பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 112

மேயர் பதவிக்கு வழங்கப்படும் பிரத்யேக கார், ஊழியர்கள், தொலைபேசி போன்ற அத்தனை சலுகைகளையும் மறுத்த சைதை துரைசாமியை அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஏனென்றால், அரசு பதவியில் இருந்துகொண்டு என்னவெல்லாம் சாதித்துக்கொள்ள முடியும், எப்படியெல்லாம் சுருட்ட முடியும் என்று யோசிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், சொந்த செலவில் சேவை செய்யும் ஒருவர் இருக்கிறார் என்பதே மக்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

நிறைய அரசியல்வாதிகள் அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்யாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்கள் என்றாலும், அரசு பணிகளுக்கு சொந்தப் பணத்தை யாரும் செலவழித்தது இல்லை. ஆகவே, இந்த வகையில் புரட்சித்தலைவரைப் போலவே சைதை துரைசாமியும் ஒரு தனிப்பிறவியாக அடையாளம் காட்டப்பட்டார்.

இன்னொரு வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவையும் ஆச்சர்யப்படுத்தினார் சைதை துரைசாமி. மேயராக சைதை துரைசாமி இருந்த காலகட்டத்தில் அரசு முறை பயணமாக சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு அவசியம் ஏற்பட்டது. அதற்கான விமானப்பயணத்துக்கு டிக்கெட், தங்கும் இடம் உள்ளிட்ட அத்தனை செலவுகளையும் தன்னுடைய சொந்த செலவில் மட்டுமே மேற்கொள்வேன் என்று சைதை துரைசாமி உறுதியாக இருந்ததைக் கண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். அரசு முறையில் உள்நாட்டுப் பயணமாக டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்ததற்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழங்கப்படும் பயணப்படியையும் முழுமையாக நிராகரித்தார் சைதை துரைசாமி.

2015ம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் தலைமையில் மேயர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் மேயரை தேர்வு செய்வதற்கு ஆய்வு நடத்தப்பட்டது. சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வை, தெளிவான திட்டமிடல், கடுமையான உழைப்பு மற்றும் சொந்த செலவில் அரசுப் பணி மேற்கொள்ளும் நேர்மை போன்றவை பிரதமர் நரேந்திரமோடிக்கு எடுத்துக் கூறப்பட்டதன், அடிப்படையில், சைதை துரைசாமி அந்த மேயர் மாநாட்டில் கலந்துகொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.  

இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் முன்னிலையில் சீன நாட்டின் சொங்சிங் மாநகராட்சி மேயர் ஹூவாங் சிஃபான் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை தன்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment