உசேன் போல்ட் சக்சஸ் ஃபார்முலா

Image

ஜஸ்ட் ரிலாக்ஸ்.

உலகின் அதிவேக ஓட்டக்காரர் என்றதுமே உசேன் போல்ட் உங்கள் கண்ணுக்குத் தெரிவார். ஏனென்றால் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர். மின்னல் வீரன் என்று உலக மக்களால் பாராட்டப்பட்டவர்.

நூறு மீட்டர் தூரத்தை 10 நொடிகளில் கடப்பது மனிதரால் சாத்தியப்படாது என்று தான் விஞ்ஞானிகள் உறுதியாகச் சொன்னார்கள். அந்த கருத்தை உடைத்துத் தள்ளியவர். ஓய்வுக்குப் பின்னரும் இவரது வேக சாதனை முறியடிக்கப்படாமலே இருக்கிறது.

அது சரி. அவர் வெற்றிக்குக் கடைப்பிடித்த மந்திரம் என்ன தெரியுமா?

ரிலாக்ஸ். ஆம், ரிலாக்ஸ் அண்ட் வின் எனப்படும் மந்திரத்தைப் பின்பற்றியே இத்தனை சாதனைகளும் படைத்திருக்கிறார் உசேன். இந்த மந்திரத்தைப் பார்க்கும் முன்பு உசேன் வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம். அப்போது தான் இந்த மந்திரத்தின் அருமை தெரியவரும்.

ஜமைக்கா நாட்டின் ஷெர்வுட் கான்டன்ட் நகரத்தில் 1986ம் ஆண்டு வெல்லெஸ்ஸி – ஜெனிஃபர் தம்பதியருக்குப் பிள்ளையாகப் பிறந்தவர் உசேன் செயின்ட் லியோ போல்ட். போல்ட்டின் பெற்றோர் ஊரில் மளிகை கடை நடத்தி வந்தனர். சிறு வயதுகளில் சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதே உசேனின் விருப்பமாக இருந்தது.

பள்ளியில் நடந்த ஓட்டப் போட்டியில் வேகமாக ஓடி வெற்றி பெறத் தொடங்கினார். அவரது வேகத்தைக் கண்ட ஆசிரியர்கள் பிரமித்தார்கள். அவர்களே உசேனை ஓட்டப் போட்டிகளில் இறங்குமாறு ஊக்கப்படுத்தினார்கள். இதனால் தன்னுடைய 15வது வயதில் முதன்முதலில் தடகள போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.  

முதன்முதலில் 2001 கரிஃப்டா விளையாட்டுகளில் பங்கேற்றவர் 400 மீட்டர் ஓட்டத்தை 48.28 நொடியிலும், 200 மீட்டர் பந்தயத்தை 21.81 நொடியிலும் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 21.73 நொடி என்ற வேகத்தில் கடந்தாலும் தகுதி அடையவில்லை.

அடுத்தபடியாக, அவருடைய சொந்த மண் கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002ம் ஆண்டுக்கான உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை அவருடைய முந்தய வேகத்தை விட வேகமாக ஓடி, அதாவது 20.61 நொடியில் கடந்து வெற்றி பெற்றார். அதுவரை யாரும் இந்த வேகத்தில் ஓடியது இல்லை என்பதால் உசேன் வேகம் சாதனையாகக் கருதப்பட்டது. இதையடுத்து 2003ம் ஆண்டு கரிஃப்டா மற்றும் இளையோர் தடகளப் போட்டியில் வென்று சாதனை படைத்தார்.

இந்த நேரத்தில் புதிய பயிற்சியாளர் ஃபிட்ஸ் கோல்மேனின் வழிகாட்டுதலின் கீழ், போல்ட் 2004ம் ஆண்டு புரொஃபஷனல் வீரராக உருவெடுத்தார். 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கவனம் செலுத்தினார். 19.93 நொடிகளில் 200 மீட்டர் தூரத்தை ஓடி 20 நொடிகளுக்குள் 200 மீட்டர் தூரம் ஓடிய முதல் இளையோர் என்ற சாதனையைப் பெற்றார்.

இதையடுத்து பரிசு நிச்சயம் என்ற நம்பிக்கையில் 2004 ஏதென்ஸ் ஒலிமிக் போட்டியில் கலந்துகொண்டார். ஆனால், காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வேகமாக ஓட முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறினார். இதையடுத்து புதிய பயிற்சியாளரான கிளன் மில்ஸ் மேற்பார்வையில் பயிற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கினார். இவர் தான் உசேன் போல்ட் ஓட்டத்தை சீராக்கியவர். இவரது அணுகுமுறையைப் பின்பற்றி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியைத் தொட்டார் உசேன் போல்ட்.

100 மீட்டர், 200 மீட்டர், 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் உலக சாதனை படைக்கத் தொடங்கினார். அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் அதாவது 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பட்டங்களை வென்ற ஒரே ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் மட்டுமே. 4 × 100 தொடர் ஓட்டப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200 மீ, 100 மீ ஓட்டத்தில் இரு தங்கப் பதக்கங்களை வென்றபோது உலகளாவிய புகழைப் பெற்றார்.

பதினொரு முறை உலக சாம்பியனான இவர், 2009 முதல் 2015 வரை தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்றார். 200 மீட்டரில் நான்கு உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற முதல் தடகள வீரர் உசேன் போல்ட் தான். மேலும் 100 மீட்டரில் மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றவர்.

2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர்‌ ஓட்டப்பந்தயத்திலும் முதலி‌டம் பிடித்து தனது நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 2009ல் பெர்லினில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்தார் உசேன் போல்ட்.

2008 ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த நேரத்திலேயே இரட்டைத் தங்கம் வெல்வேன் என்று அறிவித்தார் உசேன். சொன்னது போலவே உசேன்  போல்ட் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் முறையே 9.92 நொ மற்றும் 9.85 நொ நேரங்களில் ஓடி 100மீ இறுதிக்குத் தகுதி பெற்றார். அந்த இறுதிப் போட்டியில் 9.69 நொடிகளில் (அதிகாரப்பூர்வமற்ற நேரம் – 9.683 நொடி) வெற்றியை எட்டி புதிய சாதனை படைத்தார்.

காற்று சாதகமாக வீசாத நிலையில், காலணியின் சரடு சரியாக கட்டப்படாத நிலையில், முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடுவதற்கு வேகத்தைக் குறைத்த நிலையிலும் இத்தனை குறைந்த நேரமே எடுத்துக்கொண்டார். ஆரம்ப வேகத்திலேயே உசேன் போல்ட் ஓடியிருந்தால் 9.52 நொடிகளில் ஜெயித்திருக்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை 19.19 வினாடிகளில் கடந்ததும் தான் இன்று வரை உலக சாதனையாக இருக்கிறது.

2017ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த 100 மீ., ஓட்டத்தில் வெற்றி பெற்ற நேரத்தில் விளையாட்டில் இருந்து விடை பெற்றார் உலகின் மின்னல் மனிதன் உசேன் போல்ட். ஓட்டப் பந்தயம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வரும் மனிதராக மாறிப்போனார் உசேன் போல்ட்.

கிளன் மில்ஸ் சொல்லிக்கொடுத்த டெக்னிக்கை கடைப்பிடித்த காரணத்தாலே வெற்றி கிடைத்தது என்று உசேன் போல்ட் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அது தான் ரிலாக்ஸ் அண்ட் வின்.

100 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது. பந்தயம் தொடங்கியவுடன் அவரது ஓட்டம் மந்தமாக இருக்கும். முதல் 30 மீட்டரில் உடலை முன்னோக்கிச் செலுத்தி, தலையைக் குனிந்தபடி வேகமெடுப்பார். 50 மீட்டரை அடையும்போது போட்டியாளர்கள் நெருங்குவதை நொடிப்பொழுதில் கணித்துவிட்டு வேகத்தை அதிகப்படுத்துவார். கடைசி 40 மீட்டர் சிறுத்தை வேகத்தில் ஓடி இலக்கை அடைவார். பொதுவாக ஒரு தடகள வீரர் 100 மீட்டரைக் கடக்க 45 அடிகள் தேவைப்படும் என்றால் போல்ட்டுக்கு 41 அடிகள் மட்டுமே போதும்.

