சிக்கன் பிரியாணி ரெடி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் குடித்துவிட்டு வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தலைமைக் கழகத்தில் இருந்து இது குறித்து அறிவிப்பு வரவில்லை என்றாலும் செய்தி தீயாய் பரவுகிறது.
இது போலவே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் தலைமைக் கழகத்தின் அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு என்று ஒரு சர்குலர் வெளியாகியுள்ளது. அதன்படி, தோழர்கள் மது அருந்திவிட்டு மாநாடு பகுதிக்கு வரக்கூடாது. அமரும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் வழியில் சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. தண்டவாளம், கிணறு, ஆறு போன்ற பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு இருக்க வேண்டும்.
பெண்களுக்கும் காவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். மருத்துவக் குழு, தீயணைப்புத் துறைக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும். வண்டியில் வரும் அன்பர்கள் தொங்கிக்கொண்டு வருதல், சாகசம் புரிதல் இருக்கக்கூடாது. பெரிய வாகனங்களில் வருபவர்கள் முன்கூட்டியே வந்துவிட வேண்டும்’’ என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முதல் மாநாட்டில் அசைவத்திற்கு சிக்கன் பிரியாணியும் சைவத்திற்கு தலைவாழை இலை போட்டு சாப்பாடு வழங்கப்பட இருக்கிறதாம். மாநாட்டில் போதிய கழிவறை வசதியும் ஸ்கீரினிங் வசதியும் செய்யப்படுகிறது. மழை வந்துவிட்டால் ரசிகர்கள் ஒதுங்கி நிற்கும் வகையில் இரண்டு பக்கமும் மட்டும் கூரையுடன் பந்தல் அமைக்கவும் யோசனை இருக்கிறதாம்.
இன்னும் என்னென்ன தகவல்கள் வருகிறது என்பதைப் பார்க்கலாம்.