ஞானகுரு

தனித்தன்மையில் இருக்கிறது பணம்

சம்பாதிப்பது ஈஸி

கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் தலைவன் ஒருவன், ‘’பணம் சம்பாதிக்க ரொம்பவும் கஷ்டமா இருக்குது சாமி, ஏதாவது நல்ல வழி காட்டுங்களேன்…’’ என்றான்.

‘’உடலும் மனமும் உறுதியுடன் இருந்தால் எளிதாக பணம் சம்பாதித்துவிடலாம்…’’ என்றார்.

‘’அதெல்லாம் நல்லாத்தான் சாமி இருக்கு…”

அவனை ஏறெடுத்து பார்த்து, ‘’அப்படியா..? உனக்கு அறிமுகமே இல்லாத ஊரில் உன்னைக் கொண்டுபோய் விட்டால் எப்படி பிழைப்பாய்..?” என்று கேட்டார்.

‘’பிச்சைதான் எடுக்கணும்’’ நொந்துபோய் பதில் சொன்னான்.

‘’உடலும் மனமும் உறுதியாக இருப்பதாகச் சொன்னாய்…. ஆனால், பிச்சை எடுத்துதான் பிழைக்க வேண்டும் என்றும் சொல்கிறாய். இதன் அர்த்தம் உன் மனம் பலமாக இல்லை என்பதுதான். உடன் உடல் பலத்தை உன் மனம்கூட நம்பவில்லை.

உன் உடல் உறுதியுடன் இருந்தால் எங்கே போயினும் உழைக்கவும் பிழைக்கவும் முடியும். ஏனென்றால், கல்லை உடைக்கவும், சுமை தூக்கவும் என கடின உழைப்புக்கு எப்போதும் ஆட்களின் தேவை இருக்கத்தான் செய்கிறது. இதுதவிர, ஏதேனும் ஒரு தனித்திறமையை வளர்த்துக்கொண்டால், சம்பாதிப்பதும் எளிது. உன்னிடம் ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா… இனி கற்றுக்கொள்ளும் எண்ணமாவது இருக்கிறதா..?

‘’இனிமே என்னத்தை சாமி கத்துக்கிறது..?”

‘’இந்த உறுதியில்லாத மனதை முதலில் சீர்படுத்து. எல்லா மனிதருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்த திறமைதான் அவன் கல்வி. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? எங்கேயும் அவன் பணம் எளிதில் சம்பாதித்து வாழ முடியும் என்பதுதான். தனித்திறமைக்காக அதிகம் மெனக்கெட வேண்டாம். உனக்குத் தெரிந்ததை சிறப்பாகவும், முழு ஈடுபாட்டுடனும் செய்.

தெருவைக் கூட்டுவதாக இருந்தால்… நீதான் சிறந்த தூய்மைப் பணியாளராக இருக்க வேண்டும். சமையல்காரன் என்றால், உன் சமையல் வாசம் மக்களை இழுக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுவதாக இருந்தால், புன்னகையுடன் செய். இப்படி ஏதாவது ஒன்றை மகிழ்சியுடன் சிறப்பாகச் செய், பணம் உன்னைத் தேடி தானே வந்துவிடும்…’’

உறுதியான மனதுடன் எழுந்தான் குடும்பஸ்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *