விஜய் ரசிகருக்கு ஒரு கவுன்சிலிங்

Image

புகழ்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் சிவப்பிரகாசம் அவரது மகன் ஸ்ரீவத்சனை அழைத்துக்கொண்டு வந்தார். ரொம்பவே உரிமையுடன் மகனின் தோளில் கை போட்டபடி பேசத் தொடங்கினார்.

‘’என்னோட ஒரே பையன் ஸ்ரீவத்சன். +1 படிக்கிறான். மனைவி இறந்து ரெண்டு வருஷமாச்சு. அம்மா இல்லைன்னு ரொம்பவும் செல்லம் கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்.

கிளாஸ் பசங்க ரெண்டு பேரை அடிச்சிருக்கான். ஸ்கூல்ல கூப்பிட்டு டிசி வாங்கிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. கையில, கால்ல விழுந்து கெஞ்சிக் கூத்தாடி, மன்னிப்புக் கடிதம் கொடுத்து திரும்பவும் அங்கே படிக்க வைச்சிருக்கேன். அடி வாங்குன பசங்க அப்பா, அம்மாகிட்டேயும் போய் மன்னிப்பு கேட்டிருக்கேன். இனியாவது பொறுப்பா இருக்கணும்னு சொல்லி அனுப்புங்க…’’ என்றபடி வெளி அறைக்குச் சென்று அமர்ந்தார் சிவப்பிரகாசம்.

ஸ்ரீவத்சனிடம் பொதுவாக படிப்பு, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று கொஞ்ச நேரம் பேசியதில் நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பதும், அது தான் சண்டைக்கு அடிப்படக் காரணம் என்பதும் புரிந்ததும் பேசத் தொடங்கினேன்.

எனக்கும் நடிகர் விஜய்யை ரொம்பவே பிடிக்கும். அவர் முதல் படம் வெளியானப்ப, ‘நசுங்கிப்போன டப்பா மாதிரி இருக்கிறார் ஹீரோ’ என்று ஒரு பிரபல பத்திரிகை விமர்சனம் எழுதியது. அவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு இந்த அளவுக்கு ஜெயித்திருக்கிறார். அரசியலில் இறங்குவதும் பெரிய விஷயம் என்றதும் குஷியாகிப் போனான்.

‘’சரி, நீ அவர்களை எதற்கு அடித்தாய்..?’’

‘’அவங்க ரெண்டு பேரும் அஜித் ஃபேன்ஸ். தளபதியை கேவலமாப் பேசினாங்க, நிறைய தடவை வார்னிங் குடுத்தும் கேட்கலை. ஒருத்தனை மட்டும் தான் அடிச்சேன். இன்னொருத்தன் தடுக்க வந்தான், அவனையும் அடிச்சிட்டேன்…’’

‘’அவங்களுக்கும் உனக்கும் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’

‘’இல்லை. ஸ்கூல்ல சண்டை, அடிதடி எல்லாம் சாதாரண விஷயம், அதுக்காக கவுன்சிலிங் வர்றது எனக்குப் பிடிக்கலை’’ முகத்தில் அடித்தது போல் பேசினான்.

’’நீ நேர்மையாகப் பேசுவதால் நானும் நேர்மையாகச் சொல்கிறேன். படிக்கும் வயதில் நிறைய பேர் சிகரெட், மது குடிப்பார்கள். அது தவறு இல்லை. அவர்களில் சிலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியம். நீ இப்போது சினிமா நடிகருக்கு அடிமையாக இருக்கிறாய்…’’ என்றதும் கோபத்துடன், ‘’என்னை பைத்தியங்கிறீர்களா..?’’ என்று கொதித்தான்.

