என்ன செய்தார் சைதை துரைசாமி – 388
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், மேயருக்கும் அப்படியொரு நிதி ஒதுக்கீடு இருக்கும் தகவலே மேயர் சைதை துரைசாமி பெருநகர சென்னை மேயராக பதவிக்கு வந்த பிறகே மக்களுக்குத் தெரியவந்தது.
ஏனென்றால், மேயர் சைதை துரைசாமி காலத்திற்கு முன்னர் மேயர் மேம்பாட்டு நிதி என்பது வெறுமனே 50 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த நிதியையும் பெரும்பாலான மேயர்கள் முழுமையாகப் பயன்படுத்தவே இல்லை. இந்த நிலையில் 2011ம் ஆண்டு மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்தபிறகு மேயர் மேம்பாட்டு நிதி பற்றி கேட்டறிந்தார்.
ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே மேயர் நிதி என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏனென்றால் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி என்பது அப்போது 426 சதுர கிலோமீட்டருக்குப் பரந்துவிரிந்திருந்தது. 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் கொண்டது. இந்த நிலையில் 50 லட்சம் என்றால், ஒவ்வொரு வார்டுக்கும் வெறுமனே 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இந்த நிதியை வைத்துக்கொண்டு எப்படி எல்லா வார்டுகளுக்கும் ஏதேனும் ஒரு நலத்திட்ட உதவி செய்து கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அதிகாரிகள், ‘இதுவரை மேயர் நிதி குறித்து யாரும் கேள்வி எழுப்பியதில்லை, மேயர் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றால், முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் தான் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். அன்றைய காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பெயரைச் சொல்லிவிட்டால், அரசியல்வாதிகள் யாரும் அடுத்த கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். ஏனென்றால், ஜெயலலிதாவை சந்திப்பதும், நிதி கேட்பதும் கனவிலும் நடக்காத காரியம் என்றே அப்படி சொன்னார்கள்.
ஆனால், மேயர் சைதை துரைசாமி வழக்கமான மேயர் இல்லை, சாதாரண அரசியல்வாதி இல்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதிரடி காட்டினார். அது என்ன..?
- நாளை பார்க்கலாம்