வைத்துக் கொள்கிறேன். அன்பே,  நீங்கள் சொல்வதைப் போலவே நானும் உங்களைவிட அதீத அன்பை வைத்திருக்கிறேன் என்பதை ஒருகாலம் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும் என்கிற நம்பிக்கையின்பால் இக்கடிதத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பிற்குப் பாத்திரமானவள்.

Leave a Comment