யுவராஜ் என்றொரு போராளி

Image

சினிமா வரப்போகுது

கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோரின் பயோபிக் வரிசையில் இப்போது யுவராஜ் சிங் திரைப்படம் வெளிவர இருக்கிறது. மற்ற வீரர்களை விட யுவராஜ் சிங்கிற்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது, அது அவர் களத்தில் மட்டுமல்ல, நோயை எதிர்த்தும் போராடி வென்றவர் என்பது தான்.

ஒரே  ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தவர், யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர். 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கும் காரணமாக இருந்தவர், யுவராஜ் சிங்தான். அந்த தொடரில்  362 ரன்கள் குவித்ததுடன், 15 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கும் முக்கியப் பங்கும் வகித்தார்.

 உலக கோப்பை வெற்றிக்குப் பிறகுதான்,  புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த தகவல் அறிந்து ஒட்டுமொத்த உலகமும் அதிர்ந்து நின்றது. ஆனால், தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்துநின்று,  சிகிச்சை எடுத்துக்கொண்டு அணிக்கு திரும்பியவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதுடன், அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியும் அளித்துவருகிறார். அவரைப் பற்றிச் சில குறிப்புகள்…


1981ம் ஆண்டு சண்டிகரில், யோகராஜ் சிங்கிற்கு மகனாகப் பிறந்தவர் யுவராஜ் சிங். இளமையிலேயே டென்னிஸ் மீதும், ஸ்கேட்டிங் மீதும் ஆர்வமாய் இருந்தார். தன் இளம் வயதிலேயே  பன்முக திறமைகளைக் கொண்ட இவர், தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வுபெற்ற இவரது தந்தை,யோகராஜ் சிங் விருப்பத்தின்பேரில் தனது கவனத்தை கிரிக்கெட்டில் செலுத்தத் தொடங்கினார், பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தில் விளையாடிய யுவராஜ் சிங், ரஞ்சி கோப்பை போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பீகார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பங்குபெற இடம்கிடைத்தது. மேலும், 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சீனியர் அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் (2000) தொடர் நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல மிகப்பெரிய பங்காற்றினார். 2002இல் நடைபெற்ற நாட்வெஸ் சீரிஸ்தான் அவரை, மிகப்பெரிய நட்சத்திர வீரராக மாற்றியது.
சர்வதேச போட்டியில் பேட்டிங் பிடித்த முதல் ஆட்டத்திலேயே, அரை சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் 27 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார்.
மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனாக களமிறங்கும் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் தனது வேகம் குறைந்த இடதுகை சுழற்பந்து வீச்சு மூலம், சர்வதேச அரங்கில் 148 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 161 இன்னிங்சில் பந்துவீசி 111 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.
யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்றாண்டுகள் கழித்து வங்கதேச அணிக்கு எதிராக முதல் சதத்தை எடுத்தார். 2007-ல் டிராவிட் விலகியபிறகு தோனி கேப்டனாகவும், யுவராஜ் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
2011 உலகக்கோப்பையை இந்தியாவை இறுதிவரை அழைத்து வந்ததில் மிகப்பெரிய பங்கு அவருடையது. 2011 உலகக்கோப்பைக்கு பிறகு, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் தாக்கத்தால் தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டியதாய் போயிற்று. யுவராஜ் இல்லாத இந்திய கிரிக்கெட்டை, ரசிகர்களால் மட்டுமல்ல, யுவராஜின் உற்ற நண்பர்களான கவுதம் கம்பீர், சேவாக் போன்றோரால்கூட நினைத்துப் பார்க்கமுடியவில்லை.
