முதன்முதலாக இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 118

ஏதேனும் நோய் பாதிக்கும்போது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கை பொருளாதார ரீதியில் மிகவும் மோசமடைந்துவிடுகிறது. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் தொகையை மருத்துவத்துக்குச் செலவிட வேண்டிய சூழல் காரணமாக அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. எனவே, நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட நோய் வராமல் தடுப்பதும், நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதும் தான் எளிய மக்களுக்கான தீர்வு என்பதில் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி உறுதியுடன் இருந்தார்.

எனவே, அதிக எண்ணிக்கையில் மருத்துவ முகாம் நடத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி முக்கியத்துவம் கொடுத்தார். மருத்துவ முகாம் என்றாலே வழக்கமான காய்ச்சல், வயிற்று வலிக்கு மாத்திரை, மருந்து கொடுப்பது என்பதை மாற்றி கொடிய நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்கு வழிவகை செய்தார்.

இந்த நேரத்தில், அதிகமான பெண்கள் புற்று நோய்க்குப் பாதிக்கப்படும் அவலம் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. பெண்களைப் பாதிக்கும் அபாயகரமான நோய்களில் மார்பகப் புற்று முதல் இடத்திலும் கர்ப்பப்பை புற்று நோய் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். நிறைய ஏழைப் பெண்கள் புற்று நோய் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், அவர்களை காப்பாற்றுவது சிரமமாக இருப்பதாகவும் தகவல் அறிந்து வருந்தினார்.

பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குடும்பத்தில் மற்றவர்கள் உடல் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதோடு அவர்கள் உடலில் ஏதேனும் கட்டி அல்லது அசாதாரண பிரச்னை ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் முன்வருவதில்லை. அதனாலே, நோய் முற்றும் வரையிலும் அசட்டையாக இருக்கிறார்கள்.

எனவே, சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக  பெண்களுக்கு  மார்பகப் புற்று நோய் மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. பெருமளவு ஏழைகள் வசிக்கும் குடிசைப் பகுதியில் இப்படிப்பட்ட மருத்துவ முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட சைதை துரைசாமியின் செயலுக்கு பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment