நிழல்களை மறக்காதீங்க
அன்னையைக் கொண்டாடும் அளவுக்கு இந்த உலகம், தந்தையரைக் கொண்டாடுவது இல்லை. ஆனால், குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும் ஆணிவேராகத் திகழ்வது தந்தைதான்.
ஒவ்வொரு குழந்தைக்கும், சரியான தந்தை அமைந்துவிட்டால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரித்திரமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆம், குழந்தைக்கு ஏணிமரமாய் தந்தையர் நிற்கிறார்கள். பிள்ளைகள் சிகரம்தொட, தன் முதுகையும் முதுகெலும்பாய் வளைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அன்னை ஊட்டிய அமுது உடலுக்கு அமிர்தமாய் இருப்பதைப்போன்று, தந்தை ஊட்டிய தைரியம் மனதுக்கு டானிக்காய் இருக்கிறது.
ஒவ்வொரு தந்தையும், தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களைப் போதித்து சிறந்த வழிகாட்டியாக நடத்துவது வரை பல பொறுப்புகளை வகிக்கின்றார். அதனாலேயே தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்குச் சமமாகப் போற்றப்படுகிறார். பிள்ளைகளின் முன்னேற்றம், பெரும்பாலும், தந்தையின் அயராத உழைப்பு மற்றும் தியாகத்தின் வழியாகவே நிகழ்கிறது. எனவேதான் ஜான்சி மேக்ஸ்வெல் என்ற எழுத்தாளர், ‘எந்த குழந்தைக்கும் ஒரு தந்தைதான் தலைமைத்துவத்தின் முன்னோடி’ என்கிறார்.
இப்படி, காலம் முழுவதும் குடும்பத்துக்காகவே வாழ்ந்து ஓய்ந்த தந்தையரின் கண்ணில் கண்ணீரையும், மனதில் சுமையையும் தந்துவிட்டு ஓடும் இன்றைய பிள்ளைகள் எத்தனையோ இருக்கிறார்கள். அவர்கள், ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தேடுவதால் எந்த ஒரு பயனும் இருக்கப்போவதில்லை. ‘தந்தை இருக்கும்போது எதையும் இழந்ததாய் தெரியவில்லை; தந்தையை இழந்தபோது எதுவும் உடனிருப்பதாய் தெரியவில்லை’ என்று ஒரு பாரசீகக் கவிஞன்.
வார்த்தைகளில்தான் எத்தனை உண்மை. தந்தையின் நிழலில் வளர்ந்த பல பிள்ளைகள், அவர்களை இழந்தபின்புதான் அவர்களின் அருமையை உணர்கிறார்கள்.
இது விஞ்ஞான யுகம். தகவல் தொழில்நுட்ப புரட்சி நடக்கிறது. ஆகவே, கல்லூரி முடித்ததும் பல இளைஞர்கள் தந்தையைவிட அதிகம் சம்பளம் பெறுகின்றனர். அதனால், தங்களையே பெரியவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள் வாழ்க்கையின் பல முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, தந்தைக்கு எதிராக கொடியும் பிடிக்கின்றனர். இதனால், பல தந்தையர்களின் இதயம் சுக்குநூறாய் உடைவதுடன், மூலையில் உட்காரும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.
வயதான தாய், தந்தை என்றாலே அவர்கள் மூன்று வேளையும் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு, எதுவும் எதிர்த்துப் பேசாமல் அமைதியாகக் கிடக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள். தந்தைக்கு உலக அறிவு, ஞானம் கிடையாது. அனுபவமும் போதிய அளவுக்கிடையாது என்று மட்டம் தட்டுகிறார்கள். அதன் காரணமாகத்தான், கடைசி வரையிலும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது ஓய்வுக்கு முன் மரணம் வந்துவிட வேண்டும் என்று பெரும்பாலான தந்தையர் கருதுகிறார்கள்.
சின்ன வயதில் தந்தை தன் மீது போதிய அன்பும், அக்கறையும் காட்டியதில்லை என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் குறையாக இருக்கிறது.
ஒரு நிலம் செழிப்பாக இருக்கிறது, பச்சைபசேல் என காட்சியளிக்கிறது என்றால், அந்த நிலத்துக்குக் கீழே தண்ணீர் போதிய அளவுக்கு இருக்கிறது என்றும், வேர்கள் நன்றாக பதிந்து நிற்கின்றன என்றும் அர்த்தம். அவை, ஒருபோதும் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், அவைதான் பசுமைக்குக் காரணம். அப்படித்தான் குடும்ப வெற்றிக்கு கண்ணுக்குத் தெரியாத காரணமாக இருக்கிறார் தந்தை.
ஆகவே, வேர்களை மறக்க வேண்டாம். கொண்டாடுங்கள்.
