காமராஜர் நினைவலைகள் – 5
1949ஆம் ஆண்டு திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க நாட்டு வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மேடையில் இருந்தவர்கள் காமராஜரை பாதுகாக்க நினைத்தார்கள்.
பேசிக்கொண்டிருந்த காமராஜர் கொஞ்சமும் அச்சமில்லாமல், ‘’கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி நாட்டு வெடி வீசுவதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது’’ என அஞ்சாது உரையாற்றினார்.
எழுந்துபோனவர்களும் உடனே திரும்பிவந்து அமர்ந்தனர். அதன்பிறகு அங்கு யாரும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
நிஜமான அஞ்சாநெஞ்சன் காமராஜர்தான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
