பாராலிம்பிக்ஸ் அட்டகாசங்கள்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்ஹெச் 1) பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகள் குவித்து பாராலிம்பிக்ஸ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் அவனி லெகரா 249.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் 22 வயதான அவனி லெகரா.
ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட இந்திய வீரர் நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21 என்ற செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தினார். முதல் செட்டில் மிகச் சிறப்பாக விளையாடி கைப்பற்றியவர், இரண்டாவது செட்டில் சற்றே பின்னடைவை சந்தித்தார். அதன்பின், மூன்றாவது செட்டில் மீண்டெழுந்து இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.
அதேபோன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் 70.59 மீட்டர் நீளத்துக்கு எறிந்து தனது முந்தைய சாதனைகளை அவரே உடைத்துள்ளார்.
முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்கில் 68.55 மீட்டர் என்ற சாதனையையும், அதன் பிறகு நடப்பு பாரிஸ் பாராலிம்பிக்கின் இன்றைய இறுதிப் போட்டியில் 70 மீட்டர் என்ற சாதனையையும் சுமித் படைத்திருந்தார்.சுமித்தின் 70.59 என்ற சாதனையை மற்ற நாட்டு போட்டியாளர்களால் முறியடிக்க முடியாத நிலையில், அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஊனம் என்பது உடலில் இல்லை என்பதை உடைத்துக் காட்டியிருக்கும் தங்கங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.