கிரிக்கெட் விளையாட்டு இப்படியா தொடங்கியது..?

Image

வரலாற்று சுவாரயஸ்யம்

நம்மூர் கிட்டிபுல் ஆட்டமும் கிரிக்கெட் ஆட்டமும் கிட்டத்தட்ட ஒன்றே தான். ஆனால், அந்த கிட்டி புல் ஆட்டத்தை மேம்படுத்தத் தவறியதால் அந்த விளையாட்டும் அழிந்தே போனது. கிட்டி புல் பாதிபில் சிறுவர்கள் தென்னை மட்டையை வைத்து கற்களை எறிந்து விளையாண்டனர். அப்படித்தான் கிரிக்கெட் பிறந்தது என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இதையெல்லாம் யாரும் பதிவு செய்யவில்லை என்பதால் கிரிக்கெட் ஆட்டம் இங்கிலாந்துக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் கிரிகெட் எப்போது பிறந்தது என்று துல்லியமாக அறியப்படவில்லை. அதேநேரத்தில் கிராகெட் என்று அழைக்கப்பட்ட ஆட்டத்திலிருந்து பிறந்திருக்கலாம் எனவும், பிரெஞ்சு மொழியான  கிரிக்கேவிலிருந்து கிரிக்கெட் தோன்றியிருக்கலாம் என்றும் பலவாறு கருத்துகள் சொல்லப்படுகிறது.

கிராகெட் ஆட்டம் பிரான்சு நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்ததாக அறியப்படுகிறது. இதனை  ஆங்கிலேயர்கள், இங்கிலாந்துக்குக் கொண்டுசென்று, ஆட்டத்தின் அமைப்பை மாற்றி கிரிக்கெட்டாக வடிவமைத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், பிரான்ஸ் மக்கள் கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்ற தகவலும் உண்டு. ஆனால், இங்கிலாந்தில் இந்த ஆட்டம் எப்போது தோன்றியது, எங்கு தோன்றியது என்பதையும் திட்டவட்டமாக குறிப்பிட இயலாது.


இங்கிலாந்தில் முன்பு விளையாடப்பட்ட கிளப் பால் என்கிற ஒரு விளையாட்டு மூலம் கிரிக்கெட் பிரிந்ததாக சொல்லப்பட்டாலும் அதுபற்றிய குறிப்புகள் இல்லை. அதுபோல் ஸ்காட்லாந்தில் ஆடப்பட்டு வந்த கேட் அண்டு டாக் என்ற ஆட்டத்தின் அடிப்படையில் கிரிக்கெட் வந்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் கேட் அண்டு டாக் ஆட்டமே டிப்கேட் மூலம் வந்தது என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கையில், டிப்கேட் ஆட்டத்துக்கு முன்பே கிரிக்கெட் இருந்துள்ளது என்கின்றனர், ஆய்வாளர்கள்.  இதுதவிர, கிரிக்கெட் ஆட்டம் தோன்றுவதற்கு ஸ்டூல் பால்தான் காரணம் எனச் சொல்பவர்களும் உண்டு. அதுவும் கிரிக்கெட்டுக்குப் பிறகு தோன்றியதே என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.


இறுதியில், லண்டன் நகரத்தில் உள்ள அரசர்கள் நூலகத்தில் இருந்த படங்கள் மட்டுமே, கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் தோன்றியதாக தெரிவிக்கின்றன. அங்கிருந்த ஒரு படத்தில் பந்து வீசுவதும், பேட் பிடிப்பதுமான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

1344ம் ஆண்டில் அந்த ஓவியம் வரையப்பெற்றிருப்பதால், அப்போதுதான், இங்கிலாந்தில் கிரிக்கெட் தோன்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால், 12 அல்லது 13வது நூற்றாண்டில்தான், விளையாட்டு  தோன்றியிருக்க வேண்டும். ஆனால், 1300 லேயே விளையாடப்பட்டதாகவும் சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1493ம் ஆண்டு இங்கிலாந்தில் தரிசு நிலம் குறித்த வழக்கு ஒன்றின்போது, நீதிபதி முன்பு வாதாடிய ஜான் டெர்ரிக் என்பவர், தாம் அந்த நிலத்தில் கிரிக்கெட் விளையாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆதலால், இங்கிலாந்தில்தான் கிரிக்கெட் தோன்றியிருக்க வேண்டும் என்பதே பல ஆய்வாளர்களின் முடிவாக இருக்கிறது.
எது எப்படியோ, கிரிக்கெட் எங்கு தோன்றினால் என்ன? அதன் விறுவிறுப்பு இன்றைய தலைமுறையினரை சுண்டியிழுத்து வைத்திருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சிக்குரியது.

