அசைவம் சாப்பிடுவது பாவமா..?

Image

பசியே கடவுள்

மரத்தடியில் தேமே என்று படுத்துக்கிடந்த ஞானகுருவை நோக்கி வண்டியில் வந்த இளைஞன் ஒருவன், ஒரு சாப்பாட்டு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஞானகுருவின் அருகே, பழனிக்கு பாதயாத்திரை செல்லும் சில பக்தர்கள் படுத்திருந்தனர். அவர்களுக்கும் பொட்டலத்தைக் கொடுத்தான்.

மற்றவர்கள் அவசரம்  அவசரமாக பிரித்து சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் பொட்டலத்தில் இருந்த தயிர் சாதத்தை அவசரம் அவசரமாக விழுங்கினார்கள். ‘’சாமி நீங்க சாப்பிடலையா..?” ஒருவர் கேட்டதும் வெறுமனே சிரித்து வைத்தார்.

‘’அவருக்கு தயிர் சாதம் வேண்டாமாம்… பிரியாணிதான் பிடிக்குமாம்..” ஒருவன் சொல்லிவிட்டு பலமாக சிரித்தான்.

’’ஏன்… நீ பிரியாணி  சாப்பிடமாட்டாயா..?”

‘’இல்ல சாமி. நாங்க சுத்த சைவம்… என்ன இருந்தாலும்  உயிரைக் கொன்னு சாப்பிடுறது பாவமில்லையா சாமி… அதனாலதான்!’’ என்றான் பெருமையுடன்.

’’அப்படின்னா… தாவரத்துக்கு உயிர் இல்லையா?’’ கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாமல் அமைதி காத்தார்கள். ‘’நான் எது கிடைத்தாலும் சாப்பிடுவேன்… அசைவத்தையும் நான் ஒதுக்குவதில்லை…’’ என்றார் ஞானகுரு.

’’சாமி தப்பா நினைக்காதீங்க… உலகத்தையே வெறுத்த உங்களால் அசைவத்தை ஒதுக்க முடியவில்லையா?’’ ஒருவன் முன்வந்து கேட்டான்.

’’உலகத்தை நான் வெறுத்ததாக யார் சொன்னது, இந்த உலகம் மிகவும் பிடித்திருப்பதால்தான் சந்தோஷமாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன், அசைவத்தை ஏன்  ஒதுக்க வேண்டும். அதுவும் உணவுதானே..!’’

’’உயிர்க் கொலை பாவமில்லையா?’’

’’ஏதாவது ஒன்றை தின்று வாழும்படிதான் எல்லா உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. பயிராகவும் இருக்கலாம், உயிராகவும் இருக்கலாம். எது கிடைக்கிறதோ, எது பிடிக்கிறதோ அதை சாப்பிட வேண்டியதுதான். ஏன்… கடவுளே பிள்ளைக்கறி சாப்பிட்டவர்தானே!’’

’’அசைவம் சாப்பிடாமலும் வாழ முடியும் எனும்போது, எதற்காக இன்னொரு உயிரை உணவுக்காக கொல்ல வேண்டும்?’’

’’மனிதன் மாமிசபட்சனிதான். மாமிசம் கிடைக்காத நேரத்தில் அல்லது பிடிக்காத பொழுதில்தான் தானாக விளைந்து கிடைத்த காய், கனிகளை உட்கொண்டான். வேட்டையாட முடியாதவர்கள் நிரந்தரமாக இயற்கை உணவை கடைப்பிடித்தார்கள். மனித குலத்தில் தோன்றிய முதல் பிரிவே உணவில்தான் ஏற்பட்டது. உடல் வலிமை காட்டி ஜெயிக்க முடியாத தாவர உணவாளர்கள், அவர்களது உணவுப் பழக்கத்தை உயர்த்திக் காட்டி சிறப்பிடம் பிடிக்க முயன்றார்கள். உயிர்கள் மீதான பாசத்தினால், தாவர உணவு சாப்பிடுவதாகச் சொல்லி தங்களை உயர்த்திக் கொண்டார்கள். உண்மையில் உணவு என்பது ஒரு பழக்கம்தானே தவிர, அதில் உயர்வும் இல்லை, இகழ்ச்சியும் இல்லை…’’

’’அப்படி என்றால் உயிர்களைக் கொல்வது பாவமில்லை என்று சொல்கிறீர்களா?’’

’’ஒரு கொத்தமல்லிச் செடியை வேரோடு புடுங்கி, தண்ணீரில் நனைத்து அப்படியே அம்மியில் வைத்து உப்பு, புளி, மிளகாய் சேர்த்து நசுக்கித் துவையலாக்குவது பாவமில்லை என்றால் கோழியைக் கொன்று தின்பதும், மீனை வறுத்து உண்பதும் பாவமில்லைதான்’’

’’என்ன இருந்தாலும் தாவரங்கள் மனிதனுக்காக வளர்பவை, வளர்க்கப்படுபவை… இல்லையா?’’

’’இந்த உலகில் வாழ மனிதனுக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ, அத்தனை உரிமை  ஒவ்வொரு தாவரத்துக்கும் இருக்கிறது. நீங்களே வளர்த்ததாக இருந்தாலும், ஒரு பயிரை அழிக்க உங்களுக்கு உரிமை இருப்பதாக எப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்? தன் வலி, வேதனையை வெளிப்படுத்த முடியாத உயிரினமாக பயிர்கள் இருப்பதால், அதனை சாப்பிட்டால் பாவமில்லை என நீங்களாகவே நினைத்துக் கொள்கிறீர்கள்… அப்படித்தானே?’’

’’ஆனால், நமது மதம் சைவ உணவைத்தானே ஆதரிக்கிறது?’’

’’யார் அப்படிச் சொன்னது? அசைவத்திற்கு தடை போட்ட காரணத்தாலே சமண மதமும், புத்த மதமும் தளைத்து வளர முடியவில்லை. இந்து மதம் இரண்டையும் ஏற்றுக் கொண்டது. கிடா வெட்டி படைப்பதும் இந்து கடவுள்களுக்குத்தானே. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அசைவ உணவை அத்தியாவசியமாகவே மாற்றிவிட்டன. சைவ உணவுப் பழக்கமே உயர்ந்தது என்ற கர்வம் ஒருவருக்கு எழுந்துவிட்டால், அது ஒரு உயிரைக் கொன்றதைவிட கொடிய பாவம்…’’

’’மனசைக் கட்டுப்படுத்த முடியாமல், இப்படி சாக்குபோக்கு சொல்றீங்க சாமி..?’’

’’இந்த ஆயுதத்தை எறிந்துதான் சைவம் சாப்பிடுவது உயர்வானது, அசைவம் பாவகரமானது என்று நம்ப வைக்கிறார்கள்.  கொசு, கரப்பான் பூச்சி, எலி போன்ற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், சைவ உணவாளர்கள் எத்தனை அன்புடன் அவற்றை  நடத்துகிறார்கள் தெரியுமா?  யாருக்கும் தெரியாமல் அசைவம் சாப்பிடுவது, உணவு பழக்கத்தை மறைப்பது  எனக்குப் பிடிக்காது. எனக்கு பிடித்ததை சாப்பிடுகிறேன் அவ்வளவுதான். அசைவம் சாப்பிட்டால் 10 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடத் தேவையில்லை என்பது தெரியுமா? பசிக்கும்போது மட்டும் சாப்பிடு. என்ன உணவு என்பதில் கவனம் செலுத்தாதே…’’ அமைதிக்குப் போனார் ஞானகுரு.

Leave a Comment