விராட் கோலி ஃபிட்னஸ் ஃபார்முலா

ஆல் டைம் ஹீரோ

35 வயதிலும் 20 வயது இளையவர்களுடன் மல்லுக்கட்டி ஜெயிக்கும் அளவுக்கு ஸ்பீட் அண்ட் ஃபிட் ஆக இருக்கிறார் விராட் கோலி. எங்கிருந்து அவருக்கு இத்தனை சக்தி கிடைக்கிறது..?

கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங் மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் பெரும் சாகசம் காட்டும் விராட் கோலி, களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உற்சாகமாகத் திகழ்கிறார்.  உடற்பயிற்சி மட்டுமின்றி உணவும், உட்டச்சத்துமே என்னுடைய ஃபிட்னஸ் ரகசியம் என்கிறார் விராட் கோலி.  

கிரிக்கெட் வர்ணனையாளர் ஜதின் சப்ருவுடன் தன்னுடைய உணவுப் பழக்கவழக்கம் குறித்து விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. வேகவைத்த சிக்கன் மற்றும் வேகவைத்த காய்கறிகளையே நிரம்ப எடுத்துக்கொள்கிறார். அதோடு உணவு உட்கொள்வதை ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார். ருசியை விட ஊட்டச்சத்துக்கே முக்கியத்துவம் என்றாலும் தன்னுடைய உடம்புக்கு எந்த அளவு போதுமோ, அந்த அளவுக்கு மட்டுமே எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கிறார் விராட்.

விமானப் பயணத்தில் கூட விராட் கோலி தனி பேக்கில் அவர் சாப்பிடுவதற்கான நட்ஸ், காபி செட், புரோட்டீன் பார் செட் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அவற்றில் இருந்து தேவையானதை எடுத்து உட்கொள்வதை ஒருபோதும் தவிர்ப்பதே இல்லை.

உடம்பை ஃபிட் ஆகவும் ஸ்பீடாகவும் மனதை திடமாகவும் வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் மேட்ச் இருக்கிறதோ, இல்லையோ தினமும் பயிற்சி எடுத்துக்கொள்வதை கடமையா பிக வைத்திருக்கிறார். விளையாட்டு முடிந்துவிட்டது, அடுத்த தொடருக்கு இடைவெளி 20 நாட்கள் இருக்கின்றன என்பதற்காக உடலுக்கு ஓய்வு கொடுப்பதே இல்லை கோலி. அதேபோல், நிறைய வேலை இருக்கிறது என்பதற்காகவும் பயிற்சிகளுக்கு ஓய்வு கொடுப்பதில்லை.

எந்த சூழல் என்றாலும் உடற்பயிற்சி செய்வதை முதல் கடமையாக நினைக்கிறார். உடல் சரியில்லை என்றாலும், அதற்கேற்ப பயிற்சி செய்கிறார். அதாவது ஆண்டு முழுவதும் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறார். கிரிக்கெட் மைதானம் இல்லாத இடத்திலும் தன்னுடைய பேட், பந்துகளைக் கொண்டு சிறிது நேரமாவது விளையாடுகிறார்.

அவரது உடற்பயிற்சிகள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது உடலுக்கு வலிமை தருவது, உடலுக்கு நெகிழ்வு தருவது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிப்பது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பயிற்சி எடுக்கிறார். அதோடு கார்டியோ பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார். உடல் பாகங்களைப் பாதுகாக்கும் வகையில் கீழ்க்கண்ட பயிற்சி வழிமுறைகளை விராட் கோலி பின்பற்றுகிறார்.

மூட்டுகளுக்குப் பயிற்சி :

சட்டென வேகமெடுத்து ஓடுவதும், கீழே பாய்ந்து பிடிப்பதும் அடிக்கடி குனிந்து நிமிர்வதும் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் முக்கியம். குறிப்பாக கால், கை மூட்டுகள் மிகவும் ஃப்ளக்ஸிபிளாக இருக்க வேண்டும். எனவே மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கு ஸ்ட்ரென்த் ட்ரெயினிங்கில் கவனம் செலுத்துகிறார். உடலின் ஒட்டுமொத்த ஸ்டெபிளிட்டியை பராமரிப்பதிலும், ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் போன்ற நிலைமைகள் தீவிரமாவதையும் இந்த பயிற்சிகள் தடுக்கின்றன. இந்த கடுமையான பயிற்சிகளுக்கு இடையில் யோகாவை சேர்த்துக்கொள்கிறார். அதனால் உடலின் நெகிழ்வுத் தன்மைக்கும், மோஷன் ரேஞ்சை மேம்படுத்தவும், மூட்டு விறைப்பை தணிக்கவும் முடிகிறது.

பேலன்ஸ் ஒர்க்கவுட்

ஓடும்போதும், குனிந்து பந்து எடுத்து வீசும் நேரத்திலும், விரும்பிய திசைகளில் உடலைத் திருப்பி பந்தை அடிப்பதற்கும் உடலில் சரியான பேலன்ஸ் இருக்க வேண்டும். கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் கீழே விழுந்து காயம் அடையலாம். ஆகவே, உடலின் பேலன்ஸ் மற்றும் ஸ்டபிளிட்டியைத் தக்கவைப்பதற்கும் உதவும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நீச்சல் பயிற்சி :

தினமும் அரை மணி நேரமாவது நீச்சல பயிற்சி எடுத்துக்கொள்கிறார். இது ஒரு வகையில் ஏரோபிக்ஸ் எனலாம். இது இதய ஆரோக்கியத்திற்கும் மூட்டுகள் வலிமைக்கும் பயன்படுகிறது.

நீர்ச்சத்து உணவுகள்

எனர்ஜியை அதிகரிக்கவும், எனர்ஜியை இழந்துவிட்டால் அதில் இருந்து மீட்பதற்கும் ஏற்ப விராட் கோலியின் உணவுப் பழக்கம் போதிய அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்கும் அளவுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பழங்கள், காய்கறிகள், மெலிதான புரதங்கள் உணவுப்பட்டியலில் இடம் பிடிக்கிறது. \

காலை உணவு கொஞ்சம் வெயிட்டாகவே எடுத்துக்கொள்கிறார். தினமும் காலையில் மூன்று முட்டைகளின் வெள்ளைக் கருவால் உருவாக்கப்பட்ட ஆம்லெட் மற்றும் ஒரு முழு முட்டை எடுத்துக்கொள்கிறார். இவை தவிர, கீரைகள், பிளாக் பெப்பர் மற்றும் சீஸ். மேலும், கிரில்டு பாகோன் அல்லது ஸ்மோக்டு சால்மன், பப்பாளி, டிராகன் ஃப்ரூட், தர்பீஸ் கலவை எடுத்துக்கொள்கிறர். இவற்றுடன் இறுதியாக லெமன் கலந்த கிரீன் டீ எடுத்துக் கொள்கிறார்.

மதிய உணவுக்கு க்ரில்டு சிக்கன், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, கீரைகள் மற்றும் சில காய்கறிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறார். இரவு உணவுக்கு கடல் உணவுகள் மட்டுமே அவரது விருப்பமாக இருக்கிறது. அதேநேரம், உணவுகளின் அளவு ரொம்பவும் குறைவாக இருக்கும் அளவுக்கு மெனு வடிவமைக்கப்படுகிறது.

இடைப்பட்ட நேரங்களில் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதுடன் நட்ஸ் போன்றவை எடுத்துக்கொள்கிறார். இவை எல்லாவற்றையும் விட நிறைய நேரம் ஓய்வு எடுக்கிறார், குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூங்குகிறார்.

இத்தனையும் சேர்ந்தது தான் கோலியின் சக்சஸ் ரகசியம்.