பாசம் என்பது உண்மையல்ல.
அது ஒரு தனியார் மருத்துவமனை. பரபரப்பான ஒரு காலை நேரம்.
அறுவை சிகிச்சை செய்வதற்கான ஆலோசனை நடந்த நேரத்திலேயே, உடல் திடீரென துடிக்கத் தொடங்கி உயிரை இழந்துவிட்டான் கணவன். தன் கண் முன்னே ஒருசில நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதைக் கண்டு கொஞ்சநேரம், மிரட்சியுடன் நின்ற பெண்.. திடீரென பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள்.
இளம் வயதிலேயே கணவனை இழந்து கதறும் பெண்ணின் குரல், அந்த மருத்துவமனையையே உலுக்கிப் போட்டது. அவள் அழுகையில் உறைந்து நின்ற ராமச்சந்திரனைப் பார்த்து புன்னகைத்தார் ஞானகுரு.
’’அந்த பெண் அழுவதன் காரணம் பாசம் என்றா நினைக்கிறாய் ராமச்சந்திரா… அது பாசம் அல்ல பயம்’’ என்று புன்னகையை அதிகப்படுத்தினார்.
சட்டென கோபமாகி ஞானகுருவை ஒரு கேவலப் பார்வை பார்த்தான். ’’என்ன சொல்றீங்க சாமி… அந்தப் பெண்ணுக்கு கணவன் மீது பாசம் இல்லைன்னா சொல்றீங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?”’
’’ஆம் ராமச்சந்திரா… கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும் உண்மைகளை புரிந்துகொள்ளத்தான் வேண்டும். நெருங்கியவரின் மரணத்தின் போது வெளிவரும் கண்ணீர் இறந்தவருக்கானது அல்ல… நமக்கானது. இனி அவரது உதவியின்றி, இந்த உலகில் எப்படி வாழப் போகிறோம்? அவரால் இதுவரை கிடைத்த சந்தோஷங்களும், வசதிகளும், தொந்தரவுகளூம் இனி கிடைக்காமல் போய்விடுமே என்ற ஆதங்கம். இறந்தவர் துணையில்லாமல், இனி வலிமையுடன் செயல்பட முடியாதே என்ற பயம்.
கணவன் இறந்தபின் கதறி அழுகிற மனைவி, தன் தாலி பறிபோனதுக்கு மட்டுமே அழுவது இல்லை. விவரம் அறியாத வயதில் நிற்கும் இந்தக் குழந்தைகளை இனி எப்படி கடைதேற்றுவேன் என்ற அச்சம்தான் பெரும் அழுகையாக வெடிக்கும். மனைவி இறந்ததும் ஆண் அப்படியெல்லாம் அழுவதில்லை, ஏனென்றால் அவனுக்கு பொருளாதார பயம் இல்லை. மேலும், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கும்…’’ என்றேன்.
’’சும்மா எதையாவது சொல்லி பயமுறுத்தாதீங்க சாமி…’’ என்றான்.
’’உண்மை ராமச்சந்திரா. என்னைப் பொறுத்தவரை பெண்தான் மிகப்பெரிய சுயநலவாதி. ஆனால் தன்னைப் பற்றி நினைப்பதில் அல்ல… தன்னையும் தாண்டி தன் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் அவள் மிகப்பெரிய சுயநலவாதி. உலகின் மற்ற எல்லா உறவுகளுக்கும் இரண்டாம் இடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராகிற சுயநலவாதி. அதனால்தான் உலகம் முழுவதும் குடும்பங்கள் நெருக்கமும் சகிப்புத்தன்மையும் இல்லாமல் தவிக்கும்போதும்… நம் தேசத்தில் உறவுகளுக்கான மகிமை மாறாமல் இருக்கிறது…’’ என்றார்.
’’நம்ப முடியலை சாமி…’’ என்று தடுமாறினான்.
’’இன்று பேப்பரில் ஏதாவது மரணச் செய்தி படித்தாயா?’’
’’இன்றைக்கு என்ன… தினமும்தான் பார்க்கிறேன். துக்கச் செய்தி… வயிற்றெரிச்சல் செய்தியைத் தவிர வேறு என்ன பேப்பரில் வருது?’’
’’சரி… பேப்பரில் பார்த்த எத்தனை மரணங்களுக்கு நீ அழுதிருக்கிறாய்..?’’
அமைதியாக இருந்தான் ராமச்சந்திரன்.
’’எந்த மரணத்திற்கும் அழுதிருக்க மாட்டாய், ஏனென்றால் அவர்களால் உனக்கு ஆவப்போவது எதுவும் இல்லை. உன் பக்கத்து வீட்டுக்காரன், பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் செத்துப்போனால் வருத்தப்படுவாய், ஆனால் கதறி அழ மாட்டாய். ஏனென்றால் அவர்கள் இனி உனக்கு எந்த உதவியும் செய்யப் போவது இல்லை. ஆனால் உன் அம்மா இறந்தால் தாங்க முடியாமல் கதறியழுவாய். ஏனென்றால் அப்புறம் உனக்கு யார் சமைத்துப் போடுவது? என்ற கவலையில் அழுவாய்… இனி மரணங்கள் பற்றிக் கேள்விப்படுகையில் உன் உள்மனது என்ன சொல்கிறது என்று கேட்டுப்பார்…’’
கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ராமச்சந்திரன், ‘‘சாமி… மரணத்தைப் பத்தி ஆழமா ஆராய வேண்டாமே… நாம இவ்வளவுதானான்னு கேவலமா இருக்கு… மனசு கலவரமா இருக்குது’’
’’ராமச்சந்திரா… நீ பயப்படுவதால் மரணம் வராமல் போய்விடுமா? நிழல் போன்று நம்முடன் இணைந்தே இருக்கிறது மரணம். அதனை சிநேகத்துடன் பார்க்கக் கற்றுக் கொள். குழந்தைகள் கடற்கரையில் மணல் வீடு கட்டி, கற்களால் அலங்காரம் செய்து சந்தோஷமாக விளையாடுவார்கள். தாயின் அழைப்புக்குரல் கேட்டதும், அப்படியே மணல் வீட்டை மறந்துவிட்டு தாயுடன் சென்று விடுவார்கள். அதுபோன்று மரணம் அழைக்கும்போது, இந்த உடலை விட்டுச் செல்லும் மனநிலையுடன் எப்போதும் தயாராக இரு. இந்த உலகில் நீ சேமித்தது எதுவும் உன்னுடையது இல்லை என்ற எண்ணம் இருந்தால் மரணம் பற்றிய பயம் வராது’’ என்றார்.
இன்னமும் மிரட்சியில் இருந்தான் ராமச்சந்திரன்.