சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 4
டாக்டர் பதூர் மொய்தீன்
திருமண பந்தத்தில் பெண்கள் எத்தனை திருப்பங்களை, கொடுமைகளை, சந்தித்தும் சகித்தும் வருகிறார்கள் என்பதை விளக்கும் ஆய்வுத் தொடர்.
நமது பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கொள்கையுடன் இருக்கும் ஓர் ஆணின் கரம் பற்றி, திருமணம் செய்துகொண்டுவிடவேண்டும். வாழ்நாள் எல்லாம் அந்த ஒருவனுக்கு ஒருத்தியாக அவனுடனேயே வாழ வேண்டும். சுகம், துக்கம் என எதுவாக இருந்தாலும், வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும், திருமணம் செய்துகொண்ட ஆணுடனே காலத்தைக் கழிக்க வேண்டும். அந்த ஒருவனுடன் மட்டும் படுக்கையை பகிர்ந்துகொண்டு, குழந்தைகள் பெற்று, அந்த குழந்தைகளுக்குப் பணிவிடை செய்து ஆயுள் வரை வாழ வேண்டும் என்பதுதான், இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் திருமண விதி.

இதை பெண் எப்படி ஏற்றுக் கொள்கிறாள்? அவளுக்கு அப்படி என்ன கட்டாயம்?
பெண்ணுக்குக் குடும்பரீதியிலும், சமுதாயரீதியிலும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமும் சமூகமும் அவளுக்குத் துணைபுரிகிறது. ஆனாலும், , ஏன் வாழ்நாள் முழுதும் ஓர் ஆணுடன் திருமணம் என்கிற பந்தத்தின் வழியாக கடைசி வரை அந்த ஆணின் மனைவியாகவே வாழ்வதற்கு உடன்படுகிறாள்?
அப்படி ஒரு கட்டாயத்துக்கு அவள் தள்ளப்படுகிறாளா? தனிப்பட்ட பெண் உரிமை, சம உரிமை, பேச்சு சுதந்திரம், வாழ்வியல் சுதந்திரம் எல்லாமும் இருக்கிறபோது, ஏன் திருமண பந்தம் வழியாக ஒருவனுடன் மட்டுமே சேர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கிறாள்?
இதற்கு உண்மையான காரணம் தெரிந்துகொள்வதற்கு நமது கலாசாரத்தை, நமது வாழ்வியலை உற்றுக் கவனிக்க வேண்டும். அதாவது, நம் சமூகத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு பெண் தனிப்பட்ட ஓர் ஆணிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அங்கீகாரம், அனுமதி கிடையவே கிடையாது. ஒரு பெண் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினால், அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் திருமணம் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.
உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலியல் தேவை என்று ஒன்று உண்டு. அத்தகைய உடலியல் தேவையை நம் சமூகத்தில் திருமணம் என்கிற பந்தத்தின் வழியாகத்தான் பெறமுடியும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட செக்ஸ் என்பது கீழ்த்தரமானதாக கருதப்படுகிறது. அப்படி ஏதேனும், விதிமீறிய, அங்கீகரிக்கப்படாத உறவின் மூலம் செக்ஸில் ஈடுபட்டால், அது கண்டனத்துக்கு உரியதாக கருதப்படும். சிலவேளைகளில் அது தண்டனைக்கு உரியதாகவும் கருதப்படும்.
அது மட்டுமல்லாமல், அது அவமான செயலாகக் கருதப்பட்டு, அந்த பெண் ஒதுக்கப்படுகிறாள். இத்தகைய கீழ்த்தரமான உறவுக்கு பரிகாரம் என்னவென்றால், யாரோடு அவள் பாலியல் உறவு வைத்துக்கொண்டாளோ, அவனையே திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வாகவும் தண்டனையாகவும் விதிக்கப்படுகிறது. அப்படி திருமணம் செய்துகொண்டுவிட்டால் அவள் புனிதமானவளாக அந்த நொடியிலிருந்து மாறிவிடுகிறாள். அப்படி அவளை திருமணம் செய்துகொண்டவன் அவளுக்கு மதிப்பு கொடுப்பானா? அவளை உரிய முறையில் மனவியாக நடத்துவானா என்பது சந்தேகத்துக்குரியது.
கணவன் என்று வரும்போது, ஒரு பெண் தனக்கு ஓர் ஆண் எல்லா வகையிலும் துணையாக இருக்கிறான் என்பதை அவள் பாதுகாப்பாக நினைக்கிறாள். கணவனைப் போன்று வேறு ஆண்களால் தனக்கு பாதுகாப்பு தர முடியாது. அப்படி கிடைக்கும் பாதுகாப்புக்குப் பதிலாக இழிவு படுத்தும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்கிறாள். எனவே, இழிவுகளில் இருந்து மீள வேண்டும் அல்லது இழிவு தன்னை வந்து சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்த ஒருவனுடன் காலம் முழுவதும் சேர்ந்து வாழ அவள் முற்படுகிறாள்.
பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டதாக சொன்னாலும், சமத்துவம் பெற்றுவிட்டாள் என்று சொன்னாலும் அது உண்மையா என்பது சந்தேகத்துக்கு உரியது.
