ஞானகுரு பதில்
குழந்தை பெற்றெடுப்பதைவிட, அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்குத்தான் இன்றைய பெற்றோர் மிகுந்த அக்கறையும், சிரமமும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனாலும், எல்லா குழந்தைகளும் பெயர் மூலம் வெற்றி அடைந்துவிடுவதில்லையே அது ஏன்..? ஞானகுருவிடம் கேள்வியை வீசினார் மகேந்திரன்.
புன்னகை சிந்தியபடி பேசத் தொடங்கினார் ஞானகுரு. நீ பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. நீ மல்லிகை என்று பெயர் சூட்டியதால்தான், மல்லிகைப் பூக்கள் அத்தனை மணம் பரப்புகிறதா..? பெயர் என்பது வெறுமனே அடையாளம் காண்பதற்கான ஏற்பாடு, அவ்வளவுதான்.
மனிதனைத் தவிர எந்த உயிரினமும் பெயர் சூட்டிக்கொள்வதில்லை. மேலும் பெயரை வைத்த பெற்றோர்களே அதனை பெரிதாக மதிப்பதில்லை. குட்டி, செல்லம், தம்பி, லட்டு, பாப்பா என்று குழந்தையாக இருக்கும்போது செல்லமாக அழைப்பார்கள். அதன்பிறகு பள்ளியில் ஒரு பட்டப்பெயர் கிடைக்கும். வளர்ந்ததும் மாமா, சித்தப்பா, மதினி, அக்கா, அண்ணன் என்று உறவுச் சொல் கிடைத்துவிடும். வேலைக்குப் போனதும் மேனேஜர், கிளர்க், சூப்பர்வைசர் என்பதுதான் பெயராக அழைக்கப்படும்.
வயதாகிவிட்டால் பெருசு, தண்டம், கிழடு என்பதுதான் அடையாளமாகிவிடும். ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா? உன் உடல் அழிவதற்குள் உன் பெயர் அழிந்துவிடும் என்பதுதான். ஆம், நீ செத்தவுடன் உன்னை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள்.
பாடி எப்ப வரும்..? பாடிய எப்போ எடுப்பீங்க? என்றுதான் கேட்பார்கள். அதுவரை நீ உபயோகப்படுத்திய ஆடை, பாய், படுக்கை எல்லாம் குப்பைக்குப் போய்விடும். அதன்பிறகு நீ திரும்பிவந்தால் பேய், ஆவி என்றுதான் அழைக்கப்படுவாய்.
அதனால், உன் பெயர் நல்லதா அல்லது சரியில்லையா என்று கவலை கொள்ளாதே. எல்லா பெயரும் தற்காலிக அடையாளம்தான். அது, எதுவாக இருந்தால்தான் என்ன..? என்று சிரித்தார்.
இப்போது மகேந்திரனுக்கு முகத்தில் தெளிவு வந்தது..