கருணாநிதி சொத்தை நாட்டுடமை ஆக்குங்க…
அ.தி.முக.வின் நாட்டுடைமை கிண்டல்
கருணாநிதியின் நூல்களை நாட்டுடையாக்கி முதல்வர் ஸ்டாலின், ‘’முத்தமிழ் வித்தகர் கலைஞரின் மூவாத எழுத்துகளை நாட்டுடைமையாக்கி உங்களிடம் ஒப்படைக்கிறோம். கலைஞரின் சிந்தனை ஞாயிறு திக்கெட்டும் எழட்டும்! எல்லோர் கைகளிலும் அவரது எழுத்துகள் தவழ்ந்து அறிவுச் சுடர் வீசட்டும்’’ என்று கூறியிருந்தார்.
அதன்படி கருணாநிதி 75 திரைப்படங்களுக்கு எழுதியிருக்கும் கதை, திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்ட கருணாநிதியின் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள் நாட்டுடைம ஆகியிருக்கின்றன. ஆகவே, இனி இந்த நூல்களை யார் வேண்டுமானாலும் புத்தகமாக்கி விற்பனை செய்யவும், தமிழகம் முழுக்க பரப்பவும் முடியும்.
இந்த விஷயத்தில் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்ட கனிமொழி பெயரும் சட்டப்படி உரிமையாளரான ராஜாத்தியம்மாள் பெயரையும் ஸ்டாலின் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் ஐ.டி. விங் ஆட்கள், ‘’கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும் அளவில் சிறந்த நூல்கள் அல்ல. இவற்றை பள்ளி மாணவர்கள் படித்தால் கெட்டுப் போகவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, கருணாநிதியின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதைவிட அவரது சொத்துகளை நாட்டுடமை ஆக்கினால் கடனைக் கொண்ட தமிழ்நாடு கடனில்லாத நாடாக மாற்றம் பெறும். அவரது பெயரும் ஏற்றம் பெறும்…’’ என்று கூறிவருகிறார்கள்.
இந்த விவகாரம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.