மோடி மன்னிப்பு கேட்க வேண்டியது யாரிடம்..?

Image

சிவாஜி சிலை அபசகுனம்?

மோடி ஆட்சியில் பாலங்கள் உடைவதும், நாடாளுமன்றத்தில் மழை நீர் ஒழுகுவதும், ரோடுகள் சிதைவதும் சர்வசாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியாவின் பெருமை என்று நிலைநிறுத்தப்பட்ட வீர சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியிருக்கிறது. இதுவரை நடந்த எந்த விபத்துக்கும் மன்னிப்பு கேட்காத மோடி, இதற்கு மன்னிப்பு கேட்டிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அந்த சிலை இந்த திங்கட்கிழமை உடைந்து நொறுங்கி விழுந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை விழுந்தால் என்ன ஆகும்? பெரும் அரசியல் அமளி உருவாக்கி இருக்கிறது. மோடி திறந்து வைத்த பாலங்கள், ரயில்கள், கோயில்கள் எல்லாம் இதற்கு முன்பு பாதிப்பு கண்டிருக்கின்றன.

ஆனால், சிவாஜி சிலை என்பது மாநிலத்தின் கெளரவம். எனவே, இதை அபசகுனமாகக் கருதும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.  ‘சிவாஜி காலில் 100 முறை விழத் தயாராக இருக்கிறேன்,’ என்று சொல்லி இருக்கிறார். துணை முதல்வர் ஃபட்னவிஸ் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். தான்தான் திறந்து வைத்தோம் என்பதால் மோடியும் இது குறித்துப் பேசி இருக்கிறார். ‘சத்ரபதி சிவாஜி எங்களுக்கு வெறும் அரசர் மட்டுமல்ல. எங்கள் கடவுள். இந்த சிலை சம்பவத்தால் மனம் புண்பட்டிருக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,’ என்று கூறி இருக்கிறார்.

இத்தனை நாட்களும் மன்னிப்பு கேட்காத மோடி இப்போது இறங்கி வந்திருக்கிறார் என்றால் காரணம் இருக்கிறது. அது, மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது தான்.

குஜராத் கலவரத்தில் தன் ஆட்சியில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் இறந்ததற்கு இன்று வரை அவர் மன்னிப்புக் கேட்கவில்லை. பண மதிப்பிழப்பு எனும் ஒரு மூடத் திட்டத்தை தேச மக்கள் மீது திணித்து ஊரகப் பொருளாதாரத்தை நாசம் செய்ததற்காக கேட்கவில்லை. அந்தத் திட்ட அமுலாக்கத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போனதற்கு கேட்கவில்லை. 2016 முதல் 2021 வரை இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போனதற்குக் கேட்கவில்லை.

வேலையின்மை 45 ஆண்டுகளுக்கு முந்தைய அவல நிலைக்குப் போனதற்குக் கேட்கவில்லை. அதிரடி லாக் டவுனில் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் வெயிலில் நடந்து போனதற்குக் கேட்கவில்லை. இரண்டாம் அலையில் கொத்துக் கொத்தாக செத்த இந்தியர்களின் சாவுக்குக் கேட்கவில்லை.

வட இந்திய விவசாயிகளை இரண்டு ஆண்டுகள் வெயிலில் மழையில் சாலையில் போராட வைத்ததற்குக் கேட்கவில்லை. சிஏஏ சட்டத்துக்காக மாணவர்களையும் போராடிய இந்தியர்களையும் அடித்து உதைத்ததற்குக் கேட்கவில்லை. மணிப்பூர் பெண்களிடம், மல்யுத்த வீராங்கனைகளிடம், கத்துவா, ஹத்ரஸ் பெண்களிடம் கேட்கவில்லை. ஆனால் துருப்பிடித்துப் போய் நசுங்கிய ஒரு உருப்படாத சிலைக்காக மாய்ந்து மாய்ந்து மன்னிப்புக் கேட்கிறார்.

இப்போதும் அவர் சிவாஜி சிலையிடம் மன்னிப்பு கேட்கிறாரே தவிர, மக்களிடம் கேட்கவில்லை. ஏற்கெனவே குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. மீது மகாராஷ்டிரா மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அதற்காகவே மன்னிப்பு நாடகம் போடுகிறார் மோடி.

Leave a Comment