எஸ்.கே.முருகன்

கவுன்சிலிங்கில் தடுக்கப்பட்ட ‘நீட்’ அனிதா

நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்

ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு அவரது அம்மா, அப்பா இரண்டு பேரும் வந்தனர். பெரும்பாலும் டீன் வயதினருடன் அம்மா அல்லது அப்பா ஒருவர் மட்டுமே வருவார்கள். இரண்டு பேரும் சேர்ந்து வந்திருப்பது, ஸ்வேதா மீது அவர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தைக் காட்டியது.

ஸ்வேதாவின் தாயார் பேசத் தொடங்கினார். ‘’எங்க ஸ்வேதா ரொம்ப நல்லா படிக்கிறா.. வகுப்பில் முதல் மார்க் இல்லைன்னாலும் மூணு அல்லது நாலாவது ரேங்க் வந்துடுவா. இந்த வருஷம் +2 சேர்ந்ததுல இருந்து அவளோட நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரியுது.

காலையில வேகமா எழுந்து படிச்சிக்கிட்டு இருப்பா. அதேபோல் ராத்திரியும் ரொம்ப நேரம் படிப்பா. இப்போ கொஞ்சநாளா அடிக்கடி அழுதுக்கிட்டு இருக்கிறா. கேட்டா… கண்ல தூசு விழுந்திடுச்சு, லேசா வயிறு வலிக்குதுன்னு ஏதாச்சும் காரணம் சொல்றா. ஒரு நாள் பாத்ரூம்ல இருந்தும் அழுகை சத்தம் கேட்டது. கேட்டா, ஒண்ணுமில்லைன்னு சொல்றா. 

ஸ்கூல்ல ஏதாச்சும் பிரச்னையான்னு அங்கே போய்க் கேட்டோம். அங்கே எதுவுமே இல்லை, எப்பவும் போல நார்மலா இருக்கிறதா சொல்றாங்க. அதனால ஃபேமிலி  டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனோம். அவருதான் கவுன்சிலிங் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க….’’ என்று முடித்தார்.

அத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டு ஸ்வேதா அமைதியாக இருந்தார். ஸ்வேதாவைப் பார்த்ததும், ‘’நிஜமாவே காரணம் எதுவுமே இல்லை. திடீர்னு வயிறு வலி இல்லைன்னா ஏதாச்சும் பிரச்னையில அழுகை வருது, அப்புறம் ஃப்ரெஷ்ஷா ஆயிடுறேன். அம்மா தேவையில்லாம பயப்படுறாங்க…’’ என்றபடி வலிந்து சிரித்தார்.

‘’இந்த வருஷம் எப்படியாவது அவளை மெடிக்கல்ல சேர்த்துடலாம்னு ரொம்ப நம்பிக்கையா இருக்கோம். இப்படி இருந்தா கண்டிப்பா அவ நல்ல மார்க் வாங்க முடியாது’’ என்றார் அப்பா.

‘’படிக்கிறது கஷ்டமா இருக்குதா…?’’ என்று கேட்டதும், ‘’இல்லை எப்பவும் போல நார்மலாத் தான் இருக்குது…’’ என்றார் ஸ்வேதா.

பெற்றோர் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஸ்வேதாவிடம் பேசத் தொடங்கினேன். அவருக்குப் பிடித்த நடிகரைக் கேட்டதும் ஒரு மலையாள நடிகரின் பெயரைச் சொன்னார். அது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. நிறைய மலையாள படம் பார்ப்பதுண்டா என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை, அவ்வப்போது பார்ப்பேன் என்றார்.

அவளுடைய வகுப்புத் தோழி கவுசல்யா எப்போதுமே முதல் ராங்க் எடுப்பது எப்படியென்று புரியவே இல்லை என்றாள். யார் மீதாவது காதல் வந்திருக்கிறதா என்று கேட்டதற்கு, ‘’காதல்ன்னு சொல்ல முடியாது. ஒரு பையனை ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்போ அது பற்றி நினைச்சுக்கூட பார்க்கக்கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். இப்போ படிப்பு தான் முக்கியம்’’ என்று ரொம்பவே மெச்சூர்டாகப் பேசினார்.

’’பள்ளியில் அல்லது உறவுகள் யாரேனும் டார்ச்சர் செய்கிறார்களா, யாரைப் பார்த்தாவது பயமாக இருக்கிறதா..?’’

‘’சேச்சே, யாரும் என்கிட்டே தப்பா நடக்க மாட்டாங்க. வேற யாரையும் என் பக்கத்துல கூட அம்மா விட மாட்டாங்க. நிஜமாவே ஏன் அழுகை வருதுன்னு எனக்குத் தெரியலை, ரெண்டு மூணு தடவை அழுத நேரத்தில் அம்மா பார்த்துட்டாங்க. அதை ஏதோ பெரிய பிரச்னைன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. நான் நார்மலா இருக்கேன். இனிமே அழாம இருக்கேன். நீங்க அம்மாகிட்டேயும், அப்பாகிட்டேயும் அப்படியே சொல்லிடுங்க…’’ என்றாள்.

‘’அம்மா, அப்பா சண்டை போடுறாங்களா… வீட்டுல பணப் பிரச்னை ஏதாச்சும் இருக்குதா?’’

‘’இல்லைங்க. எந்த பிரச்னையுமே இல்லை. நிஜமாவே ஏன் அழுகை வருதுன்னு எனக்குத் தெரியலை, ஆனா, அது ஒரு பிரச்னை இல்லை’’ என்றார் தெளிவாக.

’சரி, நாளை ஒரு நாள் மட்டும் வந்துவிடு. நிறைய மதிப்பெண் எடுப்பதற்கு சில வழிகள் சொல்லித் தருகிறேன். ஏதேனும் வகையில் பிரயோஜனப்படுகிறதா என்று பார்க்கலாம்..’’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

ஸ்வேதா கூறிய பதில்களில் இருந்து அவர் ரொம்பவும் புத்திசாலி என்பது புரிந்தது. கவுன்சிலிங்கில் என்ன கேட்பார்கள், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று யோசித்து வந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால், இன்று அவரிடம் பேசுவது எந்த பிரயோஜனமும் இல்லை என்று அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் கையில் ஒரு நோட்டு, பேனாவுடன் வந்து அமர்ந்தார் ஸ்வேதா. ‘’எப்படியாவது ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பதற்கு மட்டும் வழி சொல்லிக்கொடுங்கள்’’ என்று ஆர்வமாகக் கேட்டாள்.

அவள் படிக்கும் வழிமுறைகளைக் கேட்டு, அதில் இருந்த சிக்கல்களை விளக்கி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு சின்ன கோல் செட் செய்து, அதை மட்டும் முடித்தால் தன்னம்பிக்கை வந்துவிடும் என்று பேசிக்கொண்டே, ‘’ஒரு வேளை உன் அம்மா, அப்பா ஆசைப்பட்ட அளவுக்கு மதிப்பெண் எடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை என்றால் என்ன செய்வாய்?’’ என்று சாதாரணமாகக் கேட்டேன்.

அதுவரையிலும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த ஸ்வேதா திடீரென சிலையாக மாறிவிட்டார். சட்டென கண்கள் கலங்கியது. அழத் தொடங்கிவிட்டார். நன்றாக அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். சில நொடிகள் அழுது முடித்தவர் கலங்கிய கண்களுடன் பேசினார்.

‘’எங்க அப்பா இப்போ ஒரு பெரிய ஆஸ்பத்திரியில அட்மினிஸ்ட்ரேஷன் செக்‌ஷன்ல வேலை செய்றாரு. நான் டாக்டராகி அதே ஆஸ்பத்திரியில வேலை பார்க்கணும், எல்லோரும் என்னை மதிக்கணும்னு ஆசைப்படுறார். அவரால் டாக்டராக முடியலைன்னு என் மேல ரொம்பவும் நம்பிக்கை வைச்சிருக்கார்.

நான் தனி ரூம்ல படிக்கிறேன். அம்மாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா, நான் எப்ப எழுந்து லைட் போட்டு படிச்சசலும் எப்படியோ அம்மாவுக்குத் தெரிஞ்சுடுது. உடனே எனக்கு டீ இல்லைன்னா ஹார்லிக்ஸ் போட்டுக் கொண்டுவர்றாங்க.

இப்படி ரெண்டு பேரும் என் மேல ரொம்பவும் பாசம் காட்டுறாங்க. ஆனா என்னால நாலாவது ரேங்க்ல இருந்து கூடுதலா மார்க் எடுக்கவே முடியலை. நான் டாக்டர் ஆக முடியலைன்னா அவங்க ரெண்டு பேரும் ரொம்பவும் மனசு உடைஞ்சு போயிடுவாங்க. இதை நினைச்சுப் பார்த்தாலே எனக்கு அழுகை வந்திடுது. என்னால கண்டிப்பா நிறைய மார்க் எடுக்க முடியாது. இதை எப்படி சொல்லுவேன்…’’ என்று மீண்டும் அழுதார்.

நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை என்று பலரும் நம்புகிறார்கள். உண்மையில் எல்லோருக்கும் மனதில் பயமும், குழப்பமும் வரும் என்பதற்கு உதாரணமாக எதிரில் அமர்ந்திருந்தார் ஸ்வேதா.

அவள் அழுகைக்கான காரணம் புரிந்துவிட்டதால், இனி அதை சுலபமாகத் தீர்த்துவிட முடியும். பொதுவாக பெற்றோர் தங்களுடைய ஆசைகளை, கனவுகளை பிள்ளையின் மீது அளவுக்கு அதிகமாகத் திணித்துவிடுகிறார்கள். பாசத்தைக் காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார்கள்.

இது தவறு என்று தெரியாமலே பெற்றோர் செய்கிறார்கள். பிள்ளைக்கு நல்லது செய்வதாக நினைத்தே இப்படி செய்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்காத சந்தோஷம், மகிழ்ச்சி, பெருமை எல்லாமே பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அது குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக மாறி, அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை உணர்வதில்லை.