பெண்ணின் உடல் அமைப்பு, உள அமைப்பைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கணவன் என்பவன் தனது உடல் தேவையை தீர்ப்பவனாகவும், தனது உளத் தேவையை புரிந்துகொண்டு அதனை நிறைவேற்றுபவனாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறாள். தன்னுடன் உறவில் ஈடுபடுபவன் தன்னை ஆள்பவனாகவும் தன்னை வீழ்த்துபவனாகவும் இருக்க வேண்டும் என்று அவள் பெரிதும் விரும்புகிறாள். தன்னைப் புரிந்துகொண்டவனால்தான் முடியும் என்று அவள் நம்புகிறாள். ஆணுக்கு ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து, தெளிவாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் அவள் நினைக்கிறாள். தன்னை அறிந்தவனால் மட்டுமே தன்னை புரிந்துகொண்டு, தன்னிடம் உறவை இலகுவாக நடத்த முடியும் என்பது பொதுவாக எல்லா பெண்களின் நம்பிக்கையாகும்.
அத்தகைய உறவும் பகிரங்கப்படுத்தப்படாமல், ரகசியமாக, தானும் கணவனும் மட்டுமே அறிந்த விஷயமாக இருக்க வேண்டும் என்பதும் பெண்களின் வாழ்வியல் முறையாக இருக்கிறது.
அப்படி தனக்குத் தெரிந்தவன், அறிந்தவன் தனக்கு துணையாகும்போதுதான் ரகசியம் காப்பாற்றப்படும் என்பதும் பெண்களின் அடிமனதின் உறுதியான நம்பிக்கை. பெண் தன்னை அறியாதவனிடம், செக்ஸ் உறவு வேண்டும் என்று கேட்பதை அவமானகரமானவும் பாவச்செயலாகவும் நினைக்கிறாள்.
இப்படி நிலைமை இருக்கும்போது, ஓர் ஆடவனை அவள் சட்டென்று எப்படி தேர்ந்தெடுக்க முடியும்? எதை வைத்து அவள் முடிவெடுத்து அவனை அவள் ஏற்க முடியும்? வசீகரத் தோற்றத்தை வைத்தா? பொருளாதாரரீதியில் வசதிமிக்கவன் என்கிற எண்ண ஓட்டத்திலா? தன்னை காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையிலா? எப்படி, எதை கொண்டு அவள் ஓர் ஆணை தனக்கு கணவனாக இவனுக்கு தகுதி இருக்கிறது என்று முடிவு செய்வாள்?
தனது கணிப்பு தவறாக இருந்துவிடக்கூடும் என்கிற சந்தேகத்துக்கு உரிய எச்சரிக்கை உணர்வும் பெண்ணுக்கு உண்டல்லவா? என்ன அளவுகோல் இருக்கிறது? என்ன உத்தரவாதம் இருக்கிறது? எதை வைத்து அவள் முடிவு செய்வாள்?
உண்மையில் பெண்ணின் எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை பார்ப்போம். பொதுவாக, பெண் பார்க்க வருபவர்கள் நம்மிடம் என்ன எதிர்ப்பார்ப்பார்கள்? நகை இத்தனை பவுன் வேண்டும் என்று வேண்டுவார்களா? சொத்து எழுதி வைக்க கட்டாயப்படுத்துவார்களா? அல்லது இத்தனை லட்சம் பணம் வேண்டும் என்று நெருக்கடி தருவார்களா? என்றெல்லாம், அந்தப் பெண்ணும் யோசிப்பாள், அவளைப் பெற்றவர்களும் பெரும் கவலையுடன் யோசிப்பார்கள். இப்படி சில மாப்பிள்ளை வீட்டார் கேட்பதை கண் கொண்டு பார்த்த பல குடும்பங்கள், தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோமோ என்று கண் கலங்கினார்கள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் குடும்பத்தாரை அச்சப்பட வைக்கிறார்கள்.
எனவே, பிள்ளை வீட்டார் இழுத்த இழுப்புக்கு எல்லாம் பெண் வீட்டார் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். ஆனால், இன்றைய நாளில் பெண் படிக்க ஆசைப்படுகிறாள். மேற்படிப்பு படிக்க விரும்புகிறாள். நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். பெண் விருப்பப்படியே பெண் பிள்ளைகளை பல வீடுகளில் அருமையாக வளர்க்கிறார்கள். என் பெண் நன்கு படித்திருக்கிறாள். நன்கு சம்பாதிக்கிறாள். அவளை ராணி போல வளர்த்திருக்கிறோம். அவளை நாங்கள் சமையற்கட்டுக்குள் போக அனுமதித்ததே கிடையாது. அவளுக்கு சமைக்கத் தெரியாது என்று சொல்லிக்கொள்வதில் பல குடும்பத்தினர் பெருமையும் பட்டுக்கொள்கிறார்கள்.
ஆனால் பல பிள்ளை வீட்டினரோ, ஒரு பெண்ணை தங்கள் பிள்ளைக்கு திருமண பந்தத்தின் வழியாக மருமகள் என்கிற உறவு நிலையோடு வீட்டுக்கு அழைத்து வரும்போது, அந்தப் பெண் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும்கூட, அந்தப் பெண் தனது குடும்பத்தை அனுசரணையுடன் வழிநடத்திச் செல்வாள், வீட்டில் உள்ளவர்களை பேணி பாதுகாப்பாள் என்கிற நம்பிக்கையுடன்தான் அழைக்கின்றனர்.
தங்கள் குடும்பத்துக்கு ஒரு நிரந்தரமான நம்பிக்கையான நல்ல பணியாளரை தேர்வு செய்வது போலவே மாப்பிள்ளை வீட்டார் தேர்வு செய்கிறார்கள். ஆனால், பெண்ணின் எண்ணம் வேறாக உள்ளது.
– தொடரும்