‘’யாரோ ஒரு நடிகருக்காக உன் நண்பர்களை அடிக்கிறாய் என்றால் நீ மனதளவில் பலவீனமாக இருக்கிறாய்’’

‘’சும்மா சொல்லாதீங்க… எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை’’

‘’முதல் ஷோ பார்க்க அதிகம் செலவழிப்பது, தியேட்டரில் சவுண்ட் விடுவது எல்லாம் சாதாரணம். ஆனால், சண்டை, தகராறு, அடிதடி என்பது ஆபத்தானது. ஏனென்றால் சண்டையில் யாராவது தவறி கல்லில் விழுந்தால் கை, கால் உடையலாம். ஏன்  உயிரும் போகலாம். அப்படி நடந்தால் மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மேலும், ரசிகராக இருப்பது உளவியல் ரீதியாக அடிமை மனப்பான்மை’’

‘’அதெப்படி..?’’

‘’உனக்குப் பிடித்த நடிகர் என்ன படம் நடித்தாலும் அதை சூப்பர் என்று சொல்ல வேண்டியிருக்கும். அவர் என்ன பேசினாலும் அதை பாராட்ட வேண்டியிருக்கும். மனதுக்கு தப்பு என்று தெரிந்தும் நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கும்.…’’

‘’நான் அப்படியெல்லாம் இல்லை…’’

‘’விஜய்யின் தோல்விப் படமும் நன்றாக இருக்கிறது என்று நீ சொன்னது இல்லையா, உனக்கு உண்மை தெரியாது என்றாலும் கலெக்‌ஷன் சூப்பர் என்று ஏமாற்றுவாய்.  ரசிக மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் முழு ஈடுபாடு இருக்காது, ஒருபோதும் தலைவராக மாற மாட்டார்கள்…’’

‘’ரசிகனாக இருப்பதெல்லாம் ஒரு தப்பா..?’’

‘’இசையை ரசிக்கிறோம். ஓவியத்தை ரசிக்கிறோம். எழுத்தை ரசிக்கிறோம். சினிமாவையும் ரசிக்கிறோம். நடிகரையும் ரசிக்கிறோம். அது வரை தவறு இல்லை. ஆனால் ஒரு நடிகருக்கு மட்டும் வெறி பிடித்த ரசிகராக,அடிமையாக மாறுவது தான் தப்பு. ஒரு நடிகரை பாராட்ட உனக்கு உரிமை இருப்பது போல், அவரை விமர்சனம் செய்வதற்கு இன்னொருவருக்கும் உரிமை இருக்கிறது.  அது சரி, பொது விழாவில் விஜய்யும் அஜித்தும் சந்தித்தால் சண்டை போடுவார்களா..?’’

‘’அவர்கள் நல்ல நண்பர்கள்… கட்டிப்பிடித்துக்கொள்வார்கள்’’

‘’அவர்கள் சண்டை போடுவதில்லை… அதேநேரம், அவர்கள் படத்தில் ஒருவரையொருவர் கிண்டல் செய்து பஞ்ச் டயலாக் வைப்பது ஏன் தெரியுமா?’’

‘’ஏன்?’’

‘’வியாபார தந்திரம். உங்களைப் போன்ற வெறி பிடித்த ரசிகர்களே அவர்களுடைய மூலதனம். குப்பை படத்தையும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கும், புரமோட் செய்வதற்கும், பாராட்டுவதற்கும் ஒரு மிகப்பெரிய பெரிய கூட்டம் வேண்டும். இது எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்று காலம்காலமாக நடந்துவரும் சூழ்ச்சி. முதல் நாளில் அதிக ரேட் கொடுத்து டிக்கெட் வாங்குபவர்கள், மீண்டும் மீண்டும் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை வைத்தே அவர்களுடைய சம்பளம் அதிகரிக்கிறது. எனவே, அவர்களுடைய மார்க்கெட் வேல்யூக்கு நீ பலியாக வேண்டாம். யாரேனும் ஒருவருக்கு ரசிகராக மாறிவிட்டால் உன்னால் நல்ல சினிமாக்களை ரசிக்க முடியாது…’’

அதன் பிறகும் ஸ்ரீவத்சன் அவன் செய்த தவறை பெரிதாக எடுத்துக்கொள்ளஏ இல்லை. ஆகவே, அவனுடைய தந்தை ஹோட்டல் நடத்திவருவதால் அதை மனதில் வைத்து ஒரு கேள்வி கேட்டேன்.

‘’உங்கள் ஹோட்டலில் சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் பிரச்னை நடந்ததே, அது தெரியுமா..?’’

