பக்ரித் கொண்டாட்டம்
ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘ஆடு பலி கொடுப்பதற்கு ஒரு விழா எடுக்கிறார்கள். இது விநோதமாக இல்லையா?’ என்று கேட்டார்.
’’நேரடியாக பக்ரீத் பண்டிகை என்று சொல்ல வேண்டியது தானே. இப்ராஹிம் மகனை பலி கொடுக்க முயன்ற நேரத்தில் அல்லா, ’மகனுக்குப் பதில் ஆடு பலி கொடு போதும்’ என்று சொன்னதைக் கொண்டாடுகிறார்கள். ஏழை மக்களுக்கு இறைச்சி கிடைப்பதற்கு ஆண்டவன் ஏற்பாடு என்று பக்ரீத் தினத்தில் பகிர்ந்து கொடுத்து உண்டு மகிழ்கிறார்கள்.
இந்து மதத்தில் நேர்த்திக் கடனுக்காக ஆடு, சேவல் பலி கொடுத்து, சொந்தபந்தங்களை கூட்டிவைத்துக் கொண்டாடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உயிர்க்கொலை என்பது இங்கே விஷயமே இல்லை. ஏனென்றால், ஒன்றைத் தின்று ஒன்று வாழும் வகையிலே பூமியில் ஒவ்வொரு உயிரும் படைக்கப்பட்டிருக்கிறது.
சைவம் என்று சொல்பவர்கள் உண்ணும் கீரைகள், கனிகள் எல்லாமே உயிர்களே. அவர்கள் குடிக்கும் பால், தண்ணீரில் பாக்டீரியாக்கள் நிரம்பியிருக்கின்றன. அவையும் உயிர்களே. கண்ணுக்குத் தெரியாத உயிர்கள், வலியை சொல்லத் தெரியாத உயிரினங்கள் சாப்பிடுகிறோம் என்று வேண்டுமானால் அவர்கள் பெருமையாகக் கருதிக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
இந்த பண்டிகைகள் எல்லாமே மனிதர்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்காக, மனிதர்களே ஏற்படுத்திக் கொண்டவை மட்டுமே. எந்த இறைவனும் உயிர்ப் பலி ஏற்க மாட்டார், கேட்கவும் மாட்டார்’’ என்றார் ஞானகுரு.
’’அல்லா கேட்டதாகச் சொல்கிறார்களே..’’
‘’அருள் வந்து கருப்பசாமி ஆடு படையல் கேட்பது போன்ற கதை தான் இதுவும். தான் படைத்த ஒரு உயிரை பலி கொடு என்று எந்த இறைவனும் கேட்க மாட்டான். அப்படி கேட்பவன் இறைவனாக இருக்க மாட்டான்’’ என்றார் ஞானகுரு.
திகைத்து நின்றார் மகேந்திரன்.