• Home
  • அரசியல்
  • துர்கா, கிருத்திகா, இன்பநிதி, சைபர் கிரைம் அட்டாக்

துர்கா, கிருத்திகா, இன்பநிதி, சைபர் கிரைம் அட்டாக்

Image

தி.மு.க.வுக்கு சீமான் கட்சி நெத்தியடி

வருண்குமார் எஸ்.பி., அவரது மனைவி மீது ஆபாசம் மற்றும் அவதூறு குற்றச்சாட்டு சுமத்துவதாக சீமான் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படும் நிலையில், எங்களுக்கு நாகரிகப் பாடம் எடுக்க தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘’கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாமெனவும், மாற்றுக்கட்சித் தலைவர்களை நாகரீகமாக விமர்சிக்க வேண்டுமெனவுமே அண்ணன் சீமான் எங்களுக்கு அறிவுறுத்தித்தான் வளர்த்திருக்கிறார். அதனை மீறி எவரேனும் பேசினால் கண்டிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட செயல்பாடுகளை எப்போதும் கட்சியின் தலைமை ஊக்குவிப்பதில்லை.

ஐயா கருணாநிதி குறித்து எவ்வளவு காத்திரமான விமர்சனம் வைத்தாலும், திமுக குறித்து எவ்வளவு கடுமையாகச் சாடினாலும் அவர்களின் குடும்பம் குறித்து விமர்சித்ததில்லை. அம்மா துர்கா ஸ்டாலின் குறித்தோ, கிருத்திகா உதயநிதி குறித்தோ ஒருநாளும் எங்களவர்கள் விமர்சித்ததும் இல்லை; விமர்சிக்கப் போவதுமில்லை. இன்பநிதி நாளை திமுகவின் தலைமைப் பதவிக்கு வருவாரென்று கூறப்பட்டதாலேயே, அவர் குறித்தான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மற்றபடி, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தெல்லாம் நாங்கள் ஒருநாளும் விமர்சிக்கப் போவதில்லை.

இவ்வாறு எங்களுடைய விமர்சனங்களுக்கு ஒரு நாகரீக எல்லையும், வரம்பும் இருக்கிறது. உணர்ச்சி வேகத்தில் எவரேனும் வரம்புமீறிப் பேசிவிட்டால், அதனைக் கண்டிக்கவே செய்கிறது எங்களது கட்சியின் தலைமை. திமுக அப்படியா? வக்கிரத்தையும், ஆபாசத்தையும் அரசியல் தளத்தில் வெளிப்படையாகக் கட்டவிழ்த்து விடுகிறது. திமுகவின் தொடக்க நிலையில், அறிஞர் அண்ணாவின் காலத்தில்கூட பொதுக்கூட்டங்கள் மாலைநேரப் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன. ஆனால், அதற்குப் பிறகான காலக்கட்டத்தில், ஐயா கருணாநிதி திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தப் பிறகு, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன் போன்ற பேச்சாளர்கள் ஆபாசமாகப் பேசுவதையே தனது பாணியாகக் கொண்டு, மேடைகளில் வக்கிரத்தை அள்ளிக் கொட்டினர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கையாள, அதனை ஒருவழிமுறையாகக் கையாண்டது திமுக. அதன் எச்ச சொச்சம்தான் இன்றைக்கு இருக்கிற சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும், சைதை சாதிக்கும். அண்ணன் சீமான், எங்களது நிர்வாகிகள், பெண் நிர்வாகிகள் என அனைவரது குறித்தும் ஒருமையில் வசைபாடல், ஆபாசமாகப் பேசுதல், தனிநபர் தாக்குதல் தொடுத்தல், குடும்பரீதியாகப் பேசுதல் என அனைத்துவகை அவதூறுகளும், இழிவானப் பரப்புரைகளும் வெளிப்படையாகச் செய்யப்படுகின்றன. அதனை திமுகவின் தலைமை ஊதியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. இதனால், மாற்றுக்கருத்து வைப்பவர்களையும், விமர்சனங்களை வைப்பவர்களையும் கடித்துக் குதறுகிறது

திமுகவின் இணையக் கூலிப்படை. இவர்கள் எல்லாம் சைபர் கிரைம் நடவடிக்கைக்கு ஒருநாளும் ஆளாக மாட்டார்கள். அதுசரி சைபர் கிரைம் தான் ஐ.டி. விங் போல, திமுகவின் ஒரு கிளைப்பிரிவாக மாறிப்போனதே! அப்புறம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? அந்த ஒற்றைத்துணிவில்தானே இணையக் கூலிப்படைகள் கூத்தாடுகின்றன. அந்த கூலிப்படை இன்றைக்கு நாம் தமிழர் கட்சிக்கு நாகரீகப் பாடமெடுப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! சாத்தான் வேதம் ஓதலாமா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இனி, தி.மு.க.வின் ஐ.டி. விங் வேலையை ஆரம்பிக்கலாம்.

Leave a Comment