கால்கட்டு போதாது, என்கவுண்டர் எப்போது?
பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட என்.சி.சி. முகாமில் 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் நாம் தமிழர் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுக்க எரிமலையாக வெடித்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி.) முகாம் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மாணவியை சமாதானப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.
இந்த நிலையில் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் என்.சி.சி. முகாமில் நடந்த சம்பவம் குறித்து கூறியதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியை சேர்த்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
உடனடியாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ-யான சூர்யகலா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதையடுத்து, தனியார் பள்ளியின் முதல்வரான திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜெனிபர் (35), பள்ளியின் தாளாளரான கந்திகுப்பத்தைச் சேர்ந்த சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளர்களான தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கொள்ளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (39),கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சேர்ந்த பெண் சத்யா (21), பர்கூர் ஒரப்பம் அருகே உள்ள சின்ன ஒரப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (54), மற்றொரு ஆசிரியரான கோமதி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவராமன் (28) என்பவரை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.
சிவராமனை போலீஸார் விசாரணைக்காக கோவையிலிருந்து அழைத்து வந்தபோது, அவர் தப்பியோட முயன்றதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கில் தலைமறைவாக உள்ள சுதாகர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
8-ம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும், சம்பவத்தை மறைத்து அதற்கு உடந்தையாக பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் இருந்ததும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பயிற்சிக்கு சென்ற 17 மாணவிகளில் 13 மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக கொடூர தண்டனை வழங்க வேண்டும். சிறுமிகள் வாழ்வுடன் விளையாடும் அயோக்கியர்களுக்கு காலில் மாவுக்கட்டு போதாது, என்கவுண்டர் நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.