• Home
  • சட்டம்
  • இ.எம்.ஐ. கடனுக்காக வீட்டைப் பூட்ட முடியுமா..?

இ.எம்.ஐ. கடனுக்காக வீட்டைப் பூட்ட முடியுமா..?

Image

சட்டம் தெரிஞ்சுக்கோங்க.

மாத சம்பளத்துக்காரர்கள் எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வீடு வாங்கிவிடுகிறார்கள். ஏதேனும் எதிர்பாராத செலவினங்கள் காரணமாக இ.எம்.ஐ. கட்டவில்லை என்றால் வங்கியினர் மிரட்டுவதும், கைது செய்வதாக எச்சரிக்கை செய்வதும் உண்டு. இது குறித்து விளக்குகிறார் வழக்கறிஞர் எம்.நிலா.

’’குடும்பத்தின் நிதிப் பிரச்னையால் கடன் தொகைக்கான இ.எம்.ஐ. செலுத்த முடியாமல்  போகும் நிலைமை எல்லோருக்கும் வரலாம். இதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை. இ.எம்.ஐ. கட்டுவதை நிறுத்துவதால் உங்கள் சிபில் கிரிடிட் ஸ்கோர் சிக்கலாகும் என்றாலும் அதுவும் ஒரு பிரச்னை அல்ல.

காசோலை பவுன்ஸ் ஆனால் அதை கொடுத்தவர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பது உண்மை. சிலர் வீட்டுக் கடனுக்கு காசோலை கொடுத்திருக்கலாம் என்றாலும் அதுவும் இதுவும் ஒன்றல்ல. குறிப்பாக இஎம்ஐ கட்டத் தவறுவது, சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு குற்றமில்லை.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, கடன் இஎம்ஐ செலுத்தாத காரணத்துக்காக யாரும் அவர்களை அழைத்து மிரட்டக் கூடாது. தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இஎம்ஐ கட்டவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதைத் தாண்டி கடன் வசூலிப்பவர்கள் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது. எந்த நேரமும் வங்கியினர் வந்து வீட்டைப் பூட்டி சாவி எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி செய்ய முடியாது.

கடன் வாங்கியவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். பணம் செலுத்தாதபட்சத்தில் அவர்கள் அடகு வைத்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு முன்பு தொடர்புகொள்ள வேண்டும். கடன் வாங்கியவர் ஒப்புதலுடன் மட்டுமே சொத்து ஏலம் விடப்படும்.

கடன் வாங்கியவர் கூடுதல் தவணை கேட்பது, தள்ளுபடி கேட்பது போன்ற நேரங்களில் அதனை வங்கி பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே இது குறித்து வங்கி மேலாளரிடம் பேசி, கடன் காலத்தை நீட்டிக்க அல்லது வேறு ஏதேனும் தீர்வைக் கேட்கலாம்.

இதற்கு மாறாக மிரட்டல் அல்லது வேறு வகையில் ஈடுபடுகிறார்கள் என்றால், சட்டப்படி சந்திக்கலாம். கவலைப்பட அவசியம் இல்லை’’ என்கிறார்.

  • எம்.நிலா, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
  • 72997 53999

Leave a Comment