என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 126
தாங்கள் வசிக்கும் இடமும் சுற்றுப்புறமும் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொதுநலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் செயல்படுவார்கள். ஆகவே, கை நிறைய மனுக்களுடன் வந்து அதிகாரிகளை சந்தித்து பிரச்னைகள் குறித்து விளக்கமாகப் பேசுவதற்கு விரும்புவார்கள். ஆனால், இப்படி கோரிக்கைகளுடன் வரும் பொதுநலச் சங்கத்தினரிடம், எந்த விளக்கமும் கேட்காமல் மனுக்களை மட்டும் வாங்கிக்கொண்டு அனுப்புவதிலே மாநகராட்சி அலுவலர்கள் கவனமாக இருப்பதாக மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.
மாநகரின் குறைகளைக் களைவதற்கும் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும், பொதுநலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சம்பளம் வாங்காமல் சேவையாற்றும் ஊழியர்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் இவர்களை சைதை துரைசாமி அணுகுவார். எனவே, இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஆர்வமாக இருப்பார்.
அதேநேரம், மாநகராட்சி அலுவலகர்களின் செயலுக்கும் ஏதேனும் காரணம் இருக்கும் என்று விசாரணை செய்தார். அப்போது தான் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் அதிக வேலை செய்யவேண்டிய சூழல் நிலவுவதை அறிந்தார்.
பொதுவாக பொதுநலச் சங்கத்தினர் கை நிறைய புகார்களுடன் வருவார்கள் என்பதுடன் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். எனவே, பொதுநலச் சங்கத்தினரிடம் புகார் மனுக்களை வாங்கிக்கொண்டு, விளக்கம் கேட்காமலே அவர்களை அனுப்புவதில் அதிகாரிகள் குறியாக இருப்பது தெரியவந்தது. அதிகாரிகளின் வேலைப்பளு காரணமாகவே இப்படி நடந்துகொள்வதைப் புரிந்துகொண்டார்.
எனவே, இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டார். அதாவது, பொதுநலச் சங்கத்தினர் பெரும்பாலும் அதிகாலை எழுந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு பகலில் பல்வேறு வேலைகள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, யாருக்கும் இடையூறு இல்லாமல் பொதுநலச் சங்கத்தினர் அதிகாலை 5:30 மணிக்கு தன்னை வீட்டில் சந்தித்து புகார் மனுக்களைக் கொடுத்து விளக்கமாகப் பேசலாம் என்று அறிவித்தார் சைதை துரைசாமி.
இப்படி ஒரு மேயரா என்று அதிகாரிகளும் பொதுநலச் சங்கத்தினரும் ஆச்சர்யம் அடைந்தார்கள்.
- நாளை பார்க்கலாம்.