காதலை ஜெயிக்க எளிய வழி இதோ…

Image

முதலில் பெற்றோரை காதல் செய்யுங்கள்


‘காதல் தோன்றுவதற்கும் மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது. அது, மேன்மையுறுவதும் மலினப்படுவதும் சம்பந்தப்பட்ட நபர்களைச் சார்ந்ததே’ என்பார், எழுத்தாளர் ஜெயகாந்தன். ஆம்,  இன்றைய 90 சதவிகித காதல், மிகவும் அற்பமான காரணங்களில் தோன்றி, அற்பமான காரணங்களால் மரணித்துவிடுகிறது.

காதல் ஓர் இயற்கையான உணர்வு என்பதால் , இது வயது வித்தியாசம், அந்தஸ்து, சாதி, மதம் என்று எதையும் பார்த்து வருவதில்லை.  காதல் வந்துவிட்டால் போதும்,  அது கண்ணை மறைத்துவிடும். அதாவது, எது சரி, எது தவறு என்றே தெரியாமல் போய்விடும். மேலும், காதலை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்களை எதிரியாகவே பார்க்கவைக்கும். அது, பெற்றோராக இருந்தாலும் சரிதான்.

காதல் செய்வது பெரிதல்ல, அந்த காதலை திருமணமாக மாற்றுவதும், அதன்பின்னர் அன்பான தம்பதியராக வாழ்ந்து காட்டுவதிலும்தான் வெற்றி இருக்கிறது. ஆனால், எதிர்ப்புகளை மீறி திருமணம் முடிப்பதுதான் காதலில் வெற்றி என்று பலரும் நினைக்கிறார்கள். அதனால்தான், காதலை மற்றவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்வதில்லை. பெற்றோரையும் பிரியமானவர்களையும் இழந்து அனாதையாகிவிடுகிறார்கள். சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து கண்ணீரும் கம்பலையுமாகி நிற்கிறார்கள்.

இன்று பெரும்பாலான காதல் பணம், ஆடை, பதவி, கவர்ச்சி போன்றவற்றைப் பார்த்துத்தான் உருவாகிறது. இப்படி வரும் காதல் நீண்ட நாள் நீடிக்காது. தங்கள் உடல் தேவை அல்லது பணத் தேவை தீர்ந்ததும் காதலும் காணாமல் போய்விடும்.

ஏன் காதலில் விழுகிறார்கள் தெரியுமா? இவரை அல்லது இவளை திருமணம் செய்துகொண்டால் என்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்தான் பலரை காதல் செய்யத் தூண்டுகிறது. இப்படி நினைப்பது காதல் அல்ல. காதல் எதுவென தெரியுமா? தன்னைவிட, தான் விரும்பும் நபர் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பதுதான் உண்மையான காதல். அப்படியொரு காதல் உள்ளத்தில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

காதல் என்பதே சந்தோஷமாக வாழ்வுக்காகத்தான். அந்த சந்தோஷம் காதலிப்பவருக்கு மட்டுமல்ல, அவரை சுற்றியிருக்கும் நபர்களுக்கும் கிடைக்க வேண்டும். பெற்றோர் சம்மதிக்க மறுத்தால், அவர்கள் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் காதல் உண்மையானது என்றால், நியாயமானது என்றால் நிச்சயம் பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்வார்கள். எந்த பெற்றோரும் தன்னுடைய பிள்ளை கண்ணீர் கடலில் தத்தளிக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள். அதனால் காத்திருங்கள். பெற்றோருக்கு மதிப்பு கொடுத்து காத்திருங்கள். பெற்றோரை காதல் செய்பவரால் மட்டுமே, நல்ல காதலனாகவும், நல்ல காதலியாகவும் இருக்க முடியும்.

ஆகவே, காதலை புரிந்துகொள்ளும் முன்பு பெற்றோரை புரிந்துகொள்ளுங்கள். அப்போது காதலும் புனிதமாகிவிடும்.

எஸ்.கே.முருகன்

மனவள ஆலோசகர்

9840903586

Leave a Comment