ஸ்வேதா அழுது முடித்ததும், ‘’நீ ஏன் அவ்வப்போது அழுகிறாய் என்பதற்கான காரணத்தை உணர்ந்துவிட்டாயா..?’’

அமைதியாக இருந்தார். ‘’நீ உன்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும். உன் தந்தை, தாயின் ஆசையை நிறைவேற்றுவது உன்னுடைய கடமை இல்லை என்பதை முதலில் புரிந்துகொள். பெற்றோருக்காக ஒரு வாழ்க்கையை நீ தேர்வு செய்தால், நாளை உன் பிள்ளையிடம் உன் ஆசையைத் திணிப்பாய். அந்த பிள்ளையும் நள்ளிரவில் எழுந்து அழும்…’’

‘’எனக்கும் மருத்துவம் படிக்கத் தான் ஆசை…’’

விருப்பப்பட்ட துறையில் படித்து ஜெயிப்பவர்கள் ஒரு ரகம் என்றால், எந்த துறை கிடைக்கிறதோ அதில் ஜெயிப்பவர்கள் ஒரு ரகம். உன் பெற்றோர் சின்ன வயதிலிருந்து உனக்கு மருத்துவம் பற்றி கூறி வந்ததால் உன்னுடைய ஆசையும் அதுவாக இருக்கிறது. அவ்வளவுதான். எந்த துறையில் படித்தாலும் உச்சம் தொட முடியும். மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவம் சார்ந்த எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன. அதையும் தேர்வு செய்யலாம். நீ அறிவியல் விஞ்ஞானியாக, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, கம்ப்யூட்டர் நிபுணராக மாறினாலும் உன் தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடையவே செய்வார்கள்.

கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை என்ன படித்தார் என்று தெரியுமா?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்பார்..?’’

‘’இல்லை. சென்னையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தபிறகு காரக்பூர் ஐ.ஐ.டி.யில் உலோகப் பொறியியல் எனப்படும் மெட்டெலார்ஜிகல் என்ஜினியரிங் படித்தார். அதன்பிறகு எம்.எஸ். படிப்பில் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் படித்தார். பின்னர் எம்.பி.ஏ. படித்தார். அவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் படித்த துறைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத கம்ப்யூட்டர் மென்பொருள் துறையில் இறங்கி கூகுள் குரோம், குரோம் ஒ.எஸ்., கூகுள் குரோம் உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றினார். படித்த படிப்புக்கும் ஒருவரது வெற்றிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இயற்பியல் படித்தார். அதற்குத் தொடர்பு இல்லாமல் விமானவியல் பொறியியல் கற்றார். ஆனால், அவர் புகழ் அடைந்தது அணு ஆயுத ஏவுகணைகளில் தான். ஆகவே, படிப்புக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லை. அதனால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே போய்விடும் என்று அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.

எத்தனை பேர் நிறைய மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் வேண்டாம் என்று பொறியியல் தேர்வு செய்கிறார்கள் என்பது தெரியுமா? இன்னும் நிறைய பேர் நல்ல மதிப்பெண் இருந்தாலும் படிப்பதற்கு பணம் இல்லாமல் கல்வியை கைவிட்டு வேலைக்குப் போகிறார்கள் தெரியுமா? உனக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது. உனக்கு பெற்றோர் உதவுகிறார்கள்.

அவர்களுக்கு நீ ஒரு நல்ல மகளாக உன் கடமையை மட்டும் செய்தால் போதும். அதாவது, நன்றாக படிப்பதும் நன்றாக பரீட்சை எழுதுவதும் மட்டுமே உன்னுடைய வேலை. என்ன மார்க் வரும் என்பது உன்னுடைய கையில் இல்லை. என்ன முடிவு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.’’ என்று ஸ்வேதாவிடம் பேசிவிட்டு அவரது பெற்றோரிடம் பேசினேன்.

‘’உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் கனவு மருத்துவப் படிப்பாக இருக்கிறது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான இடம் ஆயிரக்கணக்கில் கூட இல்லை. எனவே கடுமையான போட்டியை உங்கள் மகள் சந்திக்கிறார். அவரை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை. அதேநேரம், அது அழுத்தமாக மாறிவிடக் கூடாது.

மருத்துவம் இல்லையென்றால் எது கிடைத்தாலும் படித்து ஜெயிக்க முடியும் எனும் வகையில் அவருக்கு நீங்கள் ஆதரவாக நிற்பதை உறுதி செய்ய வேண்டும். தோற்றாலும் ஜெயித்தாலும் உங்கள் பிள்ளையை நேசிக்கத்தான் செய்வீர்கள் என்பதை உணர வையுங்கள். அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் பெற்றோரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்ற பயமே அவளை அழ வைத்திருக்கிறது. இனி அவள் அழுவதும் அழாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு ஸ்வேதா அழவே இல்லை என்று அவளது அப்பா நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

  • எஸ்.கே.முருகன்

மனவள ஆலோசகர், 9840903586

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *