இதுக்கு இல்லையா இரும்புக்கரம்
அமெரிக்கா போயிருக்கும் ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். பெரிய பெரிய தொழிலதிபர்களை சந்திக்கிறார். ஆனால், இங்கு தமிழ்நாட்டில் வேங்கை வயல் கிராமத்தில் நடந்தது போலவே மீண்டும் ஒரு குரூரம்எருமப்பட்டியில் நடந்தேறியிருக்கிறது.
வேங்கைவயல் சம்பவத்தில் தவறு செய்தவருக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் இப்படியொரு சம்பவம் மீண்டும் நடந்திருக்காது என்பதே அனைத்து மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘’நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயிலும் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சனி, ஞாயிறு வார விடுமுறைகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது, பள்ளியின் சமையலறை, சமையல் கூடத்தின் பூட்டு, பள்ளிச் சுவர் ஆகியவற்றில் மனிதக் கழிவுகளை மர்ம மனிதர்கள் பூசி இருந்ததாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.
இதுபோன்ற இழி செயல் நடைபெறுவதற்குக் காரணம் சமூக விரோதிகள் மீது மென்மையான போக்கினை தி.மு.க. அரசு கடைபிடிப்பதுதான். காவல் துறை மீதான அச்சம் என்பது ஒரு துளிகூட சமூக விரோதிகளுக்கு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி இழி செயலில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்வது மட்டும் அரசின் வேலை இல்லை, தவறு செய்தவர்களுக்கு அச்சமூட்டும் அளவுக்குத் தண்டனை கொடுப்பதும் தான் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.