கணவரை மயக்கும் வசிய மருந்து

ஞானகுரு தத்துவம்

வாழ்க்கையில் உடனடி வெற்றியைவிட, பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றிதான் இதமானது, நீடித்து நிலைக்கக்கூடியது என்பதை சொல்வதற்கு ஒரு கதை.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். புதிய வியாபாரம் தொடங்கிய பிறகு கணவன் தன்னை கண்டுகொள்ளவே இல்லை என்று மனைவிக்கு வருத்தம் ஏற்பட்டது. தன்னைவிட வியாபாரத்தையும் பணத்தையும் முக்கியமாக கருதுகிறார் என்று நினைத்தாள். அப்போது ஞானகுரு ஊருக்கு வந்த செய்தியறிந்து அவரை சந்தித்தாள்..

என் மீது எப்போதும் அன்பும் ஆசையும் கொண்ட கணவர் இப்போது என் மீது அக்கறை செலுத்துவதில்லை. அவர் என்னை விரும்பும்படி ஏதாவது வசிய மருந்து அல்லது தாயத்து தாருங்கள் என்று கேட்டாள். கொஞ்சநேரம் அந்தப் பெண்ணை பார்த்தார் ஞானகுரு.

உனக்கு மண் பாண்டம் செய்யத் தெரியுமா என்று கேட்டார். அந்தப் பெண் தெரியாது என்று சொன்னதும், உன்னுடைய கையால் செய்த அழகான மண் பானையை கொண்டுவா, நான் உனக்குத் தேவையான வசிய மருந்து தருகிறேன் என்று சொன்னார்.

உடனே அந்தப் பெண் குயவரிடம் சென்று பானை செய்வதற்கு கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். இதுவரை மண் பற்றியே எதுவும் தெரியாது என்பதால் அவள் பானை செய்வதற்கு கற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. ஒரு வழியாக அதன்பிறகு அழகான மண் பானை செய்துகொண்டு ஞானகுருவை பார்க்க வந்தாள் அந்தப் பெண். முனிவர் அந்த பானையை வாங்கிப் பார்த்தார். இதனை எளிதில் செய்துவிட்டாயா என்று கேட்டார்.

அடேங்கப்பா… பானை செய்வதற்கான நெளிவுசுளிவுகளை கற்றுக்கொள்வதற்கு எனக்கு எத்தனை நாட்கள் பிடித்தது தெரியுமா, மிகவும் சிரமப்பட்டு அனுபவப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இந்த பானையை செய்துவந்தேன். இதுவரை எப்படியும் 100 பானையாவது செய்து பார்த்திருப்பேன், எதுவுமே சரியாக இல்லை, இன்றுதான் நன்றாக அமைந்தது என்று சொன்னாள். உடனே ஞானகுரு அந்த பானையை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டார்.

அதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து நிற்க, புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் பேசினார் ஞானகுரு. பெண்ணே உன்னுடைய விடா முயற்சியால் மண்ணை பானையாக்கிவிட்டாய், இத்தனை திடமான மனதும் தோல்விகளைக் கண்டு அசராத மனமும் கொண்ட நீ மனது வைத்தால், நிச்சயம் கணவனை உன் பக்கம் திருப்பிவிட முடியும். இதற்கு எந்த வசியமும் தாயத்தும் தேவையில்லை, உன்னுடைய அன்பும் முயற்சியும்தான் தேவை என்று சொன்னார். உடனே அந்தப் பெண்ணிற்கு உண்மை புரிய, மகிழ்வுடன் திரும்பிச் சென்றாள்.

இந்த கதை சொல்லவரும் செய்தி எளிதில் விளங்கியிருக்கும். ஏதாவது ஒரு செயலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தால், தோல்விகளைக் கண்டு கலங்காமல் மீண்டும் மீண்டும் நிறைய முயற்சி செய்யவேண்டும்.

அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.

Leave a Comment