அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் போதைக்கு ஆதரவு தீர்மானம்..?

கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடத்தப்பட்டது. நாற்பது பேராவது கலந்துகொள்வார்களா என்று பலரும் கிண்டல் செய்த நேரத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் நிரம்பிவழியும் அளவுக்கு நிர்வாகிகள் வந்து குவிந்தனர். இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள் இவை.

முதல் தீர்மானமாக மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து கட்சியை வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25-ஆம் தேதிக்குள் குறைந்தது 5000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர்ச் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும் என்றும் இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களை முறையாக அமல்படுத்த சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உரிய முறையில் நிர்ணயித்து, அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும்m தீர்மானம் வலியுறுத்துகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்களில் ஒன்றாக போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த விவகாரம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மனசாட்சியுள்ள யாரும் தமிழகத்தில் போதைப் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்ல மாட்டார்கள். கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என்று திருமாவளவன் போதைக்கு எதிராக மாநாடு நடத்தும்போது, இப்படி பாராட்டு தெரிவிக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *