தடைகளை உடைக்கும் சக்தி
மனித வாழ்வில் தடைகள் ஏற்படுவது சகஜம்தான். தடைகளை எதிர்கொள்ளாத மனிதர் என்று யாருமே இருக்க முடியாது. அந்த தடைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதுதான் புத்திசாலித்தனம். மனிதனைச் சுற்றிவரும் தடைகள் என்பது 32 பற்களுக்கு இடையில் ஒரு நாக்கு, கடிபடாமல் செயல்படுவது போன்றது.

வறுமையோ, உடல் ஊனமோ வாழ்க்கையின் தடைகள் ஆகாது. பெரும்பாலும் நம்முடைய ஆசைகளாலேயே தடைகள் ஏற்படுகின்றன. அதிலும் மிக முக்கியமாக பயம், கவலை, சோம்பல், தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, அகங்காரம், தாமதம் ஆகியவையே தடை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. இவை எல்லாமே, ஒன்றுக்குள் ஒன்றாக பின்னப்பட்ட சிலந்தி வலையைப்போன்றது.
எதிர்ப்படும் தடைகளிலும் சிக்கல்களிலும் இருந்து மீளவே முடியாது என்று நினைப்பதுதான் பெரும் தவறு. ஆம், தடை இருக்கிறது என்று தண்ணீர் நின்று போவதில்லை. அருவியாய் விழுந்து, ஆறாக பெருகி ஓடிக்கொண்டே இருக்கும். அதேபோன்று மண்ணில் போட்ட விதை பல தடைகளைத் தாண்டியே மரமாக எழுந்து சாதனை படைக்கிறது. அதனால், தடையைக் கண்டு அச்சப்படுவதில் அர்த்தமே இல்லை.
தடைகளை வெற்றிகொண்டு முன்னேறுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். எல்லா தடைகளையும், தகர்த்துவிட்டுத்தான் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. எறும்பைப்போல தடைகளை தவிர்த்துவிட்டும் செல்லலாம். ஆம், இதுவும் வெற்றி ரகசியம்தான். அதேபோன்று, முடிவு எடுப்பதில் ஏற்படும் தடுமாற்றத்தை தடையாக எண்ண வேண்டாம். ஆம், இந்த தடுமாற்றங்களே நம் கவனத்தை அதிகப்படுத்தி வெற்றியை கொண்டுவரும்.
உதவி செய்வதற்கும், கைதூக்கி விடவும் யாரும் இல்லை என்று தயங்குவதில் அர்த்தமே இல்லை. நம் வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். அதனால், பிறரை குற்றமும் குறையும் கூறாமல், பிறரிடத்தில் அதிகம் எதிர்பார்க்காமல், ‘முடியும்’ என்ற நம்பிக்கையுடன் நடை போட்டால் அனைத்து தடைகளையும் தகர்த்துவிட முடியும். ஆம், அனைத்து தடைகளையும் நாமே வெற்றிகொள்ள முடியும்.
மலையை உடைக்கமுடியுமா என்று தயங்க வேண்டியதில்லை. ஆம், மலையை உடைக்க ஒரு சிறு உளி போதும். அதுபோல் நம் தடைகளை உடைப்பதற்கு நம்பிக்கையே போதும். இன்று பிரபலங்களாய் இருக்கும் பலரும் பல தடைகளைத் தாண்டி வந்தவர்களே. அதுபோல் நாமும் தடைகளைத் தாண்டி உயரம் தொடுவோம். தடைகளைக் கண்டு அஞ்சுபவன் நோயாளி; அதை எதிர்கொண்டு போராடுபவனே பலசாலி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.