அவருக்கு நடைபெற்ற மருத்துவச் சோதனையில்  லங் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதனால், யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் வழக்கம்போல் நம்பிக்கையை விடவில்லை யுவராஜ். கீமோதெரபி ட்ரீட்மென்ட் முடிந்து, தனது விடாமுயற்சி மூலம் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்துவைத்தார் யுவராஜ். பின்னர் புற்று நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு  உதவ விரும்பி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ” யூ வி கேன் ” (YOU WE CAN) – ஐ நிறுவினார்.
புற்றுநோய் குறித்துப் பேசிய யுவராஜ், ‘உலகக்கோப்பை 2011 உச்சத்துக்குப் பிறகே கேன்சர் என்ற நோய் என்னுடைய மகிழ்ச்சியை மொத்தமாக அழித்தது. என் வாழ்க்கையில் அது இருண்ட காலம். உலகக்கோப்பையை வென்றோம், அதில் நான் தொடர் நாயகன் மலையின் உச்சியில் இருந்தேன். கேன்சர் என்றவுடன் அப்படியே அதலபாதாளத்தில் விழுந்தேன். ஆனால் இதுதான் லைஃப், நாம் எதிர்பாராதது நிகழும். இதில் நமக்கு சுயவிருப்பத் தெரிவு என்பது கிடையாது’ என்றார்.
புற்றுநோய் பாதிப்புக்குப் பின் ஆறு ஆண்டுகள் கழித்து யுவராஜ் சிங், ஒரு போட்டியில் சதமடித்து அசத்தினார். அதுவே, அவரது கடைசி சதம். அந்த போட்டியில் அவர் எடுத்த 150 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ரன்னும்கூட.
30 வயதிலேயே 250 -க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருத்த யுவராஜ் சிங் புற்றுநோய் பாதிப்புக்கு பிந்தைய இன்னிங்சில் விளையாடிய போட்டிகளோடு சேர்த்து 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி  இதில் 14 சதம், 52 அரை சதம் சதம் உள்பட 8,701 ரன்கள் எடுத்துள்ளதுடன், 111 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
யுவராஜ்சிங் 40 டெஸ்டில் விளையாடி 3 சதம் உள்பட 1,900 ரன்கள் எடுத்துள்ளார். 58 இருபது ஓவர் போட்டியிலும் விளையாடி உள்ளார். 2011-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம்கண்டதே யுவராஜின் கடைசி டெஸ்ட் போட்டி..2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 39 ரன்கள் எடுத்ததே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
2018ஆம் ஆண்டு ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  ஒரு சிறுவனைச் சந்தித்த யுவராஜ் சிங், ‘நானும் உன்னைப்போல்தான் இப்போது மீண்டு வந்துள்ளேன். நீயும் வருவாய். தைரியமாக இரு’ என்று கூறி பஞ்சாப் அணியின் ஜெர்சி, தொப்பி போன்றவற்றை பரிசாக அளித்து, உடல்நலம் தேறி வருவதற்காக வாழ்த்தையும் கூறி யுவராஜ் அனுப்பிவைத்தார்.
யுவராஜ் சிங், ஐ.பி.எல்லிலும் ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரராக திகழ்ந்தார். அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போட்டன. ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மிகச் சில வீரர்களில் யுவராஜும் ஒருவர்.
ஓய்வு குறித்து யுவராஜ், ‘போராடுவது, வீழ்வது, அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்கு கற்றுத் தந்துள்ளது’ என்றார்.
ஓய்வுக்குப் பிறகு பேசிய யுவராஜ், ‘கங்குலி தலைமையில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன். இவரிடமிருந்து நிறைய ஆதரவு கிடைத்ததால், சாதிக்க முடிந்தது. அதன்பின் கேப்டனாகச் செயல்பட்ட டோனி, கோலியிடம் இதுபோன்ற ஆதரவு கிடைக்கவில்லை’ என்றார்.
ஓய்வுக்குப் பிறகு யுவராஜ் சிங், கேன்சரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதுடன், அவர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறார். யுவராஜ் ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு வாழ்த்து தெரித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,  ‘அணிக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் உண்மையில் ஒரு சாம்பியன் வீரராக திகழ்ந்தீர்கள். களத்துக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி உங்களின் ஏற்ற இறக்க வாழ்வில் மிகப்பெரிய அளவில் போராடினீர்கள்’ என்றார்.
 ‘நான் எப்போதும் என்னை நம்புவதை நிறுத்தியதில்லை…எப்போதும் உங்களை நம்புங்கள்’ என்பதே அவருடைய தன்னம்பிக்கை வார்த்தை.

Leave a Comment