சிவ்தாஸ் மீனா மாற்றத்தின் பின்னணி
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பு தனக்கு நம்பிக்கையான ஒருவரே தலைமைச் செயலராக பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமைச் செயலர் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக பேசப்படுகிறது.
கருணாநிதி நினைவு நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் தலைமைச் செயலராக இருந்த சிவதாஸ் மீனா நன்றி உரை நிகழ்த்திய சில மணி நேரத்தில் அவர் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து முதல்வரின் தனிச் செயலராக இருந்த நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழகத்தின் 50வது தலைமைச் செயலர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். 2021-ல் திமுக அரசு அமைந்த பிறகு இரண்டு ஆண்டுகள் நிதித் துறை செயலாளராக இருந்தவர். முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தொழில்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். அதே போல போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளிலும் செயலராக பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த நிலையில் முருகானந்ததிற்கு பல கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் சீமானும் பலமான வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா முருகானந்தம் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஐயா முருகானந்தம் அவர்களின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.
தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தலைமைச்செயலாளராக ஐயா முருகானந்தம் அவர்களின் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும். தத்துவ அறிஞர் ஐயா இறையன்பு அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச்செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்’’ என தெரிவித்துள்ளார்.
கருணாநிதி விழாவில் பா.ஜ.க.வின் பாராட்டைப் பெற்றுள்ள ஸ்டாலின் இப்போது சீமானின் பாராட்டையும் பெற்றுள்ளார். தமிழக அரசியலில் சூறாவளி சுற்றியடிக்கிறதே.