இத்தனை திறமையாளர் என்றாலும் கடைசி சில நொடிகளில் உசேன் போல்ட் பதட்டத்துக்கு ஆளாவது வாடிக்கையாக இருந்தது. பதட்டம் காரணமாக அவரது உடல் தசைகள் இறுக்கமடைந்து அவரது வேகத்தைப் பாதித்தது. ஆகவே, ஒலிம்பிக் பந்தய வீரர்களுக்கு பயிற்சியளித்த பட் வின்டர் எழுதிய புத்தகமான, ‘ரிலாக்ஸ் அண்ட் வின்’ என்ற டெக்னிக்கை உசேன் போல்டுக்குக் கற்றுக் கொடுத்தார்.

பொதுவாக வெற்றிக் கோட்டைத் தொடும் ஒவ்வொரு நபருக்கும் அப்போது கூடுதல் பரபரப்பு, பதட்டம், வேகம் கொள்வது இயல்பு. அதனை அப்படியே உல்டாவாக மாற்றி கடைசி நொடிகளில் ரிலாக்ஸ் ஆகும் வெற்றி மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.

அதாவது கடைசி நேரத்தில் கடுமையாக முயற்சி செய்வதை நிறுத்திவிட்டு, உடலை நன்கு தளர்த்துவதற்கு சொல்லிக்கொடுத்தார். இந்த ரிலாக்ஸ் பயிற்சியை தொடர்ந்து செய்யத் தொடங்கிய உசேன் போல்டுக்கு கடைசி நொடிகளில் உடல் முறுக்கேறுவது நின்று போனது. வெற்றிக் கோட்டுக்கு அருகே வந்ததும் காற்றில் மிதந்து செல்வது போன்று ரிலாக்ஸாக பறந்து சென்று வெற்றிக் கோட்டைத் தொட்டார். அதனாலே, ஓய்வு அறிவிக்கும் வரையில் யாராலும் வெல்ல முடியாத வீரனாகவே இருந்தார் உசேன் போல்ட்.

ஆரம்பிக்கும் நேரத்தில் 10 சதவிகித அழுத்தமும் கடைசி நொடிகளில் 90 சதவிகித அழுத்தமும் உடலுக்குக் கொடுக்கும் முறையை முற்றிலும் மாற்றி, ஆரம்பிக்கும் நேரத்தில் 90 சதவிகித அழுத்தமும் கடைசி நொடிகளிலும் உடலுக்கு 10 சதவிகித அழுத்தம் மட்டுமே கொடுத்தார் உசேன்.

உசேன் போல்ட் வெற்றி அடைந்த அத்தனை போட்டிகளின் வீடியோக்களையும் நிதானமாக ஓடவிட்டு இப்போதும் இந்த ரிலாக்ஸ் ஓட்டத்தைப் பார்க்க முடியும். மற்ற போட்டியாளர்கள் கடுமையாக வேகத்துடன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு ஓடி முந்துவதற்கு முயற்சிக்கையில், உசேன் போல்ட் மட்டும் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பவர் போன்று கடைசி நொடிகளில் ரிலாக்ஸாக ஓடி வெற்றிக் கோட்டைக் கடந்து செல்வார்.

இந்த வெற்றி டெக்னிக் எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால், அதனை கடைப்பிடிப்பதே கடினம். உசேன் போல்ட் இதனை தன்னுடைய பாணியாக எடுத்துக்கொண்ட காரணத்தாலே அசத்தலான வெற்றி அடைய முடிந்தது.

இதனை உங்கள் வாழ்க்கையிலும் கவனிக்க முடியும். கடைசி நேரங்களில் பரபரப்பம் பதட்டமுமாக செயலாற்றுபவர்கள் யாரும் வெற்றி அடையவே மாட்டார்கள். பரீட்சை ஹாலுக்குள் நுழையும் கடைசி நிமிடம் வரையிலும் படித்துக்கொண்டே இருப்பவர்களையும், பதட்டமில்லாமல் பரீட்சை எழுதுபவர்களையும் கவனித்துப் பாருங்கள். பதட்டமில்லாதவரே அதிக மதிப்பெண் பெறுபவராக இருப்பார்.

பயணம், பரீட்சை மட்டுமின்றி வாழ்வின் எல்லா சூழலிலும் இந்த ரிலாக்ஸ் மந்திரத்தை கடைப்பிடித்துப் பாருங்கள். வெற்றி நம்மை தொட்டுச்செல்லும்.

ஜஸ்ட் ரிலாக்ஸ்.

Leave a Comment