ஆரம்பத்தில், அந்த ஆட்டம் முதலில் கிராமப்புறத்தில்தான் தோன்றியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கெண்ட் மாகாணத்தில் உள்ள வீல்டு மற்றும் சரே சசக்ஸ் போன்ற பகுதிகளில் ஒருவகை பொழுதுபோக்கு ஆட்டமாக விளையாடப்பட்டிருக்கிறது. பிறகு செல்வந்தர்களும், பிரபுக்களின் குடியில் வந்தவர்களும் விளையாட ஆரம்பித்தனர். இவர்கள் விளையாடுவதற்காக அப்போது, லண்டன் மாநகரத்தில் பின்ஸ்பரி என்ற இடத்தில் ஒரு மைதானம் இருந்தது.

இந்த மைதானத்தில்தான் மிகப் பெரிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்படி போட்டிகள் நடைபெற்றபோது பல பிரச்சினைகளும் எழுந்துள்ளன. அதனால் இரண்டு குழுவினரும் இணைந்து இணக்கமான விதிமுறைகளை வகுத்துக்கொண்டனர்.
இந்த விதிமுறைகள் குறித்து பக்லி என்பவர்,  ‘அன்று தோன்றிய விதிமுறைகள் எல்லாம் பந்தயத்துக்காக கட்டியிருந்த பணத்தை அடிப்படையாகக் கொண்டு, அமைந்திருந்தனவே தவிர, ஆட்டம் சீராக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை’ என்கிறார்.

ஆனால், 1744-ம் ஆண்டு கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்த ஆண்டு கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இப்படி வளர்ந்த கிரிக்கெட்டை, மேலும் முன்னேற்றும் வழியில் இங்கிலாந்து நாட்டினர் ஈடுபட்டனர்.  மறுபுறம், 16ம் நூற்றாண்டில் அயர்லாந்தில் கிரிக்கெட் பந்துகளையும் ஸ்டெம்புகளையும் எரித்துவிட வேண்டும் என சட்டம் போடப்பட்டது.

மேலும் 1623ம் ஆண்டு, அயர்லாந்து சாக்ஸ் மாகாண கோயில் திடலில் கிரிக்கெட் விளையாடிய 6 பேர் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின. 1666ம் ஆண்டு செயிண்ட் அல்பன்ஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட்டில், அரசவையினரும் அரசரும் மெய்மறந்து ஈடுபட்டிருந்தனர் என்கின்றன, சான்றுகள். அந்தச் சமயத்தில் வேல்ஸ் இளவரசன் என்று அழைக்கப்பட்ட பிரடரிக் என்பவர் கிரிக்கெட் ஆட்டத்தில் மிகவும் ஈடுபாடு உடையவராக இருந்தார்.

1750ம் ஆண்டு ஒருமுறை அவர் கிரிக்கெட் விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக அவரது காலில் பந்துபட்டது. இதுவே, அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தது என அப்போது பேச்சு எழுந்தது. ஆனால், அதை அரச குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன், அவருக்குப் பின் வந்த வாரிசுகளும் இதை மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்தனர்.  
இப்படி வளர்ந்த கிரிக்கெட், 1750 – 1790 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சூதாட்டத்தின் சொர்க்கமாக மாறிப்போனது. கிரிக்கெட்டில், செல்வந்தர்கள் பணம் வைத்து சூதாடினார்கள். இப்படி பணம் கட்டி ஆடுவதற்காக ஒரு கூட்டமே இருக்குமாம். சில சமயங்களில், இவர்கள் போட்டி நடைபெறும் இடத்துக்கு நேராகச்  செல்லாமல் கூலிக்கு ஆட்களை வைத்து சூதாடுவார்களாம். அப்படி ஒருசமயம், ஒரு குழுவைச் சேர்ந்த சிறந்த ஆட்டக்காரரை இடம்பெறாமல் செய்தால் எதிர் குழு வெற்றி பெற்றுவிடும் என்பதற்காக, அவரது மனைவி இறந்துவிட்டார் என அந்த ஆட்டக்காரரிடம் பொய் சொல்லி அவரை விளையாட விடாமல் செய்தார்களாம். அந்தளவுக்கு, கிரிக்கெட்டில் சூதாட்டம் இருந்திருக்கிறது.

அதன்பிறகு அதிலிருந்து மாற்றங்கள் வரத் தொடங்கின. அதற்காக, சில விதிமுறைகளையும் வகுக்கத் தொடங்கினர். அதாவது, பந்தயத்தில் தோற்றாலும் ஜெயித்தாலும் சண்டையிடக் கூடாது, புறம் பேசக்கூடாது என விதிமுறைகள் இயற்றப்பட்டன.  
ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் இரண்டு சிறு குழிகள் புல்தரையில் தோண்டப்பட்டு இருந்தன. பந்தை அடித்து ஆடும் ஆட்டக்காரர், ஓடிவந்து மறுமுனையில் கோட்டைத் தொடுவதற்கு முன்  அந்தக் குழியில் பந்தை உருட்டிவிட்டால், அவர் ஆட்டமிழந்துபோவார். அதுவே, விக்கெட் எனச் சொல்லப்பட்டது. குழிகளுக்கும் கோட்டிற்கும் இடையிலுள்ள தூரம் 46 அங்குலமாக இருந்தது. அதேபோல், ஆரம்ப நாட்களில் கையில் பந்தைக்  கீழாகப் பிடித்து வீசி எறிந்துள்ளார்கள்.

அந்தச் சமயத்தில் கிரிக்கெட் விளையாடும் தரையை ஆடுகள் மேய்ந்து நாசம் செய்ததால், கனமான இரும்பு உருளையால் தரையை உருட்டிச் சரிசெய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. முதன்முதலாக 1870ம் ஆண்டு அதுபோல் லார்டு மைதானத்தில் செய்யப்பட்டது. மேலும், பந்தின் அளவும், கையை சுழற்றி பந்தை எறியும் முறையும் பின்பு நடைமுறைக்கு வந்தது. விக்கெட்டுகளாக ஸ்டெம்புகள் 1700ம் ஆண்டு உருவெடுத்தன. இப்படி பல வகையில் மாற்றம் பெறத் தொடங்கிய கிரிக்கெட்,  1709ம் ஆண்டு வெளியுலகுக்குத் தெரியும்படியாக லண்டன் நகரத்துக்கும் கெண்ட் மாகாணத்துக்கும் இடையே போட்டியாக நடைபெற்றது.

அதன்பிறகு, 1729ம் ஆண்டு கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்திற்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதைவிட பெரும் போட்டி ஒன்று, 1744ம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டுதான் கிரிக்கெட் விளையாட்டிற்கான புதிய விதிகளும் உருவாக்கப்பட்டன. 1760ம் ஆண்டு கிரிக்கெட்டுக்காக சங்கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதன் வாயிலாக 1774ம் ஆண்டில்  கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அந்த விதிமுறைகளே இன்றும் நடைமுறையில் உள்ளது என்றாலும், அதில் ஒரு சில தற்போது மாற்றம் பெற்றிருக்கின்றன.
1884ம் ஆண்டு பந்தை அடித்து ஆடும் வீரர்கள் 11 அல்லது 12 இருக்கலாம் எனவும், 22 பேர் அதை தடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என விதி உருவாக்கப்பட்டது. கிரிக்கெட்டில் தொடர்ந்து உருவான மாற்றங்களாலும்,  விதிமுறைகளாலும் 1859ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், கனடாவில் போய் விளையாடினர். அதேபோல், 1861-62ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் போய் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதன்பிறகு, படிப்படியாக தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியுசிலாந்து நாடுகள் வரை சென்றது.

இந்தியாவில் 1721ம் ஆண்டு ஆரம்பமாகியது. இப்படி உருவான கிரிக்கெட், இன்று பல பரிமாணங்களைத் தாண்டி நிற்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20/20 என எல்லாப் போட்டிகளுமே சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதுபோல், உலகக் கோப்பை முதல் உள்ளூர் ஐ.பி.எல். போட்டிகள் வரை அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாய் உள்ளது.

எதிர்காலம் இன்னும் சுவையாக கிரிக்கெட் மாற்றம் அடையும் என்று நம்புவோம்.

Leave a Comment