‘’ம்… இரண்டு பேர் குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார்கள். பில் தரமுடியாது என்று வம்பு செய்து எங்கள் சப்ளையரை அடித்துவிட்டார்கள். என்னுடைய அப்பா அவர்களிடம் சமாதானம் பேசி பணம் வாங்காமலே அனுப்பிவைத்தார். அதன் பிறகு சிசிடிவி காமரா மூலம் அவர்களுடைய புகைப்படம் எடுத்து போலீஸில் புகார் கொடுத்துவிட்டார். அடுத்த நாள் வந்து மன்னிப்பு கேட்டவர்களிடம் அபராதத் தொகையும் சேர்த்து வசூல் செய்துவிட்டார்..’’

‘’அப்போதே அவர்களை அடித்து பணத்தை வசூல் செய்திருக்கலாமே..?’’

‘’வாடிக்கையாளரை அடிக்கும் ஹோட்டல்களுக்கு யாரும் வர மாட்டார்கள். அதோடு அடிதடியில் கண்ணாடி டேபிள் உடைந்து சேதம் ஏற்படலாம். அதனால், என்னுடைய அப்பா செய்தது தான் சரி’’ என்றான். 

’’சரியாகச் சொல்கிறாய். ஆனால், நீ மட்டும் அந்த ரவுடிகள் போன்று அடிதடியில் இறங்கிவிட்டாய். அதனால் உன் அப்பா மன்னிப்பு கேட்டிருக்கிறார். எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வு இல்லை. உன்னால் அவர்களுக்கு இணையாக தர்க்கம் செய்ய முடியாமல் பலவீனம் அடையும் நேரத்தில் தான் அடிதடியில் இறங்குகிறாய் என்பதை புரிந்துகொள். வீரம் என்பது அடிப்பதில் இல்லை, ஜெயிப்பதில் இருக்கிறது. காரியம் சாதிப்பதில் இருக்கிறது. இப்போது உன் தந்தைக்காக நீ ஒரே ஒரு காரியம் மட்டும் செய்ய வேண்டும்…” என்றேன்.

‘’என்ன செய்ய வேண்டும்..?’’

‘’ஒரு மாதம் டயம் எடுத்துக்கொள். உனக்குப் பிடித்த ஏதேனும் ஐந்து புது படங்கள் பார்த்து வந்து, அதுகுறித்து என்னிடம் பேச வேண்டும். இவற்றில் விஜய் படம் எதுவும் இருக்கக்கூடாது, ஒரே ஒரு அஜித் படமாவது இருக்க வேண்டும். அவ்வளவுதான் நிபந்தனை…’’

‘’இது எதற்காக..?’’

‘’சினிமாவில் உன் ரசனையை மேம்படுத்துவதற்காக மட்டுமே…’’

‘’அது எதற்கு? நிறைய படம் பார்ப்பது என்றால் நான் படிக்க வேண்டாமா..?’’

‘’இந்த ஒரு மாதத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சினிமாவுக்கு ஒதுக்கு. அது போதும். நீ வன்முறை பாதையில் சென்றால் வாழ்க்கையே தொலைந்து போகலாம். அதற்கு இது பரவாயில்லை. இனி சினிமா பற்றி பள்ளியில் யாருடனும் நீ பேச வேண்டாம். அவர்கள் பேசினாலும் சிரித்துவிட்டு நழுவு. சினிமா பற்றி என்ன பேச வேண்டும் என்றாலும் என்னிடம் வா… பேசலாம்’’ என்று சொல்லி அனுப்பினேன்.

அதன் பிறகு அவ்வப்போது வருகிறான் ஸ்ரீவத்சன். உலகத்தரமான படங்கள் பார்த்து பிரமிக்கிறான். இப்போதும் அவனுக்கு விஜய் பிடிக்கும். அதேநேரம், மற்றவர்களும் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்று பிரமிக்கிறான். இதுவே நல்ல மாற்றம். 

  • எஸ்.கே.முருகன்,
  • ஞானகுரு கவுன்சிலிங்
  • 9840903586

Leave a Comment