• Home
  • உறவுகள்
  • குட்டி குழந்தைக்கு என்ன சொல்லித் தருவது?

குட்டி குழந்தைக்கு என்ன சொல்லித் தருவது?

Image

குழந்தை வளர்ப்பு முறை

.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது சுவாரஸ்யமாக ஆரம்பித்து, டென்ஷனில் முடிவது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் நடக்கும் சங்கதிதான்.

ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.

சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..

வார்த்தைகள் பழக்கியாச்சா? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !

கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.

குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை

பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.

இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள். புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள்.  

குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும்.

 வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.

குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும்.  குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளியே கொண்டுவரும்.

Leave a Comment