சொந்த வீட்டுக்கு ஒரு லாயர்

Image

சட்டம் தெரிஞ்சுக்கோங்க

சொந்த வீடு அமைய வேண்டும் என்பதே நம்மில் பலரின் கனவாக உள்ளது. அதிலும் மிகவும் வசதியான, சௌகரியமான வீடு அமையவே எல்லோரும் விரும்புவர். அந்த கனவை, விருப்பத்தை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.

இதுகுறித்து பேசும் வழக்கறிஞர் நிலா, ‘’இன்று நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் சொத்து தொடர்பானவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒரே சொத்து பல்வேறு நபர்களுக்கு விற்பனையாகிறது. ஊரில் இல்லாத நபர்களின் சொத்துக்களை ஏமாற்றி வாடகைக்கு அல்லது விற்பனை செய்கிறார்கள். எனவே, இதுபோன்ற நேரங்களில் வழக்கறிஞர் ஒருவரது ஆலோசனை மிகமிக முக்கியம்.

வழக்கறிஞருக்கு சிறிய தொகை கொடுப்பதற்கு பயந்துகொண்டு, அவர்களாகவே வில்லங்கம் பார்த்து வீட்டை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். ஒரு பிரச்னை என்று வந்த பிறகே வழக்கறிஞரைத் தேடுகிறார்கள். எனவே, வருமுன்னர் பார்த்துக்கொள்வதே நல்லது.

இதையடுத்தே சொந்த வீடு வாங்குவதற்கு பல்வேறு வகையில் திட்டமிட வேண்டும். அதாவது, குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதம் இருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் பட்ஜெட்டில் வீடு கடைசியாக இருக்கப் போவதில்லை. ஆகவே, முதலாவதாக வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் மற்றவைகளுக்கு திட்டமிட வேண்டும்.

அடுத்து, வீடு வாங்கும் முன் அது அமைந்துள்ள நிலத்தையும், அதன் சுற்றுப்புறத்தையும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். விலை மிகவும் அதிகமாக இல்லாத வகையில், நகரின் முக்கிய இடத்தில் இருந்து சற்று தள்ளி ஆனால், இணையான இடத்தில் இருக்குமாறு தேர்ந்தெடுப்பது மிக நல்லது. ஏனெனில், வீட்டை விற்பனை செய்ய நேர்ந்தால், அதன் விலையை தீர்மானிப்பதில் அது அமைந்துள்ள இடம் முக்கியப் பங்கு வகிக்கும்.


வாடகைக்கு வீடு விடும் திட்டத்துடன் வீடு வாங்க முடிவெடுத்தால், அது மக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் வாடகை அதிகம் இருக்கும் பகுதியாக இருப்பது சிறப்பு. அதேபோல், வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் உதவியை நாடுகிறோம். அதற்காக, இணையதளத்தில் சென்று உங்களுக்கு வீட்டுக்கடன் வாங்கும் தகுதி இருக்கிறதா என்று நீங்கள் ஆன்லைனிலேயே சரிபார்த்து விட முடியும். அதை சரிபார்த்தபின் கட்ட முடியும் என்று, தோன்றும் பட்சத்தில் சரியான முடிவெடுத்து செயல்படலாம்.


வீட்டின் விலையை தவிர, அதை பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் ஆகிய செலவுகளும் உண்டு. இத்தொகை கணிசமாக இருக்கும் என்பதால், வீடு வாங்க திட்டமிடும் போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். உங்கள் சொத்துக்கு எதிர்பாராமல் ஏதேனும் ஆபத்து சேதம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள சொத்து காப்பீடு உங்களுக்கு உதவும். சொத்து பெயர், சில குறிப்பிட்ட செயல் அல்லது எவ்விதமான சட்ட பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இது காப்பீடு அளிப்பதுடன், இதற்கான கட்டணம் குறைவாக இருக்கும்.


காப்பீட்டு பாதுகாப்பின் அடிப்படையில் பல்வேறு விதமான இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இறுதியாக, நீங்கள் நேரடியாக வீடு வாங்கப் போகிறீர்களா அல்லது ஏஜெண்ட் மூலம் வாங்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். மொத்தத்தில் வீடு வாங்குவதற்கு முன்பு இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்’ என்கிறார்.

  • எம்.நிலா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை.

Leave a Comment