காமராஜர் நினைவலைகள் – 2
இன்று முதல்வர் செல்லும் பாதையை அரை மணி நேரத்துக்கு முன்பாகவே அடைத்துவிடுகிறார்கள். முதல்வருக்கு முன்னேயும் பின்னேயும் ஒரு டஜன் கார்கள் போகின்றன. முதல்வருக்கு முன்பு சைரன் கார் செல்கிறது.
இந்த விஷயத்தில் பெருந்தலைவர் காமராஜர் எப்படி நடந்துகொண்டார் தெரியுமா..?
1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்யேற்கப் புறப்பட்டார் காமராஜர். திருமலைப் பிள்ளை வீதி வீட்டிலிருந்து வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.
காமராஜர் காருக்கு முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” ஒலி வந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார் காமராஜர். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்து, “அது என்னையா சத்தம்?” என்று கேட்டார்.
அந்த அதிகாரி, ‘’ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார்.
“இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் ஒருவர் காவல் துறையினர் கார் சென்றதும், பின்வந்தது காமராஜர் கார் என்பதை அறியாமல் நிறுத்திவிட்டு சிக்னலில் அடுத்த வரிசையில் கார்களை அனுப்பினார்.
காவலரைத் தாண்டி காமராஜர் கார் செல்லும்போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடுநடுங்கிப் போனார். முதல்வர் காரை நிறுத்திவிட்டோம் என்று பதறிப்போனார். மேலதிகாரிகள் அந்த காவலரிடம், ‘முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுவிடு’ என்று அனுப்பிவைத்தார்கள்.
காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்ற காவலரிடம் விஷயத்தைக் கேட்டார். மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜரோ, ‘உங்க வேலையைத்தான் பார்த்தீங்க, சந்தோஷம்’’ என்று பாராட்டி அனுப்பிவைத்தார்.
காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
