எம்.ஜி.ஆரிடம் மதுக் கடை ஆதாயத்தை புறக்கணித்தவர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 123

உடல் ஆரோக்கியமே ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய உண்மையான சொத்து என்ற விழிப்புணர்வு சென்னை மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி மருத்துவமனைகளில் மெகா சீர்திருத்தம் மேற்கொண்டார். அது மட்டுமின்றி குறைந்த செலவில் பயன் தரக்கூடிய ஆயுஷ் மருத்துவ முறையையும் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அதேநேரம், மக்களிடம் குறிப்பாக கூலி வேலை செய்து அன்றாடம் பணம் சம்பாதிக்கும் தொழிலாளர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் குடிப் பழக்கம் அதிகரித்துவருவதை அறிந்து ரொம்பவே அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் தனி மனித ஒழுக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பின்பற்றி புகை, மதுப் பழக்கத்திற்கு எதிராக, ‘மதுப் பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று தீவிர பிரசாரம் செய்து வருபவர் சைதை துரைசாமி.

அதனாலே மதுக்கடை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்த நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம், ‘’நான் உங்கள் வழியில் மதுவை எதிர்த்துப் போராட்டம் நடத்திவருகிறேன். இந்த நிலையில் மதுக் கடையை நான் ஒரு தொழிலாக நடத்தி  பணம் சம்பாதிப்பது முறையாக இருக்காது. எனவே, இதனை நிராகரிக்கிறேன்’’ என்று கூறியவர் சைதை துரைசாமி. மதுவிலக்குக் கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பதற்கு புரட்சித்தலைவரின் பாராட்டு பெற்றவர்.

அதேநேரம் குடி நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துபோன ஏராளமான குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார். 1984 சட்டசபைத் தேர்தலில் சைதாப்பேட்டை உறுப்பினராக வெற்றி அடைந்ததும், மது பிரியர்களுக்கு அதுவும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் மேம்பாட்டுக்காக தன்னுடைய சொந்த செலவில் மது விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கினார். அதன்படி, போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர்கள் மதுவின் பிடியில் இருந்து மீண்டு, ஓர் ஆண்டு காலம் மது குடிக்காமல் இருப்பதற்கான சான்றுகளை வழங்கினால், அவர்களைப் பாராட்டும் வகையிலும் மது அடிமைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு வழங்கினார். அதே வழியில், பெருநகர சென்னை மேயரானதும், மாநகராட்சி மூலம் போதைக்கு அடிமையாகும் மக்களை மீட்பதற்கான வழிகளை ஆய்வு செய்தார்.

போதைக்கு அடிமையான நபர்களை சரியான நேரத்தில் கண்டறிந்து குணப்படுத்தவில்லை என்றால் அவர்களுடைய கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு, உயிர் இழக்கும் அபாயம் உண்டு. வசதி படைத்தவர்கள் குடி நோயாளிகளை மறு வாழ்வு மையங்களில் சேர்த்து பழக்கத்தை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். அந்த சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால் ஏழை மக்களால் அந்த மறு வாழ்வு மையங்களை அணுக முடிவதில்லை. அதனால், குடிக்கு அடிமையாகும் நபர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு தருவது போன்று மறு வாழ்வு மையம் உருவாக்குவதற்குத் திட்டமிட்டார்.

மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி சென்னை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு போதைக்கு அடிமையான ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டன. குடிக்கு அடிமையானவர்கள் மீள்வதற்கு வழிவகை செய்த மேயர் சைதை துரைசாமியின் முன்னெடுப்பு மருத்துவர்களால் பெருதும் பாராட்டப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment