அட்மின் அரசியல் அவமானம்
அன்புமணியைப் போன்று நானே முதல்வர் என்று சொல்லாமல், சீமான் போன்று எ.கே.47 கதை சொல்லாமல், அண்ணாமலை போன்று நண்பர்களிடம் பணம் வாங்காமல் அரசியல் கட்சித் தலைவராக இயங்கிவந்த திருமாவளவனின் சமீபத்திய செயல்பாடுகள், அவரையும் சராசரி அரசியல்வாதியாகவே மாற்றிவிட்டது.
மதுவிலக்கு ஒழிப்பு மாநாடு என்ற போதே அவருடைய சாயம் வெளுத்துவிட்டது. ஏனென்றால், மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என்று கடந்த 2021 தேர்தல் அறிக்கையிலே அதனை தி.மு.க. தூக்கி வீசிவிட்டது. எனவே, அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு இது பற்றி பேசுவது அவசியம் இல்லை. மேலும், மதுவிலக்கு சாத்தியமாகும் சூழல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எல்லா பக்கமும் மது விற்பனை ஜோராக நடக்கும் போது தமிழகத்தில் மட்டும் சாத்தியமில்லை.
ஆனாலும் மதுவிலக்கு மாநாடு என்று நடத்தினால் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுவதில் எதற்குப் பாகுபாடு? அ.தி.மு.க. வரலாம், பாம.க.வுக்கு அனுமதியில்லை என்பதெல்லாம் அரைவேக்காடு அரசியல். அடுத்து நடந்தது உச்சபட்ச காமெடி. இப்போது தேர்தல் விவகாரம் எதுவும் இல்லை எனும்போது, ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்பதெல்லாம் பரபரப்புக்கு மட்டுமே உதவும். அந்த வீடியோவைப் போட்டது தேவையில்லாத விவகாரம் என்றால் அழித்ததும் அதை மீண்டும் போட்டதும் முதிர்ச்சியில்லாத குப்பை அரசியல். அதுவும் அட்மின் அழித்துவிட்டார் என்று பேசுவதெல்லாம் இவரும் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்துவிட்டார்.
அதனாலே மக்கள் நலக்கூட்டணியில் நின்று திருமாவளவன் கட்சி வாங்கிய வாக்குகளை தி.மு.க.வினர் திட்டம் போட்டு வெளியிட்டு அவமானம் செய்கிறார்கள். அந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இரண்டாம் இடத்தை விடுதலை சிறுத்தைகள் பெற்றது. அது, காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் வாங்கிய 48,363 வாக்குகள். செய்யூர்- 17,927 – கள்ளக்குறிச்சி -17,492 – மானாமதுரை- 7,493 – சோழவந்தான் – 7,357 5 – துறையூர்- 6,281 6 – ஆ.கே.நகர் – 4,195, புவனகிரி- 33,662, வானூர்- 23,873, குன்னம்- 19,853, சோழிங்கநல்லூர் -15,129, ஸ்ரீபெரும்பத்தூர்- 13,679, ஊத்தங்கரை- 12,669. மயிலம் – 10,866, திருவிடை மருதூர் – 10,622, ஆத்தூர் (சேலம்) – 8,532, வந்தவாசி- 7,745, திருவள்ளூர்- 7006 பொன்னேரி- 5,566 , அரக்கோணம்- 5,213, ராசிபுரம்- 4,341, பரமக்குடி- 3,780, வேலூர்-2,590 , சேலம் தெற்கு – 3,983 என்று தான் வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள்.
இப்போது கட்சி 10 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்றாலும் கூட, இப்படியெல்லாம் குழப்படி செய்வது எதற்காக திருமா..? இத்தனை வீரம் பேசியவர் தனித்து நிற்கலாம் அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகலாம். மீண்டும் ஸ்டாலினிடம் சமாதானம் பேசுவது என்றால் அதிகாரம் பற்றி பேசியது எல்லாம் நடிப்பா..? நடுநிலை மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை உடைத்துக்கொள்ள வேண்டாமே.